PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Saturday, March 06, 2010

தேனாம்பேட்டை TNEB

நான் தற்போது வாடகைக்கு குடியிருக்கும் அபார்ட்மெண்ட் ஓனர் ரொம்ப நல்லவர். மற்றவர்கள் மாதிரி யூனிட்டுக்கு ரூ 4 , ரூ 5 என்று வசூல் செய்யாமல். மின்கட்டண அட்டையில் என்ன வருகிறதோ அதை நீங்களே நேரடியாகக் கட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னதில் நான் ஆச்சரியப்பட்டு போனேன்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் மின் கட்டணம் கட்ட வேண்டும் என்பதால் பணிக்கிடையில் கிடைக்கும் நேரத்தில் பணத்தை கட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்து (3.3.2010) அன்று TNEB நோக்கி "சரியான சில்லறையை" கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

டி.எம்.எஸ் வளாகத்தில் முதல் மாடியில் அந்த அலுவலகம் இருக்கிறது. வேக வேகமாக அந்த அலுவலகம் நுழையும் போது மணி மதியம் 12.30 ஆகிவிட்டது. ஒரு சிலர் முணு முணுத்தப்படி வெளியேறினர்.சிலர் கட்டணம் கட்டும் (Counter) கவுண்டர்ஸ்களில் :) சத்தம் எழுப்பியபடி இருந்தார்கள் . 12.30 - 1.30 அவர்களின் மதிய உணவு இடைவேளை என்பதால் 1.30 க்கு வாருங்கள் என்று மின்வாரிய ஊழியர்கள் வந்தவர்களைஅனுப்பிய படி இருந்தார்கள். அது சரிதான் அவர்கள்தான் பெரிதாய் எழுதிப் போட்டுள்ளார்களே! போதாதக் குறைக்கு மின்கட்டண அட்டையின் பின்னே கூட அந்த நேரம் இடம் பெற்றுள்ளதே என்று அமைதியானேன். சிலர் கெஞ்சிய படி நின்றனர். "சார், நான் அங்கே இருந்து வர்றேனுங்க் சார்..ப்ளீஸ் சார் ..கொஞ்சம் பண்ணிக் கொடுங்க " என்றார்.. "இன்னொருவர் சார் ..லீவு கிடைக்காது சார்..நான் வேலை செய்யுற இடம் ரொம்ப தூரத்தில் இருக்குது சார்" என்று கெஞ்சியபடி இருந்தார். நான் எதுவும் பேசவில்லை. மின்வாரிய ஊழியர்கள் ரூல்ஸ் & ரெகுலேஷனை சரியாக பாலோ பண்ணுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். நம் மின்கட்டணத்தைக் கட்ட இன்னும் 1 மணி நேரத்தை போக்கடிக்க வேண்டும் என்ற கவலையில் அந்தப் பரந்த அறையில் இருந்த ஒரு இருக்கையில் அமரலானேன்.

சிலர் கலைந்து சென்றார்கள். ஒரு வயதான பெரியவர் மட்டும் என் அருகில் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுக்க முயற்சித்தேன் . அவர் பேசவில்லை. ம் அவருக்கு என்ன கவலையோ எனக்குத் தெரியவில்லை. மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டு அதில் கொஞ்சநேரம் நம்ம வேலையைப் பார்க்கலாம் என்று என் வேலையில் இறங்கினேன். "புரியுது சார் புரியது ..என் கிட்டே நீங்க என்ன கேட்க வாரீங்கன்னு? மடிக்கணினி வச்சிருக்க ..இண்டெர்நெட் இருக்குது ..பேசாம ஆன்லைனில் பணத்தைக் கட்டிட்டு வேலையைப் பார்ப்பீயா ...வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து பதிவு போட்டுட்டு இருக்கான்னு சொல்ல வாரீங்க அப்படித்தானே... " ஹி ஹி ..என் இண்டெர்நெட் அக்கவுண்ட் ப்ளாக் ஆனதால இப்படி கியூவுக்கு வர வேண்டியதாய்ப் போச்சு. வெளியில கொஞ்சம் அங்கே இங்கேன்னு சுத்திட்டு வந்தாதான் நமக்கு மத்தவங்க படுற கஷ்டமும் புரியும். என்ன பண்றது ...இப்ப என் கஷ்டத்தை சொல்லி உங்களைப் படிக்க வச்சிட்டேன் பாருங்க... :)

மேலும், அந்த அலுவலகத்தை மெதுவாக நோட்டம் இட்டேன்.

மின்கட்டணத்தை செலுத்த 6 கவுண்ட்டர்கள் மற்றும் 2 ஸ்பெஷல் கவுண்ட்டர்களும் அங்கு இருந்தது ( கவுண்டர்க்கு தமிழ்ல எப்படி சொல்றதுன்னு சொல்லுங்கண்ணா..தப்பா நான் ஜாதி வெறியில் எழுதுறேன்னு நினைச்சிடப் பிடாது நீங்க ! ஆமாம் சொல்லிப் புட்டேன்!)

சின்ன சின்ன அழகான வாசகங்கள் மின்சார சேமிப்பைப் பற்றி ஆங்கிலம் மற்றும் தமிழில் சுவரில் ஒட்டப் பட்டு இருந்தது.

" தேவையில்லா இடத்தில் சுழலும் மின்விசி ஏன்? ஒளிரும் மின்விளக்கு ஏன்?"

" Save Energy for Brighter Tomorrow "

மின்சார வாரியத்தில் ஒரு வருடம் பணியாற்றியவன் நான் என்ற முறையில் நவீனப் படுத்தப்பட்ட அந்த அலுவலகம் கொஞ்சம் எனக்கு பெருமையைத் தந்தது.

மேலும் சிந்திக்கலானேன் ..இதே அலுவலகம் தனியார் வசம் இருந்தால் ...பணத்தை கட்ட வருபவர்களிடம் லஞ்ச் டைம் பற்றி பேசி இருப்பார்களா?

வரும் பணத்தை வாங்கிப் போடும் வித்தைகூட இவர்களுக்குத் தெரியாதா?

கஸ்டமர் சர்வீஸ் என்பதற்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை என்ன?

இன்னும் ஆதிகால அலுவலக விதிமுறைகளையேத்தான் கடை பிடிக்கணுமா?

6 கவுண்டர்களில் ..ஒரு 3 கவுண்டர்களுக்கு மட்டும் மதிய உணவு இடைவேளை நேரத்தை மாற்றி இருந்தால் ..உதாரணமாக மதிய இடைவேளையானது முதல் 3 பேர்களுக்கு 12.30 - 1.30 , அடுத்த 3 பேர்களுக்கு 1.30 - 2.30 என்று வகைப்படுத்தி இருந்தால் ...இப்படி கஸ்டமர்கள் கஷ்டப்படத்தேவையில்லை அல்லவா?.

வீடு ஒரு இடத்திலும், அலுவலகம் வெகு தொலைவிலும் இருக்கும் அன்பர்கள் குறிப்பிட்ட இந்த நேரத்தில் மட்டுமே பணத்தை செலுத்த வேண்டும் என்று சொன்னால் அவர்களின் அலுவல் தடைபடாமல் இருக்குமா?

அனைத்து தரப்பினராலும் இண்டெர்நெட் மையத்தை அணுகி பணம் செலுத்த முடியுமா?

என்றெல்லாம் என் மனதில் கேள்விகள் எழுந்தபடி இருந்தது....

அலுவலகம் வெறிச்சோடி இருந்தது ... என்னையும் அந்தப் பெரியவரையும் தவிர யாரும் அங்கு இல்லை. கிட்டத்தட்ட 8 மின்விசிறிகள் சுழல்ந்தபடி, 10 மின் விளக்குகள் இந்தியா ஒளிர்கிறது என்று ஒளிர்ந்தபடி இருந்தது. " தேவையில்லா இடத்தில் சுழலும் மின்விசிறி ஏன்? ஒளிரும் மின்விளக்கு ஏன்?" ( அவர்கள் ஒட்டியிருந்த வாசகங்களை இப்போது பார்க்கும் போது எனக்கு ஏதோ நையாண்டி செய்வது போல் இருந்தது )

மின்சார சிக்கனம் தேவை இக்கணம் என்று சொன்னால் மட்டும் போதுமா...அதை சொல்பவர்கள் முன்மாதிரியாக கடைபிடித்துக் காட்ட வேண்டாமா ? என்ற கேள்வியோடு பக்கத்தில் இருந்த பெரியவரோடு மீண்டும் பேச்சுக் கொடுக்கப் பார்த்தால் அவர் சுரத்தையே இல்லாமல் இருந்தார்.

அங்கு இருக்கும் சுவர்க்கடிகாரத்திலும் என் அலைபேசியிலும் ஒரே நேரம்தான் ஓடிக் கொண்டு இருந்தது . மணி 1.15 ஆகி விட்டது.. வெளியில் சென்றிருந்த மி.வா.ஊழியர்களும் , பணம் கட்டவந்த அன்பர்களும் ஒவ்வொருவராக மீண்டும் உள்ளே நுழைந்தன்ர்.

மி.வா.ஊ சிலர் கவுண்டர்களில் இருப்பதைப் பார்த்த ஆர்வத்தில் ஒரு சிலர் பணத்தைக் கட்ட மீண்டும் முயற்சித்தனர்.

" 1.30 மணிக்கு தான் சார் ...கட்ட முடியும் ..அங்கே வெயிட் பண்ணுங்க ..என்று கையைக் காட்டினார் " அந்த ஊழியர்.

"கடைசி நாளில் போய் நின்னாலும் காத்துக் கிடக்கணும் , இப்படி 3 ம் தேதியே போய் நின்னாலும் காத்துதான் கிடக்கணும் ..என்ன கொடுமை சரவணன் " என்று என்னையே நான் நொந்துக் கொண்டேன்.

மணி 1.20 ஆகி விட்டது.

அந்த நேரத்தில் கருப்புக் கலர் சுடிதாரில் ஒரு மின்னல் கரகம் ஆடிய நடையோடு உள்ளே வந்தது ... கையில் பெரிய்ய்ய தோல் பை, ..இன்னொரு கையில் கார் சாவி, கொஞ்சம் சோகம் அப்பிய முகத்தோடு இருக்கையில் அமர்ந்து விட்டு ..பின் சட்டென எழுந்து 5 ஆம் கவுண்டர் அருகில் சென்று நின்றது. அங்கு இருந்த மி.வா.ஊழியர் பக்தி பரவசத்தோடு விசாரித்தறிந்தார்!

இதுவரை "உம்" என்று மூஞ்சை வைத்திருந்த பெரியவர் ..குதூகலமாகி ...உணர்ச்சி வசப்பட்டு .."அது உங்களுக்கு யாருன்னு தெரியுதா?" என்று என்னைப் பார்த்து கேட்டார்.

'அட, இந்தாளுக்கு பேச்சுக் கூட வருமா?' ...என்று மனதில் நினைத்துக் கொண்டு ...இப்போ நான் சுரத்தை இல்லாமல் "ம் " தெரியும் என்று தலையை ஆட்டினேன்.

அவரோ அந்தப் பெண்ணை அப்படி பார்க்கவும் இப்படிப்பார்க்கவுமாக இருந்தார்.

அந்தச் சுடிதாருக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் அல்ல நீங்கள் நினைக்கும் அந்தக் கரகாட்ட நடிகையே தான் அவர்.

மணி 1.25 - கரகாட்டப் புன்னகையால் கவுண்டர் திறந்தது :) மி.வா.ஊ ஆர்வத்தோடு அவரது மின் அட்டைகளை வாங்கிக் கொண்டு பதிவு செய்ய ஆரம்பித்தார்..

அட ..1.30 மணிக்கு தான் இனி வேலை செய்வோம்ன்னு ஸ்டிரிக்ட்டா சொன்னாங்க...இப்ப 1.25 க்கே ஒரு கவுண்ட்டர் திறந்திடுச்சே என்று ஆச்சரியப்படு ஆளுக்கொரு கவுண்ட்ரை நெருங்க ..தர்மசங்கடத்தில் மி.வா.ஊ நெளிந்து வேறு வகையில்லாமல் அனைத்துக் கவுண்ட்டர்களையும் திறந்து விட்டார்கள். எனக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.


இந்த சினிமா மோக மக்களை "காக்க காக்க கனக வேல் காக்க " என்று நினைத்த படி கட்ட வேண்டிய கட்டணத்தைக் கட்டிவிட்டு வெளியே வந்து ...இவர்களின் செயல்களை எல்லாம் மனதில் நினைத்தப்படி என் இருசக்கரவாகனத்திற்கு ஓங்கி ஒரு உதை விட்டேன் . என்ன ஆச்சரியம்!!வண்டி உடனே ஸ்டார்ட் ஆகி விட்டது! :)

நன்றி!

பி.கு: இனி அஞ்சல் அலுவலகங்களிலேயே மின்கட்டணம் கட்டும் வசதி கொண்டு வருகிறார்களாம்.. என் அஞ்சலக அனுபவத்தை விரைவில் பதிகிறேன்.


Labels: , , ,