PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Tuesday, August 30, 2005

மனம் என்பது...

ஜெயமே ஜெயம் - 3
மனம் பற்றி அறியும் முன், நாம் உண்மையிலேயே மனம் திறந்து அதைப்பற்றி அறியத்தயாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மூன்று வகை மனம் பற்றி நாம் அறிவோம்.
1. தனிமனம்
2. ஆழ்மனம்
3. பிரபஞ்ச மனம்.

இதைப்பற்றி சுருக்கமா சொல்லுறதுங்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். பயிற்சி மூலமாகத்தான் இதை உணரமுடியுமே தவிர வெறும் படிப்பு மூலமா உணர முடியாதுதான் . இருந்தாலும் மேலோட்டமா இப்ப தெரிஞ்சுக்கிட்டா பின்னாளில் உபயோகப்படும். அதுசரி! எல்லோர்க்கும் பள்ளியில் இதைப் போன்ற அனுபவம் வெவ்வேறாய் இருந்திருக்கும்.

ஆசிரியர்: என்னடா நான் சொன்னது காதுல நுழைஞ்சிச்சா?
மாணவன்: சார்! வால் மட்டும் நுழையிலே சார்!
ஆசிரியர்: ???? :-(

தனிமனம் என்பது conscious mind/state.. நாம இப்போ நினைச்சிட்டு இருக்கிறது. உதாரணமா இந்த நிமிஷம் இதைப்படிச்சிட்டு இருக்கும் போதே நம்ம சிந்தனை வீட்டை நோக்கிப் போகும் ...

"ஆபீஸ் விட்டு வரும்போது டெய்லர் கடையில தைக்க கொடுத்த துணியை வாங்கிட்டு வந்திடுன்னு அம்மா சொன்னாங்களே... "

"போன வெள்ளிக்கிழமை மீனா என்னைப் பார்த்து சிரிச்சாளே :) எதுக்கு சிரிச்சா? அதுவா இருக்குமோ?"

"சேச்சே நம்ம PL -லோட பெரும் ரோதனையா போய்ச்சே , மனுசன் பிராணனை வாங்குறானே!"

இப்படியாக நமது சிந்தனை ஒரு ரவுண்ட அடித்தபடியே இருக்கும். அதே சமயம் உங்கள் வேலையையும் கவனித்து கொள்வீர்கள். இந்தக் கட்டுரையையும் படித்துக் கொள்வீர். இன்னும் அழகாகச் சொல்லப்போனால் உணர்வு நிலையில் உள்ள மனம் அல்லது விழிப்புநிலை எனலாம். நமது ஐம்புலங்களின் செயல்பாட்டுக்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் உண்டு.

அதே சமயம் இவங்களுக்கெல்லாம் கெட் ஆபீஸ், நம்ம கேப்டன் மூளைதான். மனசு பற்றி பேசும் போது மூளை பற்றி பேசுவதும் தவிர்க்க முடியாததுதான். இந்த ஐம்புலங்களின் உணர்வுகளின் தகவலைப்பெற்று அதற்கு ஏற்ற பதில் நடவடிக்கைக்களை எடுக்கவைப்பது மூளைதான். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலைச் செய்பவர். இந்த மூளையைப் பற்றி மற்றொரு சமயம் விரிவாகச் சொல்றேன்.

என்னங்க, டாபிக் கொஞ்சம் கஷ்டமா இருக்கிறது போல இருக்குதுல. . அதற்கும் நம்ம மனசுதான் காரணம்.

விஞ்ஞான முறைப்படி மூளைதான் மனசு என்பார்கள். மெய்ஞ்ஞானப்படி பார்த்தால் மனசு அதற்கும் மேல். ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா, இப்படி நாம் பலவற்றை அறிவோம்.

மனசுங்கிறது தாவித் தாவி போறதுனால குரங்கு மனசுன்னு சொல்றது உண்டு "தத்தித்தாவுது மனமே...., அலைபாயுதேன்னு" நாம் பாட்டுப் பாடுறதும் உண்டு. இதுவரைக்கும் வாசித்த உங்களுக்கு இப்போ தனிமனம்னா என்னன்னு நிச்சம் புரிய ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

அடுத்ததா நாம் பார்க்குறது ஆழ்மனம்! விஞ்ஞானரீதியா சொன்னா subconscious mind/ state . அது எப்படி இருக்கும்? அதன் தன்மை என்ன என்பதை நீங்கதான் சொல்லப் போறீங்க . ஒரு சின்ன உதாரணம்.

"நம்ம வீ.எம் இருக்காரே அலாரமே வைக்காம காலை-ல 5 மணிக்கெல்லாம் டான்னு எந்திருச்சிருவாருடா, எப்படித்தான் முடியுதோ..நமக்கெல்லாம் உச்சிவெயில் நெத்தியில் பட்டால்தான் முழிப்பே வருது"

"பேய் பிசாசு மேல எனக்கு நம்பிக்கை இல்லைதான் இருந்தாலும் , ராத்திரி 2.30 மணிக்கு இரண்டாம் ஆட்டம் பார்த்துட்டு வரச்சே இருட்டுல ஏதாவது அசஞ்சா கூட குப்புன்னு வேர்க்குது மச்சி"

" அட மாப்ளே! நீயாவது பரவாயில்ல! அன்னைக்கு அந்த பஸ் ஆக்ஸிடன்ட்டை பார்த்ததில் இருந்து எனக்கு பஸ்ஸைகண்டாலே எமனைப் பார்ப்பது போல இருக்குதுப்பா"

மேற்சொன்னவை நமக்கு மிகப்பழக்கமான வசனங்கள்தான். இது எப்படி சாத்தியம்?

நமது தனிமனம் ஓய்வு எடுக்கக்கூடியது , அலசி ஆராயும் தன்மையுடையது.
"ராம் இது சரி! இது தவறு! நீ இப்படி போகாதே! இதையே செய்" என்றெல்லாம் நமக்குள் ஒலித்து/ஒளிந்து கொண்டு இருக்கும் மனசாட்சியின் வேலையை செய்வது இதுதான் எனலாம். மனசாட்சியும் இதுவும் ஒன்றெனவும் கொள்ளலாம்.

ஆனால் ஆழ்மனம் அப்படியில்லை. இதற்கு ஓய்வே கிடையாது. நாம் உறங்கிக் கொண்டு இருந்தாலும் ஆழ்மனம் விழித்துக்கொண்டு இருக்கும். இதற்கு நல்லது கெட்டது தெரியாது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இதில் பதிவுச் செய்யப்படுகிறது.

ஆழ்மனம் வித்தியாசமானது.. எதை விதைகிறோமோ அதை அப்படியே அறுவடை செய்யக் கூடியது. கர்மா விதி மாதிரி..இதில் நாம் நெல்லைப் போட்டா நெல்லு முளைக்கும்! புல்லை போட்டால் புல்லுதான் முளைக்கும்(அப்ப குவார்ட்டர் போட்டா என்னன்னு யாரும் இங்கே கேள்வி கேட்கப் பிடாதாங்கும்), நெருஞ்சி முள்ளைப்போட்டா முள்ளுதான் முளைக்கும்.

எதைக் கேட்டாலும் தரக்கூடிய இந்த ஆழ்மனதின் ஆழத்தை நாம் உணர்வது இல்லை. அதை உணர்ந்திட நாம் முயல்வதும் இல்லை.

தத்துவமசி, நீயே அது, உன்னையே நீ அறிவாய் போன்ற தத்துவங்கள் எல்லாம் இதற்குள் அடக்கம். "சரி ராமா! இதெல்லாம் இந்த ஜெயமே ஜெயத்தில எதுக்குன்னு கேட்கிறீங்களா?"

அடுத்த ஜெயத்தில் சொல்கிறேன்!

Saturday, August 20, 2005

தனித்து நில்லுங்கள்!

ஜெயமே ஜெயம் - 2
வெற்றித் தேவதையை இந்நேரம் எல்லோரும் காதலிக்கத் தொடங்கி யிருப்பீர்கள் என்று நம்புகிறேன். சரி விசயத்திற்கு வருகிறேன்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா என்று சந்தேகம் ஏற்பட்ட பாண்டிய மன்னனுக்கு மீண்டும் ஒரு சந்தேகம் எழுந்தது. உடனே தனது நெருக்கமான மந்திரியை அழைத்தார். "மந்திரியாரே, நான்
இந்த நாட்டையே ஆளுகின்ற அரசன்..ஆனால் எனது வீட்டை ஆள முடிய வில்லையே.. அல்லி ராஜ்யம் அல்லவா என் வீட்டில் நடக்கிறது ..உமது வீட்டில் எப்படி? " என்று கேட்டார். அதற்கு மந்திரியாரும் ,"அரசே! வீட்டிற்கு வீடு வாசல் படிதான் " என்றார்.

அரசரால் இதை ஒப்புக்கொள்ளமுடியவில்லை, "நமது நாட்டில் திருமணமான எல்லா ஆண்களும் பெண்களுக்கு அடிமையா? ஒருபோதும் இருக்காது. நிச்சயம் பல ஆண்சிங்கங்கள் இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் துணிச்சலுக்கு நான் பரிசு வழங்கப்போகிறேன்" என்றபடி அந்த நாட்டில் உள்ள திருமணமான இளையவர் முதல் முதியவர் வரை அனைவரும் அரசின் பிரதான மைதானத்தில் கூடும் படி அறிவிப்புச் செய்தார்.
அனைத்து ஆண்களும் மைதானத்தில் கூடினர். ஒருவரை ஒருவர் மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டனர். அரசர் மாடத்திற்கு வந்தார். கூட்டத்தினை நோக்கி, " மனைவி சொல்லையே கேட்டு நடப்பவர்கள் என் இடது கை பக்கம் வாருங்கள், மற்றவர்கள் எனது வலது கை பக்கம் வாருங்கள்" என்று உரக்கச் சொன்னார்.

கூட்டதில் சலசலப்பு ஏற்பட்டு அரசர் சொன்னபடி செய்தனர். அரசரின் இடது கைப்பக்கம் அவ்வளவுபேரும் வந்துவிட்டனர். ஒரே ஒருத்தன் மட்டும் வலது கைபக்கம் நின்று கொண்டு இருந்தான்.

அரசனுக்கோ பெரும் மகிழ்ச்சி.. அப்பாடா! இவன் ஒருத்தனாவது நமது ஆண் வர்க்கத்தின் மானம் காத்தானே என்று அழைத்து அவனுக்கு பொன்னும் பொருளும் வாரி வாரி வழங்கினான். அந்த மனிதனோ செய்வதறியாது தவித்தான். மந்திரியார் அவனைக்கண்டு ஆச்சரியப்பட்டு போனார். " ஏனப்பா! ஊரே ஒருபக்கம் கூடி நிற்கும் போது..நீ மட்டும் தனியாக எதுக்குப்பா நின்னே?" என்று கேட்டார்.

அதற்கு அவன் ,"மாண்பு மிகு மந்திரியாரே, என் மனைவி கூட்டமாக உள்ள இடங்களில் நிற்காதே என்று சொல்லியுள்ளாள்" என்றானே பார்க்கலாம் :))

ம்..ம். நான் சொல்ல வந்த தனித்து நில்லுங்கள் என்பது இதுவல்ல.

பின் எதுவாம் என்று கேட்கிறீர்களா?

தனித்து நில்லுங்கள் என்றால் தனித்துவமாய் இருத்தல் அல்லது வித்தியாசப்பட்டு இருத்தல் என்று பொருள் கொள்ளலாம்.

பஸ் ஸ்டாப்பில் , பீச்சில், பார்க்கில், கல்லூரி அருகில் சிலரை நாம் இப்படி பார்த்திருப்போம். "தலை முடியை அந்நியன் (விக்ரம் கோபிச்சுக்கப் போறார்) போல் வளர்த்து இருப்பார்கள். கொஞ்சம் கூட பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்து இருப்பார்கள். மற்றவர்களை கவர்ந்திட வேண்டும் என்று விதவிதமான சேட்டைகள் (லொள்ளு+ ஜொள்ளு) செய்வார்கள். வித்தியாசமான வாகனத்தில் மிகமிக வேகமாக காற்றைக் கிழித்துச் செல்வார்கள். இதெல்லாம் நான் சொல்ல வந்ததிற்கு உதாரணமாய்க் கொள்ள முடியுமா?

சமீபத்தில் கூட ஒரு தொலைக்காட்சி செய்தியில், மாணவர்களின் கல்வி இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இரண்டு மாணவர்கள் தீக்குளிக்க முற்பட்டதையும் அதைக் காவலர்கள் தடுத்ததையும் காட்சிகளாகக் கண்டிருப்பீர்கள். இதைப்போன்று கட்சிக்காக தீக்குளிக்கும் தொண்டர்களையும் நாம் பார்த்திருப்போம்.

இந்தமாதிரி செய்யும் முட்டாள்தனங்கள் எல்லாம் வித்தியாசப்படுதல் என்பதற்கு உதாரணமாகுமா? நிச்சயம் இல்லை. இவையெல்லாம் விளம்பரப் பிரியத்தால் செய்யப்படுபவை. தான் எப்படியாவது மக்கள் மத்தியில் செய்தியாகிவிட வேண்டும் என்ற வெறித்தனத்தில் செய்யப்படுபவை. ஒருவித மனோவியாதி!

அப்படியானால் "தனித்து நில்லுங்கள்" என்ற தத்துவத்தின் பொருள் என்ன?

மற்றவரிடம் இருந்து சற்று வித்தியாசப்படுதல். அது உங்களின் அணுகுமுறையைத் தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்? நாலுபேர் சந்திக்கும் இடத்தில், சந்தித்து திரும்பும் போது, உங்களைச் சந்தித்தவர்கள் உங்களைப் பற்றி சிந்திக்கும் படி ( நேர்மறையான முறையில்) இருக்கவேண்டும்.

"பாலாவா அவன் Great ப்பா , அவன் ஒரு வித்தியாசமானவன்பா"

"யாரு நம்ம சுரேஷா! அவன் என்ன சொன்னாலும் கரெக்ட்டா இருக்கும்."

"நம்ம கோபி மாதிரி வருமா?"

"ஜோதி - ஐ பார்த்தாலே கையெடுத்து கும்பிடுனும்போல இருக்கும்."

"சூப்பர் ஸ்டாருன்னா சூப்பர்ஸ்டாருதான் அவரு ஸ்டைலே கலக்கல்"

" நம்ம தலைவர் போல வருமா அவரு பேசுற தமிழே தனி - ப்பா"

" அவன்கிட்ட ஏதோ ஒரு ஃபயர் இருக்கு? அதான் ஜெயிச்சுக்கிட்டே இருக்கான்"

"நம்ம சுஜாதா என்னம்மா எழுதுறாரு"

இந்த மாதிரியான வாசகங்களை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் சந்தித்திருப்போம். அவற்றை ஆற அமர சிந்தித்தால் "தனித்து நில்லுங்கள்" என்று நான் சொல்ல வந்ததின் பொருள் புரிய ஆரம்பித்திருக்கும்.

ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்ற மனிதர்களை அலசிப்பாருங்கள். அவர்கள் தனித்து நின்றிருப்பார்கள். தங்களின் தனித்துவத்தாலே மாபெரும் வெற்றியைப் பெற்று இருப்பார்கள்.

"அய்யகோ! நான் எப்படி தனித்துவமாய் விளங்குவது?" என்று சோர்ந்துவிட வேண்டாம். நல்ல அமைதியான சூழலில் நமது ஆழ்மனதினை தூண்டினால் நம்மிடம் இருக்கும் தனித்துவம் நமக்கு புலப்படும்.

அது என்ன ஆழ்மனம்?

மொத்தம் மூன்று மனங்கள் உள்ளன. சிலருக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கும். ...ப்பூ இதத்தானே சொல்லப்போரே என்று சிலர் நினைக்கலாம். அப்படிப்பட்டோருக்கு எனது கேள்வி "எத்துணை பேர் அதை உணர்ந்திருக்கிறீர்கள்?" என்பதுதான்.

"அட போப்பா எனக்கு இருக்குறதே ஒரே ஒரு மனசுதான் அதையும் நீ வெற்றித்தேவதையை காதலி காதலின்னு சொன்னீயே..அதான் அவக்கிட்ட கொடுத்துட்டேன் என்கிறீர்களா? :))

அப்படியானால் உங்களுக்கு இனி ஜெயம்தான்!

அடுத்த ஜெயத்தில் சந்திப்போமா :-)

Wednesday, August 17, 2005

ஜெயமே ஜெயம் - 1 சுயமுன்னேற்றத் தொடர்

எந்தைக்கும், என் தாய்க்கும், என் சிந்தையை சீரமைக்கும் ஸ்ரீவை குருநாதர் ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமிகளுக்கும் வந்தனை சொல்லி , எல்லாம் வல்ல ஸ்ரீராமதூதன் பாதம் பணிந்து "ஜெயமே ஜெயம்" என்ற இந்த உற்சாகத் தொடரை துவங்குகின்றேன். இந்த தொடர் நம்பிக்கை கூகுள் குழுமத்திலும் இடம் பெறும்.


நம்பிக்கை நண்பர்களுக்கும், வலைப்பூ நண்பர்களுக்கும் எனது வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்! அன்பின் நண்பர்களே! யான் சிந்தித்த சந்தித்த கருத்துக்களை கற்ற பெற்ற விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகின்றேன். உங்கள் ஆலோசனைகள் என்றென்றும் ஏற்றுக் கொள்ளப் படும். உங்கள் விலை மதிப்பற்ற நேரத்தை இங்கே பகிர்ந்து கொள்வதற்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் உங்கள் நேரம் இங்கே வீணாகிவிடாது என்ற உறுதியோடு இத்தொடரை ஆரம்பிக்கின்றேன்.

ஜெயமே ஜெயம்- 1

நாம் இந்த மண்ணில் மனிதனாய் பிறந்திருக்கின்றோம். அடுத்தப்பிறவி உண்டா இல்லையா என்பது நமக்குத் தெரியாது.. அடுத்தப் பிறவியின் அனுபவங்களையோ, முற்பிறவியின் அனுபவங்களையோ நம்மால் இப்போது உணர முடியாது. அப்படியானால் இந்த நிமிடம் இந்த உலகம் இந்த பிறப்பு மட்டுமே நமக்கு இப்போதைக்குச் சொந்தம்.

ஆக, இந்த இனிய பிறப்பு வளமுடன், செல்வச்செழிப்புடன் மகிழ்வுடன் இருக்க வேண்டாமா? வாழ்க்கையில் வசந்தம் வீச வேண்டாமா? செல்லும் இடம் எல்லாம் சிறப்பு வேண்டாமா? நமைக் கண்டோர் எல்லாம் மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டாமா? எங்கும் எதிலும் ஜெயமே என்ற செல்வாக்கு நமக்கு வேண்டாமா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் வேண்டும் என்று சொல்பவர்களே! உங்களுக்கு எனது உற்சாகக் கரகோஷத்தை எழுப்புகிறேன்.முதலில் ஒரு விசயத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். "அவனருளாலே அவன் தாள்" பணிந்து என்று சிவபுராணத்தில் ஒரு வரி வரும். அதாவது இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே அவனை வணங்கிட முடியும். இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால்.. ".

பல நேரங்களில் நாம் இதை அனுபவித்திருப்போம் , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ அல்லது கோவிலுக்கோ நாம் இத்தனை மணிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருப்போம் ஆனால் அப்படி செல்ல முடிவதில்லை. ச்சே.ச்சே.. இன்று போக முடியவில்லையே என்று பின் வருத்தப்பட்டிருப்போம்.

நீங்கள் கோவிலுக்குச் சென்று இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள் ளுங்கள்.." அது உங்கள் செயல் அல்ல. இறைவன் உங்களை தன் சந்நிதிக்கு வரவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான் அதனால்தான் சென்று உள்ளீர்கள் என்பது இதன் பொருள்

அதுபோல்தான் வெற்றியும். இவளும் ஒரு தேவதைதான்.

Image hosted by Photobucket.com


நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால் அந்த வெற்றித் தேவதை உங்களை நோக்கி வரவேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும்.

"என்னடா பாசிடிவ் ராமா புதிர் போட்டு குழப்புகிறாயே " என்றுதானே நினைக்கின்றீர்கள்!

(அது எப்படி ராமா கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்ட என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.) "காக்கா நோக்கறியும் கொக்கு டப் அறியும்னு " ஒரு பல மொழியே உண்டுங்க! நானு கொக்குங்க!

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உங்கள் அன்பன் நான் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளேன்.இதை தற்பெருமைக்காக நான் சொல்ல வில்லை. பல பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டுள்ளேன். அன்பர் சுரேஷ் பாபு தன் வலைப்பூ கட்டுரையில் குறிப்பிட்டது போல எல்லா Work shop களிலும் ஒரே விசயத்தைதான் மாற்றி மாற்றி தருகிறார்கள். நம்பிக்கை குழுமத்தில் நம்ம டோஸ் டாக்டர் செந்தில் தந்த டோஸ் போல் இந்த டோஸ் , திரும்பத் திரும்ப நமக்கு தேவைதான். அது நம்மையும் அறியாது நம்முள் உரம் ஏற்றி விடும்.

சரி சரி விசயத்திற்கு வருகின்றேன், "வெற்றித் தேவதை என்னை நினைக்க வேண்டுமா? அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்ற கேள்வி நமக்கு எழுவதில் ஆச்சரியம் இல்லைதான்.

ரொம்ப ரகசியமான வழி ஒன்று உங்களுக்காகச் சொல்லுகிறேன்.

பேசாமல் வெற்றித் தேவதையை காதலியுங்கள்.



"..த்தோடா..இப்புடி சொல்லிட்டா எப்படி? காதல் கீதல்லாம் நமக்கு ஒத்து வராதுப்பா " என்கிறீர்களா? ம் .. ம்.. இன்னா பாஸ் இதையெல்லாம் சொல்லியாத் தரணும்? கரும்புத்தின்ன கூலியா? இந்த கதைதான வேண்டாம்கிறது :-)

"சரி ,சரி நான் காதலிக்கிறது இருக்கட்டும் ! அந்த வெற்றித் தேவதை என்னைக் காதலிப்பாளா?"

ஆம் நண்பர்களே! நிச்சயம் அவள் உங்களைத் தேடித் தேடி வருவாள். அது உங்களோட உறுதியைப் பொருத்தது. உங்களோட பர்சனாலிட்டியைப் பொருத்தது.

பர்சனாலிட்டியா அது என்ன விலை? எங்கே கிடைக்கும் என்று என்னைக் கேட்டு விடாதீர்கள்.? காதலுக்கு கண் இல்லைங்க! நம்ம வெற்றித் தேவதையும் அப்படித்தான். அவ உங்களோட புற அழகை விரும்புவது இல்லை. உங்களோட அக அழகைத்தான் ரொம்பவே விரும்புவாள். உங்கள் அகம், அழகாக அழகாக புறமும் அழகாகிவிடும்.

இப்ப சொல்லுங்க! வெற்றித்தேவதையை காதலிக்க நான் ரெடி? நீங்க ரெடியா? :)

ஜெயம் தொடரும்...