PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Tuesday, March 20, 2007

ஸ்ரீராமநவமி அழைப்பிதழ்!


குரு வாழ்க! குருவே துணை!


மெய்யன்பர்களே!

எல்லாம் வல்ல இறையோன் அருளால் வருகின்ற மார்ச் 27, 2007 ல் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமி களின் தலைமையில் நடைபெற இருக்கும் ஸ்ரீராமநவமி விழாவிற்கு தாங்கள் வருகை தந்து இறையருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்:

நாள்: 27. 03.2007 (செவ்வாய்)
இடம்: மாருதி இல்லம் , ஸ்ரீவைகுண்டம்
காலை 10.00 மணி : ஸ்ரீவைகுண்டம், கள்ளபிரான் கோவிலில் அர்ச்சனை
மாலை 6.00 மணி: ஸ்ரீராமநாம ஜெபம்,
இரவு 7.00 மணி: அஷ்டோத்ரம், சதநாமாவளி, புஷ்பாஞ்சலி
இரவு 8.00 மணி: அருட்பிரசாதம்





அம்பரநிறத் தினாய்! சிலையேந்தி சீதையி
லக்குவ பரதசத் ருக்க னோடு
அம்பரந்தாண் டியே உன்பணி செய்திடும்
சஞ்சீவி திருவடிப் பற்றி நிற்க
அம்பரமெட் டிலும் பரவியப் பரமனே!
புவிமீதில் மானுட வடிவங் கொண்டாய்!
அம்பரமா மிந்த உலகெலாம் எனினும்நீ
என்மனக் கோவிலை வந்த டைந்தாய்!

( அம்பரம் - ஆகாயம், கடல், திக்கு, உடை என பல பொருள்கள் உண்டு)

ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஆஞ்சநேயா!

இப்படிக்கு
குருபாதம் பணியும்,
ராமா

Friday, February 09, 2007

‎Nambikkai Birthday Celebrations - Kavithai Competition



குரு வாழ்க! குருவே துணை!

இணையத்தின் இனிய நண்பர்களே! வணக்கம்!

உங்கள் நம்பிக்கையினால் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது இரண்டாம் அகவையினை ஏப்ரல் 23, 2007 - ல் கொண்டாடுகிறது. நம்பிக்கை குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை தன் சகோதர குழுமத்தின் கொண்டாட்டத்துடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்து சிறப்பான போட்டி ஒன்றை நடத்த உள்ளது.

சென்ற வருடம் நடத்திய கவிதை./ கட்டுரை/கதை போட்டிகளில் பலர் சிறப்பாக பங்கெடுத்து சிறந்த பரிசுகளை அள்ளிச் சென்றார்கள். அவர்களுக்கும் , பரிசுகளை வழங்கிய நண்பர்களுக்கும் மீண்டும் பாராட்டுக்கள்.

இந்த ஆண்டிற்கான போட்டி சற்றே வித்தியாசமானது.

கவிதைப் போட்டி மட்டும் நடத்த உள்ளோம்.. தலைப்பு காதல் பற்றியது ..

என்னடா இது நம்பிக்கையில் காதல் கவிதையா? ஆ! என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. தலைவன் தன் தலைவிமீது பாடும் காதலாய் கவிதை இருத்தல் வேண்டும்.

சின்ன விளக்கம் இங்கே..

காதல் கவிதைகள் நம்பிக்கையில் வேண்டாம் என்று நான் கருதியதற்கு காரணத்தை முதலில் பணிவுடன் சொல்கிறேன். சில கவிதைகள் குழுவில் உள்ளவர்களுக்கு பெரிய நெளிசலை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது. அந்த கவிதைகளை மாத்திரம் தடுக்கும் போது அந்த படைப்பாளிகளுக்கு வருத்தம் ஏற்படும். என்ன செய்வதென்று புரியாமல் தற்சமயம் அனைத்து கவிதைகளையும் கொஞ்சகாலம் நிறுத்தி வைப்போம் என முடிவெடுத்து தெரிவித்தேன். ஏனெனில், குழுவில் பண்புசால் பெரியோர்களும், ஆன்மீகவாதிகளும், எல்லா வயதிலும் பெண்மணிகளும் இருக்கின்றனர் அல்லவா! குழுவில் இருக்கும் அன்பர்களது புதல்வரும்,புதல்வியரும் கூட இதில் வரும் மடல்களை படிப்பது உண்டு. எனவேதான் வேறு வழியில்லாமல் அந்த முடிவைத் தெரிவித்தேன்.

ஆனாலும் பல இளைஞர்கள், பல கவிஞர்கள் நிரம்பிய இந்த குழுவில் "காதல்" என்னும் கருப்பொருளை தடை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. அதில் எனக்கு ஈடுபாடு இல்லாவில்லாவிட்டாலும் அதில் வெறுப்பு இல்லை. படைப்பாளிகளுக்கு 'காதல்' என்பது ஒரு முக்கிய கருவாகதான் விளங்கி வருகிறது...இன்று வரை.

சரி. விஷயத்திற்கு வருகிறேன். ஆண் கவிஞர்களுக்கு மாத்திரமேயான இந்தக் "காதல் கவிதை போட்டியில்" என்ன விசேசம் என்றால், உங்கள் கவிதை எந்த அளவிற்கு எல்லை மீறாமல் அதே சமயம் அற்புதமாக இருக்கிறது என்பதை தீர்மானிக்க போவது பெண் நடுவர்கள். 24 வயதிலிருந்து 70 வயது வரையிலான பெண் நடுவர்கள் இதை தேர்ந்தெடுக்க போகின்றனர். உங்களுடைய கவிதை பற்றிய உண்மையான விமரிசனம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு.

நடுவர்களின் பெயர்கள் அவர்கள் அனுமதியின் பேரில் போட்டி முடிவோடு வெளியிடப்படும். படைப்புகள் உங்கள் பெயரில்லாமல் நடுவர்களுக்கு அனுப்பப்படும்.

பரிசுத்தொகை விபரம்

முதல்பரிசு ரூ 1500/-

இரண்டாம் ரூ 1000/-

மூன்றாம் பரிசு ரூ 500/-

ஆறுதல் பரிசு ரூ 100/- தலா 10 பேருக்கு.


போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி/ விதிமுறைகள்:

1. ஆண் படைப்பாளார்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர் நம்பிக்கை உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண் படைப்பாளர்கள் நடுவர் குழுவில் சேர விருப்பம் தெரிவித்தால் எங்களுக்கு மடலிடுக .. பெரிதும் வரவேற்கிறோம்.

2. படைப்பாளர்கள் தங்கள் முகவரியையும் தொலைபேசி/அலைபேசி எண்ணையும் தரவேண்டும். அவை பொதுவில் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதி சொல்லுகின்றோம்.

3. குறைந்த வார்த்தைகளுக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் கவிதை சிறந்ததாகக் கருதப்படும்.

4. பண்பாட்டின் எல்லையை மீறாத கவிதை பெரிதும் வரவேற்கப்படும். (இதுதான் மிக முக்கியம்)

5. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!

6. ஒருவரே அதிகபட்சம் 3 படைப்புகளை அனுப்பலாம்.

7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!

படைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 02 - 2007 (புதன்) இந்திய நேரம் காலை 10.00 மணிக்குள்.

உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.
பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்களும் கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.

தங்களது கவிதையைப் பற்றி உண்மையாகத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

அனுப்பப்படும் கவிததகள் நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதையை வேறு எங்கு வேண்டுமானாலும் பிரசுரம் பண்ணலாம்.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com
2.பரஞ்சோதி paransothi@gmail.com
3.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com


மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி!

இவண்,
நம்பிக்கை கூகுள் குழுமம்.
http://groups.google.co.in/group/nambikkai

Thursday, January 04, 2007

நீயே குருவாய்...



குரு வாழ்க! குருவே துணை!


நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

நாயிற் கடையோன் அடியேனை
தாயாய் அணைத்துக் காப்பாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

வாழ்வின் இலக்கணம் அறிகிலேன்- நான்
வந்ததின் காரணம் புரிகிலேன்!

பிழைக்கணும் என்றே பிறந்திட்டேன் - மீண்டும்
பிறவாது எனைக் காப்பாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

பொன் பொருள் புகழென்னும் போதையினால்- தினம்
மடிந்திடும் மக்கள் கூட்டத்திலே

நின்புகழ் அறியாமல் இருந்தேனே - நின்
தரிசனம் காணாத வரைக்குமப்பா!

கனவில் மட்டுமே காட்சி தரும்- நீ
கண்முன் காட்சித் தருவாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சேயாய் நான் இங்கு தவிக்கின்றேன்
தாயாய் அமுதூட்ட வாராயா?

இனம் மொழி பேதம் காணும் இவ்வுலகில்
இதம் எங்கே கிடைத்திடும் நானறியேன்

பொய்தனை மெய்யாக்கும் புளுகரோடு - உன்
புதல்வனாய் நான் வாழ்தல் கடினமப்பா!

அடியார் அன்பையே நாடுகின்றேன் - அதை
அடியேன் மகிழவே தினம் தருவாய்

பேரிடியாய் வானம் மேல் விழுந்தாலும் - உன்
பெயர் சொல்லிடவே வரம் தருவாய்!

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சகலமும் ஆனப் பரம்பொருளே
சக்தியே சித்தியே சரண் அடைந்தேன்!

மெய்த்தவம் பற்றிட வேண்டி நின்னேன்
ஐயனே எந்தன் ஐயம் நீக்கு!

நான் வந்ததின் காரணம் புரிய வேண்டும்
வாழ்வில் உன்மணம் நுகர வேண்டும்!

கண்ணால் உனை நான் காணவேண்டும்!
கடவுளே உனை நான் அடைய வேண்டும்!

என்னைப் படைத்தவனே எங்கு சென்றாய்
என்னுள்தான் இருக்கிறாயா எங்கு சென்றாய்?

என்ன செய்திட்டால் நீ வருவாய்,
எந்தன் ஏக்கத்தை நீயும் போக்கிடுவாய்?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சகலமும் ஆனப் பரம்பொருளே
சக்தியே சித்தியே சரண் அடைந்தேன்!

(ஸ்ரீஅனுமன் கோயிலில் 16/12/2006 சனிக்கிழமை அன்று அடியேனுக்கு உதித்தது ! )

"சென்னைக் காதல்" - விமர்சனம்

"என்னடா ராமா நீயுமா ?" என்று சிலர் கேட்பது எனக்கு கேட்கிறது.

ஆமாங்க! வேற என்ன பண்ணுறது! :(

என்னோட மைத்துனன் குமரியில் இருந்து சென்னைக்கு வந்து இருந்தான்..

இசை, படம் இவற்றில் அவனுக்கு மிகுந்த விருப்பம் உண்டு.

"அத்தான்! சென்னையில் ஏதாவது ஒரு நல்ல தியேட்டரில் படம் பார்க்கணும் அத்தான் " என்று சொல்லி ஞாயிறு மட்டுமே எனக்கு விடுப்பு என்பதை அறிந்து சனி அன்றே வந்திருந்தான்.


"நானும் சனிக்கிழமை இரவுக்காட்சிக்கு எடுக்கவா" என்றேன்.

"சரிங்க அத்தான் என்ன படம் ? லேட் ஆயிடுமே . வெயிலுக்கு எடுங்க அத்தான் " என்றான்.

"என்ன வெயிலுக்கா ? புரியலியே "

"வெயிலுக்கு எடுங்க அத்தான் "

ஓ! இரவுக் காட்சி வேண்டாமா! அப்ப மத்தியானம் காட்சி எடுக்கத்தான் வெயிலுக்குன்னு சொல்றீயா " என்று கேட்டேன்.

"அத்தான் "வெயில்" ங்கிறது படத்தோட பேரு .. " என்றானே பார்க்கலாம்.

ஒரே சிரிப்பு..

"இந்தா பாருப்பா இந்த சினிமா விசயத்தில் நான் ரொம்ப் வீக், எனக்கும் சினிமாவுக்கு வெகுதூரம் .."

"லிப்ட்" வச்சாக் கூட எட்டாது.. கடந்த 8 வருஷத்தில் 3 படம் பார்த்திருப்பேன்.. 4 வது படம் நாம இனி பார்க்கப் போற படம் ...சரி டிரை பண்ணுறேன்.. சத்யத்தில்தான் எடுக்கப் போறேன்.. அங்க அந்தப்படம் இல்லைன்னா வேற படம் எடுக்கலாம் " என்று சொன்னேன்.

அவன் ஆசைப்படுறானே என்று அலுவலக நண்பர் மூலமாக "சத்யம் காம்பள்க்ஸ்ஸில்" வேறு எந்த படத்திற்கும் கிடைக்காததால் "சென்னைக் காதல்" என்ற படத்திற்கு டிக்கெட் எடுத்திருந்தேன். காரணம் சூர்யவம்சம், புதுவசந்தம் என்று சூப்பர் ஹிட் தந்த குடும்ப பட இயக்குனர் விக்ரமன் எடுத்த படம் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.

சத்யம் சென்றோம்!

சத்யம் காம்பள்க்ஸ் சுத்தமாக வைத்திருந்தார்கள்.

நொறுக்கு தீனிகளை வாங்கிக் கொண்டு எங்கள் இருக்கையில் அமர்ந்தோம்..

படம் போட ஆரம்பித்தார்கள்.


" அய்யோடா சாமி! என் சினிமா டைரக்டரியில் இந்தப் படமுமா வர வேணும் ... விக்ரமனுக்கு அப்படி ஜனங்க மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை..."

படம் ஆரம்பித்தது முதல் அறுவை மேல் அறுவை!

படமே பார்க்கச் செல்லாத எனக்கு "இனியும் மவனே இந்தப் பக்கம் வருவீயா ? " என்று என் மனசாட்சி தண்டனை கொடுத்தது போல் இருந்தது.

பாவம் சினிமாவை நன்கு ரசித்து பார்க்கும் பழக்கம் உள்ள என் மைத்துனன் " இருக்கையில் சுருண்டு போய், தன் இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்தபடி.. நகைச்சுவை காட்சியிலும் (?????) சோகமாக இருந்தான்.. "

" அத்தான்" என்ற படி என்னை ஒரு பார்வை பார்த்தான் ..

எனக்கு அவனுடைய நிலையைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது..

என் நிலையே எனக்கு பரிதாபமாய் இருக்கையில் அவனுக்கு வேற நான் ஆறுதல் சொல்ல வேண்டி இருந்தது.

"அத்தான் ! வீட்டில் அனுக்குட்டி(என் மகள் அனுசூயா) கூட வெளையாடிக்கிட்டு இருந்திருக்கலாம் ..உங்கக்கிட்ட தெரியாத்தனமா படம் பார்க்கணும்னு சொல்லிட்டேன் " என்றான்..

பார்க்கவே ரொம்ப பரிதாபமாய் இருந்தான்..

"மன்னிச்சிடு சதீஷ் ! நானும் சோகமாக மூஞ்சை வைத்துக் கொண்டேன்.

" விவஸ்தை கெட்ட நகைச்சுவை, 7 பாட்டோடு ஒரு குத்துப் பாட்டு , லாஜிக்கே இல்லாத காட்சிகள், விஜய் டிவி கலக்கப்போவது யாரு சாம்பியங்களை வைத்துக் கொண்டு .. அவர்களுக்கும் சரியான வாய்ப்பை கொடுக்காத காட்சிகள்.. என்று சென்று கொண்டு இருந்தது.."

இப்பவாவது படத்தில் புதிய திருப்பம் வராதா ? இப்பவாவது படத்தில் புதிய திருப்பம் வராதா ? என்று ஏங்கிக் கொண்டு இருந்தேன்.

" எங்களுக்கும்தான் இப்படியா இல்லை மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் " என்ற படி அக்கம் பக்கம் இருப்பவர்களை நோட்டம் விட்டேன்..

நிறைய பேர் தங்கள் இருக்கையை காலி செய்து இருந்தனர்..

நொறுக்குத் தீனி விற்பனை மட்டும் அமோகமாய் நடப்பதைக் காண முடிந்தது.

படம் நிறைவுற்றது..

இந்த படத்தில் விக்ரமன் அப்படி என்னக் கருத்து சொல்ல வருகிறார் என்று கொஞ்சம் யோசித்தேன்.

படம் "குப்பை" படம்..

சென்னைக் காதல் இந்த மாதிரி குப்பையாய் இருக்கும்னு சொல்ல வாராருன்னு என்று நினைக்கிறேன்.


படம் முடிந்த்தும் அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ரொம்ப உற்சாகம்..

கொஞ்சம் சத்தமிட்டு சொன்னேன் " அடுத்தப் பாட்டு போடுறதுக்குள்ளே எல்லாரும் சீக்கிரம கிளம்பிடுங்க.. எப்பா தாங்க முடியலடா சாமி! " என்றேன்.

"அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்த்து"

மக்களின் மனோபாவத்தை புரிந்து கொள்ள முடிந்தது..

விக்ரமன் இந்த "சென்னைக் காதல் " மூலம் தனக்கு இருந்த பெயரை கெடுத்துக் கொண்டார் என்று நினைக்கிரேன்.

நம்ம "விமர்சக வித்தகர்" விழியன் இந்தப் படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டுகிறேன்.


பின்குறிப்பு1 : உங்களுக்கு பிடிக்காதவங்க யாராச்சும் இருந்தா அவங்களை இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்யுங்க :))

பின்குறிப்பு2 : ஆனா !விழியன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் :))
-
--

ராமா!

Saturday, December 30, 2006

புன்னகை பூக்கட்டும்

Friday, December 29, 2006

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கிறிஸ்துமஸ்&புத்தாண்டு வாழ்த்துக்கள்

Thursday, October 19, 2006

ஏற்றமிகு தீபாவளி/ரமலான் வாழ்த்துக்கள்!



அல்லவை அகன்றிட
நல்லவை பெருகிட
அகத்தில் ஞான
ஒளி ஏற்றுவோம்!

ஒழுக்கம் பேணும்
நோன்புத் திருநாள்
உணர்த்தும் பொருளை
நாம் உணர்வோம்!

யுகத்தில் கலியின்
கொடுமை கண்டு
கலங்காதே நண்பா
தினம் போராடு!

ஈகைத் திருநாள்
இயம்பும் குணத்தால்
தூய உலகை
நாம் காண்போம்!

ஜெகத்தில் இன்பம்
இறையை உணர்தல்
என்ற உண்மை
நாம் அறிந்திடுவோம்!

யுக யுகமாய்
வாழும் மகான்கள் வழியில்
அன்பே சிவமாய்
ஆகிடு ( வ்+)ம்!

- பாஸிடிவ்ராமா

வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் எனது உற்சாகமான தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

குறிப்பாக தலைத்தீபாவளி காணப்போகும் அன்பர்களுக்கு சிறப்பு நல்வாழ்த்துக்கள் :)

Saturday, July 22, 2006

ஞான(ம்) தரு(ம்)

குறிப்பு :முத்தமிழ்/நம்பிக்கை மஞ்சூர் ராசா அவர்கள் , ஒருவர் மரத்தடியில் அமர்ந்து ஏதோ ஒரு காகிதம்/புத்தகம் படிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, கவிதை எழுதச் சொன்னார். நான் என் பங்குக்கு எழுதிய கவிதை இது :)

########################

புத்தகத்தைப் படித்து
நாம் புலவன் ஆகலாம் -ஆனால்
புத்தனாக முடியா தென்பதை
புரிந்து கொள் நண்பா!

இச்சையில் மனம் லயித்தால்
எச்செகத்திலும் முக்தி இல்லை
நற்கதி வேண்டுமெனில்
நமைப் படைத்தோனை நாடிச் செல்

ஓய்ந்து போகாதே எழுந்து நில்
ஒழுக்கம் பேண் - எந்நேரமும்
அவன் நினைப்புடன்
கர்மாவைச் செயலாற்று!

விதைக்குள் இருந்து
வந்த இவ்விருட்சம் - நாம்
பிழைக்கும் வழியைச்
சொல்கிறது கேட்போம்!

வயது போனாலும் வாடாமல்
நாடி நரம்பு முறுக்கேற்றி
இறை(ரை)யைத் தேடி
இசை பரப்பும்

இதனின் கொள்கை
நாம் அறிவோம்- அது
உணர்த்தும் உண்மை
நாம் அறிவோம்!

விண்ணில் மண்ணில்
அணு வெளியில்
உன்னில் என்னில்
தரு தன்னில்

எங்கே இருக்கிறான்
அவன் என்ற
ஆத்ம ஞானத்தில்
தலை அசைக்கிறது.

தன்னை அறிவதற்கே
தலைவனை உணர்வதற்கே
குருவாய் ஆனவனை -இத்
தரு தியானித்து

ஒற்றைக் காலிலேயே
நின்றபடி செய்யும் தவம்
கண்டபின்னும் தாமதித்தல்
சரியாமோ? நீயே சொல்!

ஞானியாம் இத்தருவின்
நற்கொள்கை நாமும் கொள்வோம்
தோணியாய் ஏணியாய்
நல்லோர்க்கு நாம் இருப்போம்.

இறை வேட்கை கொண்ட
இவ் விருட்சம்
இதமாய் நமக்கு நிழல்
தருவது போல்

பிறர் பிழையைப்
பொறுத்து முயற்சிப்போம்
முதலில் நம்மை நாமே
தயார் செய்வோம்

வேர் போல்
விருப்பம் கொண்டு
உயரும் கிளைபோல் முயற்சித்தால்
கனிபோல் வெற்றி கிட்டும்
நிழல்போல் நிம்மதியாகும்.