PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, November 30, 2005

புன்னகை ரேகை!

ஜெயமே ஜெயம்- 9
கைரேகை பார்த்து திருப்தி அடைபவர்கள் பலரை நாம் அறிவோம். எத்துணை பேருக்கு புன்னகைரேகை பற்றி தெரியும்? அது பற்றி அறியாதவர்களுக்கு அறியச்செய்வதே இந்தவாரக் கட்டுரையின் முயற்சி.

"உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகள் அத்துணையையும் புன்னகை என்ற ஒரே மொழி பேசி விடும்" என்று ஒரு முதுமொழி உண்டு. புன்னகை என்பது பொன்னகையை விடவும் மேலானது.

பொன்னகை என்றதும் பெண்கள்தான் நினைவுக்கு வருவார்கள்.

இரண்டு பெண்களைக் கருத்தில் கொள்ளுங்கள்..

ஒருவள் அழகிய ஆடை ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டு முகத்தை உம்மணாம் மூஞ்சி என்பார்களே அதுபோல் 'உர்ர்ர்ர்' என்று வைத்துக்கொண்டு இருக்கிறாள்.

மற்றவள், எளிமையாக இருக்கிறாள் ஆபரணம் ஏதும் அணியவில்லை. ஆனால் புன்னகைத்த முகத்தோடு இருக்கிறாள்.

மேற்சொன்ன இருவரில் உங்களை யார் அதிகம் கவர்ந்திடுவார்கள். நிச்சயமாக இரண்டாமவள்தான்.

இந்த உதாரணம் கொடுக்கும் போது எனக்கு இன்னொரு சம்பவம் நினைவில் வருகிறது.

சோமு மிகக் குழப்பத்தில் வாடிய முகத்தோடு இருந்தான். "என்னப்பா பிரச்சனை?" என்றபடி வந்தான் அவனது நண்பன் கோமு. "நான் ஒரு பெரியபிரச்சனையில் இருக்கிறேன் நீதான் தீர்வு சொல்ல வேண்டும் , எனக்கு இரண்டு வரன்கள் வந்துள்ளது. ஒருத்தி என்னைவிட 10 வயது மூத்தவள், ஏராளமான சொத்துக்குச் சொந்தக்காரி, இரண்டாமவள் நல்ல அழகி; ஆனால் மிக ஏழ்மையில் இருப்பவள்" இவர்களில் நான் யாரை திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானிக்க முடியாமல் தவிக்கிறேன். என்றான்."

அதற்கு கோமு, " இதுவா பிரச்சனை! இரண்டாமவளையே மணந்து கொள், வாழ்க்கைக்கு இளமைதான் முக்கியம்! அது போனால் திரும்ப வராது" என்று தீர்வு சொன்னான்.

சோமு மிக மகிழ்ந்து தன் நண்பனைக் கட்டிப்பிடித்து தன் நன்றியைச் சொல்லிவிட்டு புறப்பட ஆரம்பித்தான்.

கோமு அவனை நிறுத்தி ,"சரி ..சரி.. அந்த முதல் பெண்ணின் முகவரியை என்னிடம் தந்துவிட்டுப் போ " என்றானாம் :-)

பணத்திற்காக பலர் பலவற்றை தொலைத்துவிட்டு வாழ்கிறார்கள். திருமண பந்தத்தில் கூட புன்னகை என்பது தொலைந்து போனால். அவ்வளவுதான் வாழ்க்கை நரகம்தான்.

சின்னக் குழந்தை கூட புன்னகையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகளிடம் புன்னகைத்துப் பாருங்கள் அதுவும் அழகாக புன்னகைக்கும் . மாறாக நம் முகத்தை கடுகடுப்பாக வைத்து அதை முறைத்தால் வீல்..! என்று கத்த ஆரம்பித்து விடும்.

பிறந்து சில மாதங்களே ஆனக் குழந்தை கூட தன் கொள்ளைச் சிரிப்பில் நம்மை அள்ளிக்கொண்டு போகிறது.

வியாபாரயுக்தியில் முதன்மையான யுக்தியும் இந்தப் புன்னகைதான். புன்னகை எப்பேர்பட்ட மக்களையும் வசீகரிக்கும் சக்தி கொண்டது. மோனலிசா ஓவியத்தில் உள்ள சிறப்பில் அவளின் மெல்லிய புன்னகைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

குழந்தை கூட புன்னகையால் தன்னை மற்றவர் அள்ளி அணைத்துக்கொள்ளச் செய்கிறது என்றால், குழந்தைக்கு தெரிந்தது கூட நமக்கு தெரியவில்லை என்றா அர்த்தம். வறட்டு கௌரவம், தலைக்கனம் இவைதான் நம் புன்னகையைத் திருடிக் கொண்டு போய், கோபக் கோடுகள் முகத்தில் நிரந்தரமாக பதிய ஆரம்பித்து, விரைவில் கிழத்தன்மையை நம் முகம் பெற்று விடுகிறது.

Image hosted by Photobucket.com

மருத்துவ ஆய்வுப்படி பார்த்தால் புன்னகைக்க 4 தசைகள் போதுமானது. நமது முகத்தை சிடுமூஞ்சித்தனமாய் வைத்துக்கொள்ள 64 தசைகள் தேவைப்படுகிறது.

எளிமையானதை விட்டு விட்டு நம்மில் பலர் 64 தசைகளை கஷ்டப்பட வைத்து முறைப்பதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு புன்னகைதான் வருகிறது.

புன்னகை, சிரிப்பு இவையெல்லாம் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள். நயவஞ்சகச் சிரிப்பு மற்றும் ஆணவச் சிரிப்பை பற்றி இங்கு யான் பேச வரவில்லை. அது பசுத்தோல் போற்றிய புலி போன்றது.

'சிரிப்பதற்கும் நேரம் ஒதுக்குங்கள்' என்று கேட்டுக்கொள்ளும் அளவிற்கு, நாம் வளரவளர, நாள் ஒன்றிற்கு நாம் சிரிக்கும் அளவு குறைந்து கொண்டே போகிறது. குழந்தையாக இருக்கும் போது நாள் ஒன்றுக்கு 300 க்கும் மேற்பட்ட தடவை சிரித்த நாம் வளர்ந்த நிலையில் நாளுக்கு 10 , 15 தடவையாவது சிரிப்பது என்பது அருகி விட்டது.

"Laughing Therapy" என்ற பெயரில் பல பெருநகரங்களின் பூங்காக்களில் காலைநேரத்தில் சில அன்பர்கள் வாய்விட்டு சிரிப்பதை ஒரு பயிற்சிபோல் செய்வதை பார்த்திருப்பீர்கள்.காரணம், சிரிப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தலைசிறந்த பேச்சாளர்களின் பேச்சை உற்று நோக்குங்கள் 10 நிமிடங்களுக்கு ஒருமுறையாவது மக்களைச் சிரிக்க வைத்தபடி பேசுவார்கள். அந்தத் திறமைதான் அவர்களை தலைசிறந்த பேச்சாளர் ஆக்குகிறது. காமெடி நடிகர்களின் சேவை குறிப்பிடத்தக்கது. அது, காம நெடியாக இல்லாத பட்சத்தில் சிறப்பானது என்றே சொல்லலாம்.

ஒருவர் இப்படித்தான், "சிரிப்போம்; சிந்திப்போம்" என்ற தலைப்பில் நூல் வெளியீடு செய்தார். அதற்கு பின்னூட்டம் கேட்டபோது ஒருவர் சொன்னார், "உங்கள் நூல் முதலில் நன்கு சிரிக்கும்படியாக இருந்தது , பின்னர் ஏன்டா சிரித்தோம்? என்று சிந்திக்கும்படியாக இருந்தது" என்று சொல்லிவிட்டார். (உங்கள் பின்னூட்டம் அப்படி இருக்காது என்று நம்புகிறேன் :))

மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் அழகாய் இருக்கிறார்கள். எதை அழகு என்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள். ஆக, புன்னகை ரேகை நம் முகத்தில் ஓடுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுவோம். அது வாழ்வின் வெற்றிக்கு ஒரு அருமையான யுக்தி ஆகும்.

புன்னகை செய்ய என்ன வேண்டும்? முதலில் நல்ல கலாரசனை அதாவது ரசிப்புத்தன்மை வேண்டும்; மற்றவர்களை நேசிக்கும் மற்றும் பாராட்டும் குணம் வேண்டும். பிறர் மனம் நோகாதபடி பேசும் தன்மை வேண்டும்.

"ஹியுமர் கிளப்" ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தது. "இங்கே 100 சிறப்பான ஜோக்குகள் சொல்லப்படும் யார் 100 ஜோக்குகளுக்கும் சிரிக்காமல் இருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர்" என்று அறிவித்தனர். சொல்லப் பட்ட ஒவ்வொரு ஜோக்கும் மிகச் சிறப்பானவை. யாராலும் சிரிக்காமல் இருக்கவே முடியாது. சிலர் 15 ஜோக்குகளுக்கு தாக்குப் பிடித்தனர். சிலர் 25 ஜோக்குகளுக்கு தாக்குப்பிடித்தனர். யாராலும் வெற்றி பெற முடியாத சூழல். ஆனால், இறுதியாக ஒரு போட்டியாளர் வந்தார். மனுசன் அசரவே இல்லை. காலஞ்சென்ற முன்னாள் பிரதமரிடம் இவர் வரம் வாங்கியுள்ளாரோ என்னவோ? சபையினருக்கோ பெருத்த ஆச்சரியம். 95 வது ஜோக் சொல்லப்பட்டது. 98 , 99 வது ஜோக் சொல்லப்பட்டது..ஊஹூம் ..அவரை சிரிக்க வைக்கவே முடியவில்லை. மக்கள் ஆரவாரம் செய்தனர். இவர்தான் வெற்றி பெறப்போகிறார் என்பதால் பலத்த கைத்தட்டுகள் எழும்பின.

100 வது ஜோக் சொல்ல ஆரம்பிக்கும் வேளையில் இந்த போட்டியாளர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். சபைக்கோ ஒன்றும் புரியவில்லை. போட்டியாளனின் நண்பர்கள் " இன்னும் ஒரு ஜோக்கிற்கு சிரிக்காமல் இருந்திருந்தால் கின்னஸ் ரிக்கார்டு படைத்திருப்பாயே " என்று கடிந்து கொண்டனர். இத்தனை ஜோக்குகளுக்கு தாக்குப் பிடித்தவன் கடைசி ஜோக் சொல்லும் முன்பாகவே சிரித்துவிட்டதின் காரணத்தை அரங்கம் கேட்டது.

அதற்கு அவன், "முதல் ஜோக்கின் அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிந்தது" என்றானே பார்க்கலாம். :)

இப்படிப் பட்டவர்களை நாம் என்னதான் செய்யமுடியும்? சொல்லுங்கள்! ஆக, நல்ல ரசிப்புத்தன்மை அவசியம். அதற்காக ஜோக் சொல்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு தரங்கெட்ட ஜோக்குகளையும், அறுவை ஜோக்குகளையும் சொல்லி உங்களைக் கண்டாலே மற்றவர்கள் ஓட்டம் பிடிக்கும்படி செய்து விடக் கூடாது.

முதலில் புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள். உதட்டளவில் சிரிக்காமல் உள்ளப்பூர்வமாய் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். நண்பர்களை வசீகரிக்கும் சக்தி இந்த புன்னகைக்கு அதிகம் உண்டு. புன்னகைரேகை உங்கள் முகத்தில் படரட்டும், புது உற்சாகம் பிறக்கட்டும் என்று வாழ்த்தி இந்தவாரச் செய்தியை நிறைவுசெய்கிறேன்.

ஜெயம் வ(ள)ரும்!

6 Comments:

  • At 1:13 PM, Blogger NambikkaiRAMA said…

    A smile is a curve that sets everything straight. ~Phyllis Diller

     
  • At 4:32 PM, Blogger தாணு said…

    நாங்க எப்பவுமே சிரிச்சுகிட்டு இருக்க ரெடி! ஆனால் சிரிக்கின்ற பெண்களைப் பார்க்கின்ற கண்ணுக்கு ஏதேதோ தோணிடுதே அதுதான் பெரிய தடைக்கல்!

    உங்க குட்டி ஏஞ்சல் நலமா?

     
  • At 5:01 PM, Blogger NambikkaiRAMA said…

    குட்டி ஆஞ்சல் நலம் அன்பரே!

    >சிரிக்கின்ற பெண்களைப்

    இதுக்கு என்னான்னு பதில் சொல்ல...?
    ஹி.. ஹி

    "தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா.."

     
  • At 2:43 PM, Blogger rnatesan said…

    நன்றி ராமன் ,
    புன்னகைதான் பெரிது என்கிறீர்களா,ஆனால் பொன் நகையை காட்டினால்தானே புன்னகையே வருகிறது.!!
    (விதவை என்ற சொல்லை விட கணவனை இழந்தவள் என்று பிறயோயிக்க ஆட்சேபம் செய்கிறார் சாந்தி,மாதர் நல தொண்டர்)

     
  • At 5:26 PM, Blogger NambikkaiRAMA said…

    அன்பின் நடேசன்! தங்கள் மற்றும் மாதர் சங்கத்தினரின் கருத்துக்கு தலைபணிகிறேன். ஆட்சேபகரமான சொற்கள் நீக்கப்பட்டு விட்டன. நகைச்சுவை என்ற அர்த்த்தில் மட்டுமே அந்த ஜோக் சொல்லப்பட்டது. மற்ற்படி நான் பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதையை எனது கருத்தரங்குகளில் கலந்துகொண்டவர்கள் மற்றும் என்னை அறிவோர் அறிவர். இதை அவர்களுக்கும் அறிவிக்கவும்.

     
  • At 7:33 PM, Blogger Raghavan alias Saravanan M said…

    கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகளில் ஒன்று..

    "மனித ராசி ஒன்று தான் சிரிக்கத் தெரிந்தது!!"

    - "என்னவளே" என்ற படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியது.

    வைரமுத்துவின் 'பெய்யெனப் பெய்யும் மழை' என்ற கவிதைப் புத்தகத்தில் இருந்து,

    "சிரிப்பு - மனிதர்களை மற்ற ஜீவராசிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது!" (வரிகள் தத்ரூபமாய் நினைவில் இல்லை தற்பொழுது!)...

    அருமையானதொரு பதிவு அண்ணா.

     

Post a Comment

<< Home