PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Friday, September 16, 2005

"ஹனூமன் சாலீஸா"

[புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, எமது இறையோன் ஸ்ரீராமதூதனின் புகழ் பாட, துளசிதாஸனின் ஹனூமன் சாலீஸாவை கவிப்படுத்த மனதில் தோன்றியது. தொண்டு செய்வதன் மூலம் சித்தி பெற்ற எம்பெருமான் அனுமனின் அருள் அனைவருக்கும் கிட்ட எந்தன் சற்குரு ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமிகளைப் பணிந்து இதை வழங்குகிறேன்.]
Image hosted by Photobucket.com
0
என் கண்ணாடி மனந்தன்னை
குரு திருவடி தூசியாலே
மெய்ஞ் ஞான நாற்கனிகள்
மிக விளக்கும் ஸ்ரீராமன்
புகழ் விளக்க வேண்டியே
தூய்மை யாக்கிக் கொண்டேன்!
0
புத்தியும் பலமும் தருவாய்
உண்மை ஞானமும் தருவாய்
சிற்றறிவு கொண்டோன் யான்
நின்னையே தியானித் தேன்
துன்பங்கள் தவறுகளி லிருந்து
விடுவிப்பாய் வாயு மைந்தா!
1
நற்குணமும் அறிவும் கொண்டு
கடலாய் பரந்து நின்று
மூவுலகையும் விழித்தெழச் செய்யும்
வானரத் தலைவா ஜெய் ஆஞ்சநேயா!
2
எல்லையற்ற ஆற்றலின்
உறைவிடமே ஸ்ரீராமதூதனே
அஞ்சனா மைந்தன், வாயுபுத்திரன்
எனப்பெயர்கள் பெற்றவனே!
3
ஆற்றல் வாய்ந்த தேகனே
வலிமை கொள் வீரனே
தீயசிந்தனை விரட்டிடும் தீரனே
நற் சிந்தனையின் நண்பனே!
4
ஒளி வீசும் காதணியும்
ஒய்யார ஆடையோடும்
அலை போன்ற கேசத்துடன்
பொன்னாய் மின்னுவோனே!
5
இடியும் கொடியும் - உன்
புஜங்களை அழகு செய்யும்
தோளையோ முஞ்சைப் புல்
பூணூலாய் அழகு செய்யும்!
6
ருத்ர அம்சமே
கேசரி மைந்தா- உன்
தேஜஸையும் வீரமும் கண்டு
உலகமே வணங்கி நிற்கும்.
7
கூரிய புத்தி கொண்டோன்- நற்
குணமும் அறிவும் கொண்டோன்
ஸ்ரீராமன் கட்டளைக்கே
மகிழ்ச்சியாய் காத்திருப்போன்!
8
சீதா ராம லட்சுமணனை
மனதில் இருத்திக் கொண்டோன்
இறை புகழ் கேட்பதில்
எப்போதும் மகிழ்வு கொண்டோன்.
9
நுண்ணிய உருவம் கொண்டு
சீதைமுன் தோன்றி நின்றாய்
திண்ணிய பெரும் ரூபம் கொண்டு
இலங்கையை எரித்து நின்றாய்!
10
விஸ்வ ரூபம் கொண்டு
அரக்கர்களை அழித்து நின்றாய்
ஸ்ரீராம காரியத்தை
ஜெயமாக்கி நின்றாய்!

11
சஞ்சீவினி மூலிகையால்
இலக்குவனை காத்த போது
ஸ்ரீராமன் மிக மகிழ்ந்தே
நின்னைத் தழுவிக் கொண்டான்.
12
உன் பெருமை யுணர்ந்தன்றோ
ஸ்ரீராமன் உனை புகழ்ந்து
பரதன் மேலான பிரியம் கொண்டேன்
எம்பியே என்று சொன்னான்.
13
ஆயிரம் தலைகள் கொண்ட
ஆதிசேஷன் உன் பெருமைகண்டு
புகழ்வதாய் ஸ்ரீராமன் - உனை
அணைத்தபடி கூறி நின்றான்.
14
ஸனகர் எனும் முனிவர்கள்
பிரம்மன் போன்ற தேவர்கள்
நாரதர் கலை மகள்
ஆதி சேஷன் சங்கரன்
15
எமனும் குபேரனும்
எண்திசைக் காவலரும்
கவிஞர் புலவர் எல்லாம்
காகுத்தன் தூதன் உந்தன்
பெருமை விளக்க முயன்று
பேதலித்தே தோல்வி கண்டார்!
16
ஸ்ரீராமன் அறிமுகத்தால்
சுக்ரீவன் தன் அரசை
மீட்டிட்ட உதவிதனை
நீயன்றோ செய்து நின்றாய்!
17
உன்னுடை யோசனையால்
இளையோன் விபீஷணன்
இலங்கையின் வேந்தனானான்
இது உலகம் அறிந்ததன்றோ!
18
ஈரெட்டு ஆயிரம்
மைல்களுக்கு அப்பாலான
சூரியனைக் கனி யென்று
எண்ணி விழுங்கச் சென்றவனே!
19
கணையாழி தனை யுந்தன்
முகவாயில் தாங்கிய படி
கடலையே தாண்டியவனே-உன்
ஆற்றலை என்ன வென்பேன்?
20
எத்துணை கடினமான
செயலாய் இருந்த போதும்
உன்னருள் இருந்தால் போதும்
எளிதாய் ஆகும் அன்றோ!
Image hosted by Photobucket.com
21
ஸ்ரீராம ராஜ்யத்தின்
வாயிற் காவலனே
உன் அனுமதியன்றி அங்கு
யார் நுழைய முடியும்?
22
நின்னை சரண் புகுந்தோர்
இன்பமே பெற்றிடுவர்
என்னை நீ காப்பதனால்
எதற்கு நான் அஞ்சவேண்டும்?
23
முதலோன் உன் ஆற்றல்கண்டு
மூவுலகும் நடு நடுங்கும்
உன்னை அடக்கி யாள
உனையன்றி யாரால் முடியும்?
24
மாவீரன் உன் நாமம்
உச்சரிக்கும் இடந்தனிலே
பேய்கள்களும் பூதங்களும்
வந்திடாமல் அஞ்சியோடும்!
25
இடைவிடாது உன் நாமம்
எப்போதும் ஜெபித்து நின்றால்
எந்நோயும் அகன்று போகும்
எத்துன்பமும் விலகியோடும்1
26
மனம் வாக்கு செயலாலே
மாருதியை ஸ்தோத்தரிப்போன்
இடர் நீங்கி வாழ்ந்திடும்
இன்பந்தனை பெற்றிடுவான்.
27
தவம் புரியும் பக்தர்களின்
வேண்டுதலை நிறைவேற்றும்
ஸ்ரீராமப் பணிகளைச்
செவ்வனே செய்தவனே!
28
பக்தனின் ஆசைகளோடு
அழியாக் கனியான
இறை அநுபூதி கிட்டிடவே
அருள்பவனே ஆஞ்சநேயா!
29
நான்கு யுகங்களிலும்
நானிலம் முழுவதிலும்
உன் நாமம் சிறக்கிறது
உலகமே ஜெபிக்கிறது.
30
நல்லோரை ஞானியரை
என்றும் காப்பவனே,
தீயசக்தி அழிப்பவனே
ஸ்ரீராமப் பிரியோனே!
31
அஷ்டமா சித்திகள்
நவ ரத்தினங்கள்
வேண்டிடும் அடியவர்க்கு
வழங்கிடும் வரமளிக்கும்
சக்தியை அன்னை சீதா
உனக்கன்றோ அருளி நின்றாள்!
32
உன்னிடம் உள்ளதெல்லாம்
ஸ்ரீராம பக்தியன்றோ
என்றும் எப்பொழுதும் நீ
ஸ்ரீராம தாசன் அன்றோ!
33
நின்னை தியானிப்போனுக்கு
ஸ்ரீராம தரிசனம் கிட்டும்- பல
பிறவிகள் தொடர்ந்து வரும்
துன்பங்கள் விட்டு அகலும்!
34
வாழ்வின் இறுதியிலே
ஸ்ரீராமன் உறைவிடத்தை
சிறப்புடனே சென்றடைந்து
ஹரிபக்தனாய் சிறப்படைவான்.
35
எந்தெய்வந் தனிடமும்
மனதை செலுத்தா தவன்
அனுமனை வணங்கி நின்றால்
அனைத்துமே பெற்றிடுவான்!
36
ஸ்ரீராம தூதனின்
திருநாமம் நினைப்பவரின்
துன்பங்கள் துயரங்கள்
தூரமாய் விலகி ஓடும்!
37
ஜெய் ஆஞ்சநேயா!
ஜெய் ஆஞ்சநேயா!
ஜெய் பரமகுருவே!
அருள்வீர் எங்களுக்கே!
38
ஈறைம்பது முறை இதனைப்
பாராயணம் செய்வோன்
தளைகள் நீங்கப் பெற்று
பரமானந்தம் பெறுவான்.
39
ஸ்ரீஹனுமான் சாலீஸாவை
சிந்தையில் தொழுவோன்
சங்கரன் அருள் பெற்று
பரிபூரணம் அடைவான்.
40
என்றென்றும் நம் இதயம்
இறைவன் வாழ் இடமாக
ஸ்ரீராமதூத சேவகன்
துளசிதாஸன் வாழ்த்துகிறான்.
0

துன்பங்கள் போக்குபவன்
மங்கள உருவினன்
தேவர்களின் தலைவன்
வாயுவின் புத்திரன்

ஸ்ரீராம லக்குவ சீதா தேவியோடு
யம் இதயத்தில் நிலவட்டும் ஜெயமே!

ஸ்ரீஹனூமன் சாலீஸாவின் தமிழ்க்கவியாக்கம் முற்றிற்று!


எல்லோரும் அவனருளாலே அவன்தாள் பணிந்து அனைத்து நன்மைகளும் பெற்று வாழ்வாங்கு வாழ என்னிறையை வணங்குகிறேன்..நன்றி!

2 Comments:

  • At 12:29 PM, Blogger NambikkaiRAMA said…

    ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா!
    ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா!

     
  • At 11:22 PM, Blogger வீ. எம் said…

    ADA RAAMA !!! POSITIVE RAMA !

     

Post a Comment

<< Home