PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, November 09, 2005

பணம்தான் வெற்றியா?

ஜெயமே ஜெயம் - 8
சமீபத்தில் எனது கல்லூரித் தோழர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு Get-together - க்காக ஏற்பாடு செய்தோம். அனைவருக்கும் குடும்பத்தோடு வர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 6 வருடங்களுக்குப் பின் சந்திக்கும் சந்திப்பு. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு பெரிய உணவகத்தில் சந்திப்பிற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அலுவலகம் விட்டுக் கிளம்பி அவசர அவசரமாக அந்த சந்திப்பிற்கு கிளம்பினேன். முகத்தில் பரவசம், உற்சாகம், பல சிந்தனைகள். அந்த உணவகத்தின் புல்வெளியில் வட்டமாக இருக்கைகள் போட்டு நண்பர்கள் அமர்ந்து இருந்தனர். ஒவ்வொருவராக முன் வந்து தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

மனதிலோ மிக்க மகிழ்ச்சி, யாரிடம் பேசுவது என்றே தெரியவில்லை. அனைத்தும் கல்லூரி முகங்கள். 6 வருடத்திற்கு பின்னான சந்திப்பு . எப்படி இருக்கும் என்று மனதில் கற்பித்து கொள்ளுங்கள். விவேக் பாணியில் ஹாய்! ஹாய்! ஹாய்! என்றபடி ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தேன். சும்மா சொல்லக்கூடாது நண்பர்கள் பெரிய பெரிய MNC ல் நன்றாகவே செட்டில் ஆகியிருந்தார்கள். கேலியும் கிண்டலுமாக பழைய கல்லூரி வாழ்க்கைபோல் அந்தக் கூட்டம் சென்று கொண்டு இருந்தது. ஆனால், ஒவ்வொருவரும் பேசுகையில் அவர்களது பேச்சில் முதிர்ச்சி/அனுபவம் தெரிந்தது.

ஆனால்! நாங்கள் எதிர்பார்த்த சிலர் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. சிலர் உண்மையான தவிர்க்க முடியா காரணங்களால் வரவில்லை. சிலர் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே வரவில்லை. அந்த காரணத்தை அறிய முற்படுகையில்தான் மேற்சொன்ன தலைப்பு மனதில் பட்டது.

நம்மில் பலருக்கு பொறாமை உணர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மை என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சின்ன சின்ன விசயங்களில் இருந்து சிலவற்றை பார்ப்போம்.

உலகில் தினமும் யாராவது ஒருத்தருக்கு லாட்டரியில் கோடி கோடியாக பரிசு கிடைக்கிறது. அதைச் செய்தியாகப் பார்க்கும் நம்மவர்கள் "அவன் கொடுத்து வச்சவன்ப்பா, மச்சக்காரன்பா " என்பதோடு அந்த நிகழ்ச்சியை மறந்து போவார்கள். இதே பரிசு , பக்கத்து வீட்டுக்காரனுக்கோ அல்லது பங்காளிக்கோ விழட்டும், அவ்வளவுதான் , இவன் காதில் இருந்து புஸ்வானமே வந்துவிடும். கரித்துக் கொண்டே இருப்பான். இவனுக்கு தூக்கமே போய் விடும். ஏன் இப்படியொரு மன நிலை?

சிலர் இருக்கிறார்கள்.. தன்னைவிட தன் நண்பன் அதிகம் சம்பாதிக்கின்றான் என்றால். அவனை தவிர்க்க முயலுவார்கள். ஏதோ விரோதி போல் பார்ப்பார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள் ..தான் தன் நண்பனை விட அதிகம் சம்பாதிக்கிறேன் என்பதை தங்கள் டாம்பீகம் மூலம் பறைசாற்றிக் கொண்டு இருப்பார்கள்.

பொது நிகழ்ச்சிக்கோ, திருமணம் போன்ற வைபவங்களுக்கோ ஏன்? கோவிலுக்குச் செல்லும் போது கூட.... பட்டாடை மற்றும் கோட்டு சகிதம் வருபவர்களுக்கு ஒரு மரியாதையும் , சாதாரண உடையில் செல்பவனுக்கு ஒரு மரியாதையும் கிடைக்கிறது. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதை எல்லாம் காற்றில் பறக்க விடும் வகையில் இதில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம் என்று பிரிவுகள் வேறு வைத்திருக்கிறார்கள். நான் விளையாட்டாய் சொல்கையில் "இந்த உலகில் மனுசனுக்கு மதிப்பில்லைப்பா, அவனோட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்க்குதான் அதாவது அவனோட உடை, நகை, கார், வீடு, பணம் இதற்குத்தான் மரியாதை" என்பேன்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லைதான். ஏன் மனிதன் இப்படி பணத்திற்கு ஆளாய்ப் பறக்கிறான்? எல்லாம் ஆசை மற்றும் தேவைகள்தான் காரணம். அப்படியானால் பணம் என்பதுதான் வெற்றியா? என்ற கேள்வி எழும்? பணம் வெற்றியில் ஒரு குறிப்பிட்ட பங்கு வகிக்கிறதே தவிர, முழுதும் அதுவே காரணம் இல்லை.

ஆயிரம் சம்பாதிப்பவனுக்கு நூறில் கடன்; லட்சம் சம்பாதிப்பவனுக்கு பல ஆயிரங்களில் கடன், கோடி சம்பாதிப்பவனுக்கோ பல இலட்சங்களில் கடன்!

"ஏன்? நாடே கடன் வாங்குகிறது; நான் வாங்கினால் என்ன?" என்று வேதாந்தம் பேசுபவர்களும் உண்டு. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதில் கடன் இல்லாமல் இருப்பவன்தானே மிகப் பெரிய கோடீஸ்வரன். பல கோடிகளுக்கும் அதிபதியாய் இருப்பவர்களில் பலர் தூக்கமின்மையால் அவதியுற்று மாத்திரைப் போட்டு தூங்குகிறார்கள். இது இவர்களுக்கு உண்மையான வெற்றியா?

அன்பர்களே நான் பணம் பண்ணுவதை தவறு என்று சொல்லவே மாட்டேன். நிம்மதியான முறையில் பணம் பண்ணுகிறோமா என்பதுதான் முக்கியம். அந்த பணத்தை எப்படி சேமிக்கிறோம்? எப்படி செலவு செய்கிறோம் என்பதிலும் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.

நம்மை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். வெளியில் இருந்து ஒருவர் வந்து இது சரி, இது தப்பு என்று நமக்கு எதையும் சுட்டிக் காட்டத் தேவையில்லை. நாம் செய்யும் செயல் சரியா? தவறா? என்பதை நம் மனமே நமக்கு உணர்த்தும். அந்த உணர்த்தும் வேளைதனில் , மனதை உதாசீனப்படுத்தாமல் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்.

நமக்கு சொந்தமில்லாத நம் உழைப்பினால் பெறப்படாத எந்த செல்வமும் நிலைத்து நிற்பது இல்லை. இதை ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தில் கண்டிருப்பார்கள்.

இங்கே "லஞ்சம்" வாங்குதல் மற்றும் கொடுத்தல் பற்றி கொஞ்சம் அலசுவோம். இந்த இரண்டு காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் இன்பம் நிலைத்து இருப்பதில்லை.

சில அரசாங்கத்துறையில்(பெயர் குறிப்பிட விரும்ப வில்லை) ஏகப்பட்ட லஞ்ச ஊழல்கள் இருப்பதை நாம் அறிவோம். அவர்களது வாழ்க்கையின் பின் பகுதியை விசாரித்துப் பார்த்தால் மிக மோசமாக இருக்கும். சிலருக்கு மணவாழ்க்கை படு பாதாளமாக அமைந்திருக்கும். சிலரோ தீரா வியாதிக்காரர்களாக டாக்டரிடம் தினமும் ஓடிக்கொண்டு இருப்பார்கள். சிலரது குழந்தைகள் தவறான பாதைகளில் சென்று இவருக்கு அவப்பெயரை உண்டாக்கிடுவர். சிலருக்கு மனோவியாதி பீடித்திருக்கும். இன்னும் பல சொல்லலாம். அந்நியன் படத்தில் கொடுக்கப்படும் தண்டனை போல் கடுமையாகத்தான் இவர்கள் வாழ்க்கைச் சென்று கொண்டு இருக்கும். இதெல்லாம் தவறான வழியில் வந்த செல்வம் தரும் தண்டனைதான்.

இன்பம் துன்பம் அனைவருக்கும் பொது எனினும், இறைவன் இப்படிப்பட்டோர்க்கு பல பிரச்சனைகளின் மூலம் நல்ல பாடம் புகட்டுகிறான். புரிந்தவர்கள் தவறு செய்வதில் இருந்து விழித்துக் கொள்கிறார்கள். புரியாதவர்கள் அதிலேயே மாண்டும் போகிறார்கள்.

ஆக, பணம் என்பதில் நேர்மை, நியாயம் என்பது இருக்கும் பட்சத்தில்தான் அது உண்மையான மகிழ்ச்சியாய் இருக்கும். உண்மையான வெற்றியாய் இருக்கும். இல்லை எனில் தொல்லைதான்.
Image hosted by Photobucket.com
ஜெயமே ஜெயம் தொடரும்..

9 Comments:

  • At 1:31 PM, Blogger NambikkaiRAMA said…

    ஊதியத்திற்கு மேற்பட்ட உழைப்பே வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம்.

     
  • At 2:16 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    //ஆக, பணம் என்பதில் நேர்மை, நியாயம் என்பது இருக்கும் பட்சத்தில்தான் அது உண்மையான மகிழ்ச்சியாய் இருக்கும். உண்மையான வெற்றியாய் இருக்கும். இல்லை எனில் தொல்லைதான்.//
    நல்லா சொன்னீங்க... எனக்கும் இதில் முழு உடன்பாடு உண்டு... ஆனா மற்ற நண்பர்கள் எப்படி நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. சீக்கிரமே get-togetherக்கு ரெடி பண்ண சொல்லணும். பணமென்பது இப்பொழுதெல்லாம் எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. மற்றவர்களிடம் சொன்னால் திருமணம் ஆனால் தெரியும் என்று சொல்கிறார்கள். அதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை. இருந்தாலும் இன்றளவில் சந்தோஷமாக இருக்கிறேன்.

     
  • At 2:22 PM, Blogger NambikkaiRAMA said…

    கணேஷ் நிறைய நல்ல பதிவுகள் மூலம் கலக்குறீர்கள்.
    //திருமணம் ஆனால் தெரியும் //
    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் நம்மிடம்தான் இருக்கிறது. "நாம ஒழுங்கா இருந்தா நமக்கு வரப்போறவளும் ஒழுக்கமாய் இருப்பா"
    இது நான் எனது கல்லூரி வாழ்க்கையில் அடிக்கடி சொன்னது. எனது திருமணவாழ்க்கை மிக மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

     
  • At 5:01 PM, Blogger rnatesan said…

    good raman,

    my query is that whether the unattended are having knowledge about your blog?
    but 'manaivi amaivathellam iraivan kodutha varama illaiya?
    (still learning to tamil)
    rnat.

     
  • At 6:31 PM, Blogger NambikkaiRAMA said…

    //manaivi amaivathellam iraivan kodutha varama illaiya//
    உண்மைதான் அன்பரே!
    வரம் யாருக்கு கிடைக்கும் தவம் இருந்தவனுக்குத்தானே கிடைக்கும்!
    ஆக தவமிருங்கள் வரன்(ம்) கிடைக்கும்.

     
  • At 7:57 PM, Blogger தாணு said…

    பணத்தின் அடிப்படையில் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை எடை போடுபவர்கள் மனமுதிர்ச்சியற்றவர்களே. எந்த நிலையிலும் சந்தோஷமாக இருக்கத் தெரிந்தவன் தான் வெற்றி பெற்றவன், இல்லையா?

     
  • At 3:46 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    Rama heard that u r blessed with a little angel. Wishes for the same :-))

     
  • At 10:43 AM, Blogger அ. பசுபதி (தேவமைந்தன்) said…

    சிறப்பாக உள்ளது.
    தங்களின் முந்தையதொரு பதிவுக்குப் பின்னூட்டமிட்டதுடன், புதுவையிலிருந்து வெளிவரும் 'வெல்லும் தூயதமிழ்'என்ற இதழின் "அலைவாயில்களில் தமிங்கிலம்" என்ற கட்டுரையிலும் சுட்டியிருந்தேன். அது 'கொடைக்கானல்' என்ற வலைப்பதிவில் பதிவிடப்பெற்றுள்ளது எனவும் அறியவந்தேன். பார்த்தீர்களா?

     
  • At 12:00 PM, Blogger NambikkaiRAMA said…

    அன்பர் பசுபதி அவர்களே தற்போதுதான் அதை பார்த்தேன். தாங்கள் எனக்கு கொடுக்கும் அங்கீகாரத்திற்கு மிக்க நன்றி. உங்கள் "வெல்லும் துயதமிழ்" வெல்ல வாழ்த்துக்கள்.

     

Post a Comment

<< Home