PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Friday, January 27, 2006

மன உளைச்சல்

ஜெயமே ஜெயம் - 12
"பில்கேட்ஸ் முதல் பில்கட்டமுடியாத கேஸ் வரை" அனைவருக்கும் பொதுவானது இந்த மனவுளைச்சல். இதை மன அழுத்தம்(அ)மன இறுக்கம்(Stress) என்றும் நாம் சொல்கிறோம். மன உளைச்சல் இல்லாதவன் இருக்கவே முடியாது. மனஉளைச்சலை நீக்க முடியாது .ஆனால், அதை சரிவர நிர்வகிக்க முடியும் . அதனை நிர்வகிக்கும் திறனைப் பொறுத்து நாம் மாறுபடுகிறோம். ஆகவேதான், Stress Management என்று சொல்கிறோம்.

அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், உறவுமுறைப் பிரச்சனைகள், எதிர்மறையான எண்ணங்கள், குற்ற உணர்வு, சுயமரியாதையின்மை, அளவுக்கு அதிகமான உழைப்பு, பணிச்சுமை, உடல் நலக்குறைவு போன்றவைகள் மன அழுத்ததை அதிகப்படுத்துகின்றன.

நோயும் மனவுளைச்சலும் தாயும் சேயும் போன்றது. ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டது.

"ச்சே.. இன்னைக்கு தலை ரொம்ப பாரமா இருக்குது" ,"எனக்கு மூடே சரியில்லை" என்ற வார்த்தைகள் நமது மனவுளைச்சலின் வெளிப்பாடுதான். நற நற என் பற்களைக்கடிப்பதும், நகத்தை கடித்து துப்புவதும் பின் 'அய்யோ' என விரலில் கடிபட்டு அலறுவதும் மனவுளைச்சலால்தான்.

Image hosting by Photobucket
மனவுளைச்சலால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டால்

1. இரத்தக் கொதிப்பு
2.இதயக் கோளாறு
3.தோல் சம்பந்தமான நோய்கள்
4.தலைவலி
5.உடல் குடைச்சல்
6.அஜீரணம்,வயிற்றுப்போக்கு
7.நரம்புத் தளர்ச்சி
8.அலர்ஜி
9.ஆஸ்துமா
10. மாதவிடாய் பிரச்சனைகள்
11.தூக்கமின்மை
12. மலச்சிக்கல்

என்று மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களின் பட்டியலைப் பார்க்கும் போது..இதை நிர்வகிக்கும் திறனை நாம் பெறாவிட்டால் இந்த நோய்கள் நம்மை நிர்வகித்துவிடும் என்பதை அதிர்ச்சியுடன் அறியமுடிகிறது.

சரி, விசயத்திற்கு வருகிறேன்.

'மனவுளைச்சலுக்கான மூல காரணகர்த்தா யார்?'என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கு காரணம், சாட்சாத் நாமேதான்.

மனக்கவலைதான் மனவுளைச்சலின் ஆதாரம்.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது போல் நாமேதான் காரணம் ஆகிறோம்.

அதாவது நாம் எப்போது தோல்வியடைந்ததாய் (அ) அவமானப்படுத்தப் பட்டதாய் (அ) Ego பாதிப்பினை அடைகிறோமோ ..அப்போதே மனவுளைச்சல் மகராஜா நம் மகுடம்மீது ஏறிக்கொள்கிறார்.

ஒரு இந்திய சன்னியாசியை வெள்ளையர்கள் கடுமையாகக் கேலி செய்தார்கள்..அவரோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை.. அவர்கள் மென்மேலும் கேலி செய்து இந்த சன்னியாசிக்கு கோபத்தை தூண்டவேண்டும் என்று முயன்றார்கள் . சன்னியாசி அசரவே இல்லை. பொறுமை இழந்த வெள்ளையர்கள் உமக்குச் சொரணையே கிடையாதா, உன்னை எவ்வளவு திட்டு திட்டினோம் உன்பாட்டுக்கு இருக்கிறாயே?" என்று கேட்டனர்.

அதற்கு சன்னியாசி தனது கையில் வைத்திருந்த பிச்சைப் பாத்திரத்தை எடுத்து 'இதை வாங்கிக்கொள்ளுங்கள்' என்றார்..

வெள்ளையர்கள் முடியாது என்றனர்.

சிரித்தபடியே சன்னியாசி சொல்லலானார்," நான் கொடுத்தப் பொருளை நீங்கள் வாங்காததினால் அது இன்னமும் என்னிடமே இருக்கிறது..அதுபோல் உங்களது வசவு சொற்களை நானும் வாங்கவில்லை" என்றாராம்.

இந்தக்கதை நாம் அறிந்த ஒன்றுதான்.

"நாம் அனுமதிக்காதவரை நம்மை யாரும் பைத்தியம் ஆக்கிவிடமுடியாது" எனவே, அடுத்தவரின் எதிர்மறை விமர்சனத்திற்காக வீழ்ந்து போகாதீர்கள்.

இதையும் மீறி நாம் மனவுளைச்சலுக்கு உள்ளானால் அருமையான தீர்வு உள்ளது அதுதான் தியானம்.

பிரார்த்தனை, தியானப்பயிற்சி, பிராணாயமா, உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைக்கின்றது. நமது மனதைச் சுத்தப்படுத்துகிறது. ஆனால் இதுவே அதிகமானால் அதுவே அழுத்தமாகி விடும். இது, அது, எது? என்று என்னைக் கேட்காதீர்கள்.

நம்மில் பெரும்பாலோர் பெரும்பான்மையான நேரம் அலுவலகத்தில்தான் இருக்கிறோம். பிரச்சனை அங்கே அதிகமாகத்தான் இருக்கும். சக ஊழியரிடம், மேலதிகாரியுடன், நமக்குக்கீழ் உள்ளவர்களுடன் என்று பட்டியல் நீளத்தான் செய்யும். அதற்காக நீங்கள் நொடிந்து நூலாக வேண்டாம். பிரச்சனையை நூடுல்ஸ் ஆக்கி ருசியுங்கள்.

அலுவலகப் பிரச்சனைகளை வீட்டிற்கோ, வீட்டுப் பிரச்சனைகளை அலுவலகத்திற்கோ சுமந்து கொண்டு செல்லாதீர்கள்.

இல்லையெனில் இரண்டு இடங்களிலுமே தொல்லைதான்.

மன உளைச்சலை நிர்வகிக்க மற்றொரு யுக்தி மனதை மற்றொரு பக்கம் திருப்புதல் என்பேன்.

சிலர் இருக்கிறார்கள் மனவுளைச்சலை போக்குகிறேன் பேர்வழி என்றபடி "நீலகிரி எக்ஸ்பிரஸ்சை" பக் பக் ..என்று வாய்வழியே விட்டுக்கொண்டு இருப்பார்கள்.. சிலரோ டாஸ்மாக்கில் மூழ்கி குளித்து பின்னர் அதுவே பெரும் உளைச்சலாய் ஆகிவிடும். இதெல்லாம் சீக்கிரமே எமராஜாவுக்கு அழைப்பு விடுக்கும் வழியே தவிர மனவுளைச்சலைத் தீர்க்காது.

இன்னொரு எளிமையான யுக்தி ஒன்றைச் சொல்கிறேன்..

பயிற்சி செய்துவிட்டு நீங்கள் அடைந்த பலனை எனக்கு கூறுங்கள்.

அந்தயுக்தி குழந்தைகளோடு விளையாடுங்கள் என்பதே!

(வலைப்பூ நண்பர் ஒருவர் தனது புத்தாண்டு தீர்மானத்தில் குழந்தைகளோடு விளையாடி அவர்களை ஜெயிக்கவிட வேண்டும் என்று எழுதியிருந்தார்.அவரை நான் பாராட்டியும் எழுதியிருந்தேன்)

சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படாதீர்கள். உங்கள் குழந்தையோடோ, அல்லது மற்ற குழந்தைகளோடோ ஒரு அரைமணி நேரம் விளையாடிப் பாருங்கள், ஒரு 5 வயது இளைத்து இருப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி பிறந்திருக்கும். உற்சாகமாய் இருப்பீர்கள்.

உங்களிடம் இருந்த மனக்கவலை எல்லாம் பறந்துபோய் இருக்கும்.இந்த முறையை எனது நண்பர்கள் பலர் பயிற்சி செய்து நல்ல பதில் சொல்லி உள்ளார்கள்.

சரி! விளையாட வாய்ப்பில்லையா, விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று வேடிக்கையாவது பாருங்கள்! அருமையாக இருக்கும்! இதற்கும் வாய்ப்பே இல்லையா குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியை ( Pogo Channel) பாருங்கள்.

நீங்கள் விற்பனை பிரதிநிதி ஆயின், சில நாட்களில் அதிகமான மனவுளைச்சலுக்கு உள்ளாகி இருப்பீர்கள். அந்த சமயம் நேரே வீட்டிற்கு சென்று ஒரு 10, 12 மணி நேரம் நன்றாக உறங்கி விழியுங்கள். புது ஆளாய் எழுந்திருப்பீர்கள். (இதையே செய்கிறேன் பேர்வழி என்று தினமும் நீங்கள் தூங்கினால் உங்க கதி பின்னர் அதோகதிதான்). நன்றாக் குளியுங்கள், பீச் , பார்க் என்று தனியே சென்று இயற்கையை ரசியுங்கள்.. இனிமையூட்டும் இசையை ரசியுங்கள், இல்லையெனில் உற்சாகமூட்டும் இசைக்கு நடனம் ஆடுங்கள்... ஆனந்தம் உங்களுக்கு உண்டாகும்.

மேற்சொன்ன முறைகளில் உங்கள் மன அழுத்தத்தினை நிர்வாகம் செய்யலாம்.. இன்னும் ஒரு யுக்தி இருக்கிறது அதுதான் "Relaxation Exercise Technique" இதை நான் பலருக்கு கற்று தந்துள்ளேன். உங்கள் பகுதியில் உள்ள திறமைவாய்ந்த சுயமுன்னேற்றப் பயிற்சியாளரிடம் இந்தப் பயிற்சி குறித்து கேட்டு கற்று கொள்ளுங்கள்.

அளவான சாப்பாடு, நிறைவான உறக்கம், நேர்மையான சிந்தனை, ஆரோக்கியமான சுவாசம் இவற்றை நாம் கொண்டு இருந்தால் நாம் மனவுளைச்சலை சாதுர்யமாக நிர்வகிக்க முடியும்.

மனவுளைச்சலை நிர்வகிப்போம் மகத்தான வாழ்வு வாழ்வோம்.

ஜெயம் வ(ள)ரும்...

Wednesday, January 11, 2006

நாலரைக்கே எழுந்து விடு!

0
நாலரைக்கே எழுந்து விடு
நல்லதையே நினைத்து விடு
ஐந்தரைக்குள் காலைக் கடன்
அத்துணையும் முடித்து விடு!
0

இம்மண்ணுலகை நீ காண
வரம் தந்த இறையோனை
மனந்தன்னில் தினம் கொண்டு
ஆறு(ம்) வரை தியானம் செய்!
0
விந்துவாய் இருந்த போதே
வீறுகொண்டு வெற்றி பெற்றாய்!
வேதனையை தூக்கி எறி
வெற்றியே உந்தன் நெறி!
0
சூரிய விடியல் காண்
சுகந்தநல் காற்றை சுவாசி
கூரிய மதியைக் கொள்
குறைவில்லா நூல்கள் படி!
0
ஆரிய திராவிடன் என்ற
அடிதடிகள் உனக்கு வேண்டா
சீரிய சிந்தனை கொள்
யாவரும் கேளீர் தானே!
0
ஏழுமணி ஆன பின்னும்
எழவில்லை நீ என்றால்
இழவுக்கும் உனக்கும் இங்கே
வித்தியாசம் எதுவு மில்லை!
0
எட்டுமணி நேரம் மட்டும்
உழைத்துவிட்டு மற்ற நேரம்
கள்ளுக்கும் கரும்புகைக்கும்
கட்டிலுக்கும் காசை யெல்லாம்,
0
கொட்டம் கொட்டி
தீர்த்து விட்டால் - ரத்தக்
கண்ணீர் வடிக்க நேரும்
எம்.ஆர்.ராதா படத்தைப் பார்!
0
உண்ணும் உணவும்
பண்ணும் பணமும்
சேமிக்க வேண்டும்
இல்லையேல் அதோ கதியே!
0
சிற்பம் வடித்திட
சிறந்தக்கல் வேண்டு மன்றோ
எட்டு ஒன்று எட்டென்று
மூவேளை முறையாய் உண்!
0
ஊதியத்திற்கு மேற்பட்ட
உழைப்பேதான் வெற்றி தரும்
அனுபவம் உனைச் சேரும்
ஆனந்த வாழ்வும் வரும்!
0
ஆதலினால் நானும் சொல்வேன்
நண்பனே நீயும் கேள்!
பேரிடர் வந்திடினும் -பின்
வாங்காதே தொடர்ந்து செல்!
0
இலட்சியம் நீயும் கொண்டால்
இலட்சங்கள் தானே வரும்!
அச்சம் தவிர் அன்பா
அகிலத்தை வெல்வாய் அன்பா!
0
விழுப்புண் இல்லா தவன்
வீரனாய் இருந்த தில்லை
காய்ந்திடா கரங்கள் இங்கு
உழைப்பினைச் சொன்ன தில்லை.
0
ஏ.சி யில் அமர்ந்த படி
கணினி பணி செய்பவனின்
மணிக்கட்டை உற்றுப்பார்
அவனுக்கும் காய்ப்பு உண்டு!
0
வடுக்கல் வழுக்கல் அன்று
வழுக்கலும் தீது அன்று
போதிய பாடம் கல்
போராடு ஜெயம் பெறுவாய்!
0
யானையையே சாய்த்து விடும்
எறும்பின் திறன் அறியாயோ- கிழட்டுப்
பூனையாய் இருக்காதே
கிளர்ந்தெழு! புலியாய் பாய்!
0
பதினோரு மணிக்கு எல்லாம்
படுக்கைக்குச் சென்று விடு
அன்றைய தினத்தை - சற்றே
சிந்தையில் அசை போடு!
0
நல்லவை செய்திருப்பாய்
அல்லவையும் செய்திருப்பாய்
அடடா! அடடே! என்றெல்லாம்
ஆலோசனைகள் பல தோன்றும்!
0
பன்னிரண்டு மணிக்கு மேலும்
படுக்கையில் விழிப்பு என்றால்
பலான எண்ணம் தோன்றும்
பல(ம்)ன் அனைத்தும் அற்றுப் போகும்!
0
ஆதலின் அன்பனே கேள்!
அலைபாயா மனதைக் கொள்
ஆண்டவன் திருநாமந்தனை
மனதிலே ஜெபித்த படி
படுத்தவுடன் தூங்கிப்போ
அதிகாலை மீண்டு(ம்) எழ!

Tuesday, January 10, 2006

இலக்கை நிர்ணயித்தல்!

ஜெயமே ஜெயம் - 11
புத்தாண்டு அன்று நம்மில் பலர் எடுக்கும் புத்தாண்டு இலட்சியம் குறித்துதான் இந்த இதழில் பார்க்கப் போகிறோம்.

"இந்த ஆண்டு முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடப்போகிறேன்; இந்த ஆண்டுமுதல் குடிப்பழக்கத்தை விடப்போகிறேன்; இந்த ஆண்டு முதல் உடற்பயிற்சியை செய்யப்போகிறேன்; இந்த ஆண்டு அந்த கம்ப்யூட்டர் பயிற்சியை முடிக்கப்போகிறேன்; இந்த ஆண்டுமுதல் எனது குடும்பத்தாருடன் சண்டை போடாமல் இருக்கப்போகிறேன்" என்றெல்லாம் நம்மில் பலர் புத்தாண்டு இலக்கு நிர்ணயம் செய்வது உண்டு.

ஒரு 2 அல்லது 3 நாளைக்கு அதை சிறப்பாக செய்வார்கள். 5 ஆம் நாள் 'பழைய குருடி கதவை திறடி' என்றார்போல் தங்கள் கொள்கையில் இருந்து விலகி விடுவார்கள். இதற்கு என்னதான் காரணம்?சில மாணவர்கள் இருக்கிறார்கள் "பிறக்கும் புத்தாண்டில் இருந்து நான் திட்டமிட்டு செயல்படப் போகிறேன்" என்று சொன்னபடி, டைரி வாங்கி, இத்தனை மணிக்கு எழவேண்டும்; இத்துணை மணி நேரம் படிக்க வேண்டும்;இத்துணைமணி நேரம் தூங்க வேண்டும். டி.வி யே பார்க்கக்கூடாது. என்றெல்லாம் திட்டம் தீட்டுவார்கள். அவர்களில் மிகப்பெரும் பாலானோர் அதை முயற்சி செய்து கூட பார்ப்பது இல்லை.

அப்படியானால் திட்டமிடுதலுக்கும் அதை செயல் படுத்துவதற்கும் என்னதான் வழி உள்ளது?

அன்பர்களே! யார் வேண்டுமானாலும் திட்டமிடலாம் ஆனால் கட்டுப்பாடு மிக்கவனால் மட்டுமே அதை செயல் படுத்த முடியும். நமக்கு முதலில் தேவை கட்டுப்பாடுதான். நம்மின் இலட்சியம் மீது ஒரு தீரா காதலும் அதை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டுப்பாடும் அமைந்து விட்டால் நிச்சயம் நமது இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.

எதற்காக திட்டமிட வேண்டும்?

இப்படித்தான் ஒருவன் சோம்பேறித்தனமாக சுற்றித் திரிந்தான். கடற்கரை அருகே கால்மேல் கால் போட்டபடி ஹாயாக இருந்தான். அருகில் சென்ற ஆசிரியர், "அப்பா, இப்படி ஊதாரியாக இருக்கிறாயே, ஒரு இலட்சியம் வைத்துக் கொண்டு ஒழுங்காகப் படித்து முன்னேறலாம் அல்லவா " என்றார். படித்து என்ன பண்ண? என்றான் அவன். ஆசிரியர் ," நன்றாகப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும்" என்றார். அதை வைத்து என்ன பண்ண என்றான். "வீடு மனைவி மக்கள் என்று ஒரு அமைதியான வாழ்க்கை வாழலாம், கால் மேல் கால் போட்டு நிம்மதியாக உறங்கலாம் "என்றார். "அதைத்தான் இப்போது செய்கிறேன்" எனக்கு எதுவும் தேவை இல்லை." என்றானாம்.

இந்தக் கதையை அனைவரும் அறிவோம். இப்படிப் பட்ட மனிதர்களுக்காக இக்கட்டுரை இங்கே எழுதப்பட வில்லை. ஒருமுறை வாழப்போகும் இந்த மானுட வாழ்க்கையில் சாதாரணமானவனாகச் சாகாமல், ஒரு சாதனையாளனாக வாழ விரும்புவனுக்கே இக்கட்டுரை சொந்தம்.


சாதனையாளன் ஆக வேண்டும் என்றால், சாதனையாளனுடன் இரு. 'முதல்வனாய் இரு! இல்லை, முதல்வனோடு இரு' என்ற வாசகம் நமக்கு மிகப்பழக்கமே! ஆனால் நம்மில் பலர் முதல்வன் பட டிக்கட்டுக்காக திரையரங்கில் காத்து கிடக்கின்றனர்.

நமது இலட்சியத்தை அடைய வேண்டுமானால் அதனோடு ஒத்த கருத்துக் கொண்டவர்களோடு பழக வேண்டும். உங்களை சதா குறைகூறிக்கொண்டு இருப்பவர்களை ஜெயம் சதா ஸ்டைலில் "போயா..போயா" என்று ஒதுக்கி விடுங்கள்.

Image hosted by Photobucket.com
நமக்கு தேவை நமது இலட்சியத்தை அடைவதே! "அதற்கு என்ன என்ன வழிகள் உள்ளன? யார் யார் இதற்கு உற்சாகம் ஊட்டுவார்கள்? யாரெல்லாம் நம்மீது அதிக அக்கறை கொண்டவர்கள்?" என்பதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். உங்களை உற்சாகப்படுத்தும் நபர்களோடு ஒருநாள் விட்டு ஒருநாளாவது நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ மனம் விட்டுப் பேசுங்கள்.

எந்த ஒரு இலக்கும் எளிதாக அடையக்கூடியது இல்லைதான். ஆனால்,எந்த அளவிற்கு நீங்கள் துணிச்சலோடு உங்கள் இலட்சியத்தை அடையப் போராடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் இலக்கும் உங்களை நோக்கி நெருங்கி வரும். கஷ்டப்படாமல் கிடைத்த எதுவும் நிலைத்து நிற்பதில்லை என்ற சொல்வழக்கை மனதில் நிறுத்திக் கொண்டு, இலக்கை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்து உழையுங்கள்.

கடின உழைப்பிற்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை!

இலக்கை நிர்ணயிக்க புத்தாண்டுதான் சிறந்த நாள் என்றால் அதை விட நகைப்புக்குரிய விசயம் வேறு எதுவும் இல்லை. நல்ல செயலை செய்வதற்கு நாள் கிழமை பார்க்கத் தேவை இல்லை. எந்நாளும் நன்னாளே!

ஆக, உங்கள் இலக்கை நிர்ணயம் செய்து விட்டீர்களானால் இன்றே இப்பொழுதே அதற்காகச் செயல் படத் துவங்குங்கள். வெற்றி வீரனாய் திகழப் போகிறேன் என்ற மனத்திண்மையோடு தொடர்ந்து பாடுபடுங்கள். தோல்விகள் , ஏமாற்றங்கள்,அவமானங்கள் இவைகள் எத்துணை வந்தாலும் துவண்டு போகாமல் இலக்கை அடைவதே எனது குறிக்கோள் என்பதை அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

உங்கள் மனத்திரையில் ஓட வேண்டிய காட்சி " அனைவராலும் பாராட்டப்படும் ஒரு சாதனையாளனாக நீங்கள் வலம் வருவதே"

"எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகிறாய்" என்ற சத்திய வாக்கியத்தின் உண்மையை உணருங்கள்.

விடாமுயற்சியும் கடின உழைப்பும் கட்டுப்பாடும் நம்பிக்கையும் உங்களோடு இருக்கும்வரை உங்கள் இலக்கை அடையப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சுவாமி விவேகானந்தர் பிறந்த இந்நன்னாளில் அவர் சொன்ன வாக்கியத்தை நாம் நினைவில் கொள்வோம்.

"எழுமின்! விழுமின்! கருதிய காரியம் கைகூடும் வரை நில்லாது உழைமின்!"

ஜெய்ஹிந்த்!