PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, December 28, 2005

நானே பொறுப்பு!

ஜெயமே ஜெயம் - 10
வழியில் எனைக் கண்ட நண்பன் வேகமாக என்னை நோக்கி வந்தான். திடீரென்று கால் தடுக்கி சாலையில் தடுமாறினான். "அடடா என்னப்பா ஆய்ச்சு" என்றேன். "ஒன்னுமில்லப்பா பாழாப் போன இந்த கல் தட்டி விட்டிடுச்சி" என்றபடி அந்தக் கல்லுக்கு ஒரு உதை விட்டு , மீண்டும் "ஆ!" என்றபடி வரலானான்.

இந்த அனுபவம் அனைவருக்கும் இருந்திருக்கும். கொஞ்சம் சிந்திப்போமா. கல் தானாகவே இஷ்டப்பட்டு வந்தா நம்மை தட்டி விட்டது? பின்னே, ஏன் இப்படி சொல்கிறோம்?

சின்னக் குழந்தை தடுக்கி விழுந்தால் அதனை சமாதானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் "இதுதானே உன்னை தடுக்கி விழச் செய்தது, அதுக்கு நாலு உதை கொடுக்கிறேன் பாரு" என்ற படி நாம் வில்லனாக மாறிவிடுகிறோம். இப்படி செய்கையில் குழந்தையின் மனதில் என்னதான் பதியும் என்று நீங்களே சொல்லுங்கள்! ஆக, செய்யும் தவறுகளுக்கு பொறுப்பை ஏற்காமல், மற்றவர் மீது சுமத்தும் செயல் சிறு குழந்தை முதலே நமக்கு கற்றுத்தரப்பட்டு விட்டது.

இநத பழக்கத்தை மாற்றவே "நானே பொறுப்பு" என்று தலைப்பிட்டேன்.

வீடாக இருந்தாலும் சரி, அலுவலகம் என்றாலும் சரி, பள்ளி கல்லூரி பொது இடங்கள் என்று எல்லா இடங்களிலும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மூலாதாரம் 'அடுத்தவர்மீது பழியைச் சுமத்துவது' தான்.

அலுவலகத்திற்கு கிளம்பும் நேரம், சாப்பாடு தயாராக தாமதமாகிவிட்டது. உடனே மனைவியைப் பார்த்து" இன்னைக்கும் லேட்டா? எல்லாம் உன்னாலதாண்டி.." என்று எரிந்து விழுந்தால், அவள் என்ன சொல்வாள்? "நான் வீட்டெல்லாம் சுத்தம் பண்ணி, பிள்ளையைக் குளிப்பாடி, டிரஸ் பண்ணி,ஸ்கூலுக்கு அனுப்பி, கஷ்டப்பட்டு சமையல் செஞ்சு உங்களுக்கு தந்தால் லேட்டுன்னு என் மேல் பழியைப் போடுறீங்களே, கொஞ்ச வேலையில் நீங்களும் பங்கு எடுத்துக்கிட்டா குறைஞ்சா போயிடுவீங்க?, பல்லு தேய்க்காம காபியையும் குடிச்சிட்டு பேப்பரை தூக்கி ரெண்டுமணி நேரம் கையில வச்சுக்குவீங்க, ஆனா என்மேல் குறை சொல்ல வந்துடுவீங்க " என்று சாட்டையடி வரும். அப்புறம் குடும்பம் எங்கே கதம்பமாய் இருக்கும், சிலம்பமாய் ஆகிவிடும்.

இதே இது கொஞ்சம் மாறுதலாய், " சாரிம்மா, இன்னைக்கு நான் உனக்கு உதவியிருந்தா லேட் ஆயிருக்காது, பாழாய்ப் போன அந்த டிவி நிகழ்ச்சியில் உட்கார்ந்திட்டேன்" என்று சொல்லிப் பாருங்கள். " இல்லீங்க அத்தான்! என்னாலதான் லேட் ஆயிடிச்சி, நேத்து நைட் "கணவருக்காக" சீரியல் பார்த்திட்டு படுத்தேனா மணி 11 ஆயிடிச்சி, அதான் இன்னைக்கு எந்திரிக்க கொஞ்சம் லேட்டா ஆயிடுச்சு, நாளைக்கு உங்களுக்கு கரெக்ட் டைம்முக்கு தந்திடுவேன்,சாரிங்க......சாயந்தரம் உங்களுக்கு ரசகுல்லா பண்ணி வைக்கட்டுமா?" என்று அவர்கள் அன்பைப் பொழிய "சாரின்னு சொன்ன வாய்க்கு நீங்கள் 'சரி' என்று தலையாட்டி, திரும்பி வருகையில் கையில் ஒரு "சாரி" வாங்கி வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இப்படியொரு விட்டுக்கொடுக்கும் மன்ப்பான்மை நமக்கு இருப்பின் அண்டா போன்ற பிரச்சனையும் அணுத்துகளாய் ஆகிவிடும்(எத்தனை நாளைக்குத்தான் மலையை உதாரணம் சொல்றது:) ).

விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவது இல்லை
கெட்டுப்போகிறவன் விட்டுக்கொடுப்பது இல்லை.

"நானே பொறுப்பு" என்ற எண்ணம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்களால்தான் சாத்தியம் என்பதால் மேற்சொன்ன உதாரணம் சொன்னேன்.

அவன் சரியில்லை, இவன் சரியில்லை, ரோடு சரியில்லை, பஸ் சரியில்லை, அது சரியில்லை,இது சரியில்லை, சட்டம் சரியில்லை, அரசாங்கம் சரியில்லை என்று சதா புலம்பிக்கொண்டு இருப்பவர்கள், "நாம் சரியாய் இருக்கிறோமோ?" என்பதை முதலில் அறிவது இல்லை.

ஒருவனுக்கு உடலில் எங்கு தொட்டாலும் வலி எடுத்தது. இவனாகவே என்னவெல்லாமோ மருந்து சாப்பிட்டுப் பார்த்தான். வலி குறைந்த பாடு இல்லை. மருத்துவரிடம் சென்றான். " தலை, முகம்,கழுத்து, இடுப்பு, கால் என்று எங்கே தொட்டாலும் வலிக்குது டாக்டர்" என்றான். டாக்டர் அவனது உடலை பரிசோதித்து விட்டு " ஒரு பிரச்சனையும் இல்லை" என்றார். "இல்ல டாக்டர் இதோ இப்பக்கூட தொட்டால் வலிக்குதே" என்றான் அவன்.

டாக்டர் தனது கையால் அவனைத் தொட்டு 'வலிக்கிறதா' என்று கேட்டார். "இல்லையே" என்று ஆச்சரியப்பட்டு சொன்னான். டாக்டர் உண்மையைக் கண்டுகொண்டார். "அப்பா, வலி உன் உடம்பில் இல்லை உனது விரலில்தான் இருக்கிறது. அதைக் கொண்டு நீ எதை அழுத்தினாலும் வலிக்கத்தான் செய்யும்" என்று சொல்லி புண்பட்ட அவனது விரலுக்குச் சிகிச்சை அளித்தார்.

இப்படித்தான் நம்மில் பலர், பிரச்சனை விரலில் இருப்பதை உணராமல் உடல் முழுதும் குற்றம் சொல்லித் திரிகின்றனர்.

ஒரு செயலை செய்கிறோம், தவறு நிகழ்ந்து விட்டது. உடனே இதற்கு யாரைப் பழி சுமத்துவது என்று யோசிக்காமல்.' இதனை எப்படிச் சரி செய்வது?' என்பதை யோசிக்கப்பழக வேண்டும்.

இன்னொரு உதாரணம்..

ஒரு முக்கியமான தகவலை அலுவலக நிர்வாக அதிகாரி தயார் செய்யச் சொல்கிறார். உங்களோடு சேர்ந்து ஒரு மூன்று பேர் அந்தப் பணியில் ஈடுபடுகிறீர்கள். ஒரு சிறு தவறு அதில் ஏற்பட்டு விட்டது. உங்கள் அதிகாரி "இதை யார் பண்ணியது?" என்று கடும் கோபத்தில் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஒருவர் மீது ஒருவர் பழியை சுமத்தினால் என்ன ஆகும்? உங்களின் அலுவலக நட்பு உடைந்து போகும். அதிகாரிக்கு கோபம் இன்னமும் அதிகரிக்கும்.

இதற்குப் பதிலாய் "மன்னிக்கனும் சார், நான்தான் தப்புக்கு காரணம் ஒரு ஐந்து நிமிடத்தில் சரி பண்ணிடுறேன்" என்று தவறு செய்தவர் உடனே ஒப்புக்கொண்டால், அதிகாரி "உம்" என்று சொல்லிச் சென்று விடுவார். உங்களுக்கு உதவ மற்ற நண்பர்களும் ஓடிவருவார்கள்.

தவறு செய்வது மனித இயல்புதான். தவறே செய்யாதவன் சரியானதையும் செய்து விட மாட்டான். என்ன குழப்பமாய் இருக்கிறதா? இரண்டு முறை மீண்டும் படியுங்கள் நான் சொல்லவருவது புரியும்.

எனவே, நாம் செய்யும் செயல்களின் நன்மை தீமைகளுக்கு "நானே பொறுப்பு" என்று ஒத்துக்கொள்ளும் தைரியத்தை வளர்த்து கொள்ளவேண்டும்.

நண்பர்களே! ஒரு நிமிடம், அதற்காக எப்போதும் தவறாகவே செய்து கொண்டு இருக்காதீர்கள்!

செய்யும் செயலில் தவறு ஏற்படுவதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அதே தவறை மீண்டும் செய்வதை ஒத்துக்கொள்ள முடியாது.

Image hosted by Photobucket.com

எனவே, "நானே பொறுப்பு" என்ற வாசகத்தின் உண்மையை உணருங்கள்.

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இலட்சியத்தை நிறைவேற்றும் வல்லமையுடன் இந்தப் புத்தாண்டை துவங்குவோம்!

ஜெயம் தொடரும்..

Thursday, December 22, 2005

ஸ்ரீஹனுமத் ஜெயந்தி அழைப்பிதழ்

ஸ்ரீராமஜெயம்
குரு வாழ்க! குருவே துணை!
சற்குரு ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமிகள் துணை!
அன்புடையீர்!

எல்லாம் வல்ல ஸ்ரீராமதூதன் அருளால் வருகின்ற டிசம்பர் 30, 2005 அன்று என் குருநாதர் ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமிகளின் தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீஹனுமத் ஜெயந்திவிழாவிற்கு பக்த பெருமக்களை அன்புடன் அழைக்கிறேன். அனைவரும் வருக! சிரஞ்சீவியோனின் அருள்தனை பெறுக!

நிகழ்ச்சி நிரல்:

நாள் : 30-12-2005 (மார்கழி 15 ) - வெள்ளிக்கிழமை
இடம்: மாருதி இல்லம், ஸ்ரீவைகுண்டம்

காலை 9.00 மணி: கணபதி ஹோமம்
பகல் 10.00 மணி: ஸ்ரீராம அஷ்டோத்ரம்
பகல் 10.30 மணி: ஸ்ரீஹனுமத் சதநாமாவளி
பகல் 11.30 மணி: ஸ்ரீஹனுமத் அஷ்டோத்ரம்
மாலை 12.00 மணி: அருள் வாக்கு
மாலை 12.30 மணி: அன்னதானம்
இரவு 7.00 மணி: புஷ்பாஞ்சலி
இரவு 9.00 மணி: அருட்பிரசாதம்
Image hosted by Photobucket.com
ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஆஞ்சநேயா!

இவண்,
குருவின் பாதம் பணியும்,
பாஸிடிவ்ராமா
!

Wednesday, December 21, 2005

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Image hosted by Photobucket.com
கருணை கண்கள் கொண்ட
கடவுளின் மைந்தன் அவன்
பொறுமை பாடந் தனை
புவிக்கு தந்த பிரான்
இயேசு நாதந் தனை
நினைவினில் நிறுத்தி
நிம்மதி வாழ்வு வாழ்வோம்
நெஞ்சங்களே வாரீர்!

(வலைப்பூ அன்பர்களுக்கு என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!)

Tuesday, December 06, 2005

கண்ணால் காண்பதும் பொய்!

அன்பின் அன்பர்களே!
கீழே உள்ள இரு முகங்களை உற்று நோக்குங்கள்.
உங்களின் இடது புறம் இருப்பவர் திருவாளர். கோபநாதன்,
வலது புறம் இருப்பவர் திருமதி. அமைதிச்செல்வி.
Image hosted by Photobucket.com

சரி! இப்போது , நீங்கள் உங்கள் இருக்கையை விட்டு எழுந்து 12 அடி தொலைவில் நின்று கண்களை தொடைத்துவிட்டு, இதே படத்தை திரும்பவும் பாருங்கள்.. என்ன தெரிகிறது?

வலது பக்கம் இருந்த திருமதி. அமைதிச்செல்வி இடதுபுறமும், இடதுபுறம் இருந்த திருவாளர். கோபநாதன் வலதுபுறமும் மாறி இருக்கிறார்களா? என்ன நம்ப முடியலியா? ஆமாங்க! நம்ம கண்ணை நம்மளாலேயே நம்ப முடியலியே.. அதுதான் Illusion . இதற்கு தமிழ் வார்த்தை எனக்கு என்னான்னு தெரியலை.

(நன்றி : PhillippeG.Schyns and Aude Oliva of the Univ. of Glasgow)

யாருக்கு நன்றி சொல்லி இருக்கேன்னு கேக்குறீங்களா..அட இவங்கதான் இதை உருவாக்கினாங்க.