PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Thursday, October 27, 2005

தீபாவளி ரம்ஜான் வாழ்த்துக்கள்!

தமிழ்மணம் அன்பர்களுக்கும், வலைப்பூ வாசகர்களுக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி மற்றும் ரம்ஜான் வாழ்த்துக்கள்!

  Image hosted by Photobucket.com
ஓ மனிதனே
உன்னில் ஒளிந்து இருக்கும்
நரகா சூரனை
மண்ணில் வீழ்த்திவிடு
மகத்துவம் காண்பாய்!
விண்ணில் ஒளி வீசும்
சூரியனாய்த் திகழ
விரும்பிடு விழித்திடு
வெற்றி நீ காண்பாய்!
இனியதாம் இந்நாளில்
புதியதாய் பிறந்து விடு
வெற்றியை மனதில் கொண்டு
விடாது நீ உழைத்திடு!
அல்லாஹ் அருளும்
அம்பிகையின் துணையும்
அன்பனே உனைச் சேர - நல்
நண்பனாய் வாழ்த்துகிறேன்..
  Image hosted by Photobucket.com

Tuesday, October 18, 2005

காஃப்மேயர் தத்துவம்

ஜெயமே ஜெயம் 7
அமெரிக்காவின் தலை சிறந்த சுயமுன்னேற்ற எழுத்தாளர்களில் காஃப்மேயரும் ஒருவர். எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர். நம்மில் பலர் இவரைப்பற்றி அறிந்திருப்போம். அவர் சொன்ன மூன்று வாக்கியங்களைப் பற்றிதான் இந்த இதழில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
Image hosted by Photobucket.com
அந்த முக்கிய வாக்கியங்கள் இதுதான்...

1. உடல் அளவில் உயர்ந்து நில்லுங்கள்!

2.மன அளவில் உயர்ந்து நில்லுங்கள்!

3.ஆன்மீக அளவில் உயர்ந்து நில்லுங்கள்!

இந்த மூன்று வாக்கியங்களின் பொருளை முழுதுணர்ந்து நடந்தால் ஜெயம் என்பது நிச்சயம்.

கருத்தரங்குகள், பொது இடங்கள் போன்றவற்றிற்கு செல்கையில் அங்கு வரும் சாதனையாளர்களை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அவர்களது நடை உடை பாவனை அனைத்தும் ஒரு கம்பீரமாக இருக்கும். அவரை சுற்றி நிற்கும் கூட்டம் அரக்க பரக்க என்று ஏதோ பரபரப்பில் இருப்பார்கள். கட்டளையிடுங்கள் உடனே நிறைவேற்றுகிறேன் என்ற தொணியில் பலர் அவர்முன் கட்டுப்பட்டு நடப்பார்கள். இந்த மரியாதைக்கு எல்லாம் மூல காரணம் அவரது வெற்றியே என்பதை நாம் நன்கு அறிவோம்.

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறியும் திமிர்ந்த ஞானச் செருக்கும் " புதுமைப் பெண்களுக்கு வேண்டும் என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி சொன்னவரிகள் அனைவருக்குமே பொதுவானது ஆகும். காஃப்மேயரின் கருத்து பாரதியின் கருத்தை ஒட்டியதே ஆகும்.

"உடல் அளவில் உயர்ந்து நில்லுங்கள்" என்று சொல்லும் போது நாம் எப்படி நம் உடலை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது புரியவேண்டும்.
தலையை தாழ்த்திக்கொண்டு நடக்கக் கூடாது. நிமிர்ந்த நன்னடை வேண்டும். நிமிர்கிறேன் என்று, இன்னும் நம் தலையை உயர்த்தினால் அவ்வளவுதான் :( எதோ கர்வம் கொண்டவன் போல் ஆகிவிடும்...." இங்க பாருடா..ஏதோ பெரிய கவர்னர்னு மனசுல நினைப்பு, நடக்குற நடையை பாரு..சரியான திமிர் பிடிச்சவன்டா அவன்" என்றெல்லாம் நம்மைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். எனவே, நிமிர்ந்த நடைக்கு வீட்டின் நிலைக்கண்ணாடி முன்பு நின்று பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் நிமிர்ந்து நடக்கும் போது உங்கள் ஆளுமை ஒரு படி சற்றே உயர்ந்திருக்கும். உங்களுக்குள் ஒரு உற்சாகம் புறப்பட்டு இருக்கும்.

அடுத்தது "மன அளவில் உயர்ந்து நில்லுங்கள்" என்பது மிக முக்கியமான ஒன்று ஆகும். இதன் பொருள் என்னவென்றால் எப்போதும் தரமானதை சிந்தியுங்கள் என்பதே. முதல் தரமாய், நேர்மறையாய் சிந்தித்தல் என்றும் பொருள் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் நல்ல மனதோடு இருங்கள் எனலாம்.

இப்படி நல்ல மனசோடு இருப்பவர்களுக்கு நிமிர்ந்து நடப்பது என்பது இயற்கையாகவே அமைந்து விடும். நல்ல சிந்தனைகள் , நமது நேர்மை இவை நமக்கு இயற்கையான அழகை தந்துவிடுகின்றன.

அழகு என்றதும் ஒரு சினிமா ஹீரோவை மனதில் கற்பனை செய்யாதீர்கள். பொக்கைவாய் சிரிப்பில் காந்தி அழகு, அன்னைதெரசாவும் அழகே. ஆக அழகு என்பது உடலின் நிறத்தையோ முகத்தின் அமைப்பையோ பற்றியது அல்ல. அழகு என்பது வெற்றியின் வெளிப்பாடு, சாதனையின் நிறம்.

அடுத்த முக்கியமான ஒன்று "ஆன்மிக அளவில் உயர்ந்து நில்லுங்கள்" என்பதே. ஆன்மிகம் என்றால் இறைவழிபாடு என்பது மட்டும் கொண்டது அன்று. அதற்கும் மேலானது. வீவேகானந்தர் சொல்வது போல் 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு" என்று மக்களை நேசிப்பது , இயலாதோர்க்கு உதவுவது, இயற்கையைப் பேணிக்காப்பது , நம் இதயத்தையும் நேசிப்பது என்பதான அத்துணையும் இதில் அடக்கம்.

"தன்னை அறிந்தவன் தலைவன் ஆகிறான்" எனபது முதுமொழி. தன்னை அறிவதும் ஆன்மீகமே. இறைவன் இருக்கிறானா. இல்லையா என்ற ஆராய்ச்சியை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றை மட்டும் மனதில் நினைத்துப் பாருங்கள். நம்மிடையே அல்லது நமக்கு வெளியே இருக்கிற ஏதோ ஒரு சக்தி நம்மை ஆக்கிரமித்துக் கொண்டு அல்லது கவனித்துக் கொண்டு இருக்கிறது. சில செயல்கள் நாம் கடினமாய் முயற்சித்தும் கிடைக்காமல் போய் விடுகிறது. சில செயல்கள் முயற்சிக்காமலே எளிதாய் அமைந்து விடுகிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளைகிறது.

எத்துணையோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதனை படைத்து வரும் நாம், காத்ரீனா, ரீட்டா, சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம். எத்துணைப் பிரச்ச்னைகள் நம்மை ஆட்கொண்டாலும் அதில் இருந்து நம் மனம் நிலைகுலைந்து போகாமல் காப்பதற்கு அரும்பெரும் மருந்து ஒன்று உண்டென்றால் அது ஆன்மீகம்தான்.

அந்த ஆன்மீகத்தை மதமானது தருவதால் அனைவரும் ஏதாவது ஒரு மதத்தை தழுவி வருகிறோம். அது தவறு அன்று. மனிதம் போதிக்கும் மதத்தில் மதம் கொள்ளாது மனம் கொள்ள வேண்டும்.

நம்மை ஆட்டுவிக்கும் அந்த சக்தியிடம் நாம் சரண்புக வேண்டும்.

மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கருத்தை அப்படியே இங்கு தருகிறேன்.
"Science without religion is lame.
Religion without science is blind"

அதாவது "அறிவியல் இல்லாத ஆன்மீகம்(மதம்) முடம், ஆன்மீகம் இல்லாத அறிவியல் குருடு" எனலாம் . இந்த வரிகள் ஐன்ஸ்டினின் வெற்றிக்கு, அவர் எந்த அளவிற்கு ஆன்மீக அளவில் உயர்ந்து நின்றிருக்கிறார் என்பதை நமக்குக் காட்டுகிறது.

புகழ் பெற்ற சாதனையாளர்களில் பலபேர் தங்கள் உரையில் சொல்லும் போது.. " நம்பிக்கை, உழைப்பு இவை வெற்றியைத் தந்தாலும் ஏதோ ஒரு சக்தி தமக்கு துணை நின்றதாகவே சொல்லியுள்ளார்கள்." அத்தகைய சக்தியின் துணையைப் பெற நாம் ஆன்மீக அளவில் உயர்ந்து நிற்க வேண்டும்.

எனது அன்பின் அன்பர்களே! மீண்டும் இக்கட்டுரையின் முதல் பத்தி சென்று அந்த முத்தான மூன்று வாசகங்களை உரக்கச் சொல்லிப் பாருங்கள்!அதன் இனிமையை உணருங்கள்! அதை உங்கள் இதயத்தில் நிறுத்துங்கள்! இதயத்தில் நிறுத்துவதோடு தினமும் அதை பயிற்சி செய்யுங்கள்!

இவ்விதம் நீங்கள் செய்து வரும் பயிற்சி உங்களிடையே ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். உங்கள் நண்பர்கள் வட்டம் உங்களைக்கண்டு ஆச்சரியப்படும். ஒரு சாதனையாளனைப் போல் நீங்கள் வலம் வர ஆரம்பித்து இருப்பீர்கள். விரைவில் நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வாய்ப்பினை பெறுவீர்கள்.

Image hosted by Photobucket.com
ஜெயமே ஜெயம் தொடரும்...

Sunday, October 02, 2005

குழந்தை வளர்ச்சி அட்டவணை

இங்கே நல்ல போஷாக்கான குழுந்தைக்கான வளர்ச்சி அட்டவணையை கொடுத்துள்ளேன். இந்த அட்டவணை உங்களுக்கு உதவிடக் கூடும். பிறந்த குழுந்தையின் எடை முதல் 10 நாட்களில் திடீரென்று குறைவது கண்டு அஞ்ச வேண்டாம். பின்னர் சரியாகி விடும்.

Image hosted by Photobucket.com
(நன்றி: DR . சுந்தர் பரத்வாஜ்)