PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, September 28, 2005

"கனவைத் தேர்ந்தெடுங்கள்"

ஜெயமே ஜெயம் - 6
"கனவைத் தேர்ந்தெடுங்கள்" தொடர்ச்சி...
நள்ளிரவு 12.30 அல்லது 2.00 மணி வரை கண்ணை கொட்ட கொட்ட விழித்து வைத்துக்கொண்டு Evil Dead போன்ற படங்களையோ, குற்றம், க்ரைம் டைரி, மிட்நைட் மசாலா போன்ற டி.வி நிகழ்ச்சிகளையோ பார்த்தபின் உறங்கச் செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மறுநாள் எழுகையில் எரிச்சலோடுதான் எழுவீர்கள்..கண்ணாடியில் சென்று உங்கள் முகத்தைப் பார்த்தால்.. கோரமாக இருக்கும். யாரும் ஏதும் கேட்டால் "வள்" என்று விழுவீர்கள். அதே மனத்தோடு அலுவலகம் வரும் நீங்கள் mood- டே சரியில்லை என்பீர்கள். உங்களது உற்சாகம் எங்கோ சென்றிருக்கும்.

அதேசமயம் படுக்கச் செல்லும் முன் குலுங்க குலுங்கச் சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து விட்டோ . அல்லது நம்பிக்கைத் தரும் விசயங்களைப் படித்துவிட்டோ உறங்கச் சென்றீர்களேயானால்.. மறுநாள் உற்சாகமாய் சிரித்த முகத்துடன் எழுவீர்கள். அப்படித்தானே?

அதேபோல்..காலையில் எழும்போது நம்மில் பலர் நம்மையே அறியாது "மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல.." என்று ஏதேனும் ஒரு திரைப்படப் பாடலை (பாத்ரூம் பாடகர்கள்) முணு முணுப்பது உண்டு. காலையில் நாம் எந்தப் பாடலை ஆரம்பிக்கின்றோமோ.. அந்தப் பாடலை அன்று முழுவதும் நம்மையே அறியாது பாடிக்கொண்டு இருப்போம். இதை நீங்கள் கண்டிப்பாக அனுபவித்திருப்பீர்கள்.

மேற்சொன்ன பத்திகளின் சாராம்சம் உணர்த்துவது என்ன? . அதிகாலை நேரமும், (இரவில்) படுக்கச்செல்லும் நேரமும் நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் நான் சொல்ல வந்த உண்மை.

இந்த முக்கிய நேரங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், ஜெயம் என்பது நமக்கு கிட்டும் கனியே.

எனவே, உறங்கச் செல்லும்முன் ஒன்று செய்வோம்.. இறைவனை வணங்கி விட்டு அல்லது தன்னம்பிக்கை தரும் விசயங்களை படித்து விட்டு உங்கள் உடலை தளர்ந்த நிலையில் படுக்கையில் கிடத்துங்கள். உயரமான தலையணையை உபயோகிக்காதீர்கள். தலையணை இல்லாமல் படுப்பதே சிறந்தது எனினும் நாம் உயரம் குறைவான தலையணையை- யாவது உபயோகிக்க முடியும். கண்களை அழுத்தி மூட வேண்டாம். அன்று நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களை மனதில் அசை போடுங்கள். எது உங்களுக்கு மிக்க மகிச்சியை அளிக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இப்போது உங்கள் எண்ணங்களை உங்களது இலட்சியம் நோக்கி திருப்புங்கள்.

உங்கள் வாழ்க்கை எப்படி திகழ வேண்டும்? உங்கள் இலக்கு என்ன? என்பதை மனைதில் அசைபோடுங்கள். நீங்கள் உங்கள் இலட்சியத்தை அடைந்ததாகவே கற்பனை செய்து, ஒரு வெற்றி வீரனைப்போல் உங்கள் நினைவில் பவனி வாருங்கள்.

அதேபோல் படுக்கையில் இருந்து எழும்முன் "இந்த நாள் இனிய நாளாக அமையும், இந்தநாள் முழுதும் நான் உற்சாகமாக இருக்கப்போகிறேன்." என்று மனதில் நினைத்து அல்லது வாய்விட்டுச் சொல்லி எழுங்கள்.

உங்கள் ஆழ்மனம் உங்களது நம்பிக்கைச் சிந்தனைகளை வசீகரிக்க ஆரம்பிக்கும். விடியும் காலை உங்களுக்கு வெற்றியின் காலையாக இருக்கும். இதை இன்று பயிற்சி செய்துவிட்டு உங்கள் அனுபவத்தை எனக்கு பின்னூட்டம் இடுங்கள்.

உங்கள் கனவுகள் உங்கள் நினைவுகளைவிட அதிகமாக அதிகமாக உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதற்காக "வேலை செய்யாமல் இரு " என்பது அர்த்தம் அல்ல.

உங்கள் கனவு உங்களை செயல்பட வைக்கும். உங்கள் இலட்சியத்தை அடைவதற்கான வாய்ப்புகளை உங்கள் முன் கொண்டு வரும்.

கீதையில் "எதை நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறாய்" என்ற வாக்கியம் போல். நாம் நினைத்ததை அடைய முடியும்.

நினைத்தை அடைய வழி இங்கு இருக்கும் போது..ஏன் இன்னும் நாம் நினைப்பதை தள்ளிப் போட வேண்டும்?

உலகில் வெற்றி பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்பார்த்தால். அவர்கள் தங்கள் வெற்றியைக் ,கனவில் கற்பனை செய்ததாகவே கூறுவர்.

ஒலிம்பிக்கில் ஓடும் வீரர்களுக்கு மேலைநாடுகளில் கனவு காண்பதற்கு என்றே தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சச்சின் டெண்டுல்கர் தனது பேட்டி ஒன்றில் ,"நான் களம் இறங்கும் நாளின் காலையில் , அந்த மைதானத்தில் நன்கு விளையாடுவதுபோல், எண்ணற்ற ரன்களை குவிப்பதுபோல் மனதில் நினைத்துக் கொள்வேன் " என்றார். அதுதான் அவரை கிரிக்கெட்டில் ஒரு சாதனைச் சிகரமாக திகழ வைக்கிறது.

பல உயரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் அடிப்படையாக இருந்தது இந்த கனவுதான். கனவினை காணாதவன் நினைவு இழந்தவன்.

நமது குடியரசுத் தலைவர் மாண்புமிகு அப்துல்கலாம் மாணவ சமுதாயத்திற்கு திரும்பத் திரும்ப வலியுறுத்துவது " உயரிய கனவு காணுங்கள்" என்பதே ஆகும் .

எனது அருமை அன்பர்களே, அதையே இங்கே நான் வலியுறுத்த விரும்புகிறேன். கனவைத் தேர்ந்தெடுங்கள்! உங்கள் கனவு உயரிய நோக்கம் கொண்டதாய் இருக்கும் வகையில் தேர்ந்தெடுங்கள்!

4 Comments:

  • At 12:57 PM, Blogger NambikkaiRAMA said…

    அருமை அன்பர்களே! இன்னும் இரண்டு வாரங்களுக்கு "ஆளுமைப் பயிற்சி" வழங்கச் செல்ல இருப்பதால். "ஜெயமே ஜெயத்தின்" அடுத்த பதிப்பு இரண்டு வாரங்களுக்குப்பின் இடம் பெறும். நன்றி.

     
  • At 8:26 PM, Blogger வீ. எம் said…

    //மிட்நைட் மசாலா /
    /

    எந்த காலத்துல இருக்கீங்க..?? ஹ்ம்ம்ம்..
    இதெல்லாம் இப்பொ இல்லை.. STOPPED

    //Evil Dead போன்ற படங்களையோ, குற்றம், க்ரைம் டைரி,//

    ஓசை னு ஒன்னு ராஜ் டிவில வருது.. 10.05 - 10.30.. பாருங்க.. :)


    //விரும்புகிறேன். கனவைத் தேர்ந்தெடுங்கள்! உங்கள் கனவு உயரிய நோக்கம் கொண்டதாய் இருக்கும் வகையில் தேர்ந்தெடுங்கள்!/
    உயரிய நோக்கம் உடையதாக தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல... அதை அடையம் நல்ல வழியும் தேர்ந்தெடுத்து செயல்படுத்துங்கள்.. இல்லை கடைசி வரை கனவு தான்..

    சமிபத்துல போன 10 நாள் project management training விளைவு.. ஹி ஹி ஹி ..

    மிக அருமையான பகுதி ராம்... மற்ற பகுதிகளை விட இது ரொம்ப பிடித்திருந்தது.. தொடருங்கள்..

     
  • At 1:29 PM, Blogger NambikkaiRAMA said…

    தங்களது அருமையான விமர்சனத்திற்கு மிக்க நன்றி.

     
  • At 6:04 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    எங்கப்பா அடிக்கடி சொல்வாங்க நல்லதா நினைச்சிட்டு படுத்து தூங்குடா. என்னவெல்லாம் ஆகணும்னு நினைக்கிறியோ அதெல்லாத்தையும் நினைச்சுக்கோன்னு சொல்வாங்க.

    எனக்கென்னவோ படுத்த உடனே தூக்கம் தான் வருது.

     

Post a Comment

<< Home