PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, February 15, 2006

சபலம்

ஜெயமே ஜெயம் - 13
இந்த ஜெயத்தில் நாம் அலசப் போகும் விசயம் சற்றுக் கடுமையான ஒன்றுதான். இதனால்தான், இந்த குணத்தினால்தான் மனிதன் நெறிகெட்டு தறிகெட்டுச் சென்று விடுகிறான்.

கோமானாக இருந்தாலும் நொடிப்பொழுதில் அவனை மழுங்கி விடச் செய்யும் ஒரு விசயம் இதுதான். ஏழை, பணக்காரன் என்று அனைவரையும் பாதிக்கும் விசயமும் இதுதான்.

"நல்லவன் என்று பெயர் எடுக்க பல காலம் வேண்டும்; கெட்டவன் என்று பெயர் எடுக்க சில நொடிகள் போதும் " என்று நம் பெரியோர்கள் வலியுறுத்துவது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை, இதை அலசும் போது நாம் அறிவோம்.

ஒருவன் தனது பருவத்தில் 21 - 25 வயது வரை இதற்கு ஆட்படாமல் அதாவது இதன் போக்கிலேயே சென்று விடாமல் தன்னை அடக்கி ஆள்வான் ஆகில் அவனால் எதையும் சாதிக்க முடியும்.

ஆனால் சிலர் 3 வது கால் துணையோடு நடக்கும் போதும் கூட இதன் பிடியில் சிக்குண்டு சின்னாபின்னம் ஆகிறார்கள்.

என்னடா இது "ஏதோ டி.வி கேம் ஷோவுக்கு கேள்வி கேட்பது போல் இருக்கிறதா?"

நீங்கள் யூகித்த் விசயம் சரிதான்.

ஆம்! அதுதான் "சபலம்"

இதைப் பற்றியதுதான் நமது இன்றைய அலசல்.
Image hosting by Photobucket
ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஈர்ப்பு என்பது இயற்கை விதிதான். ஆனால் , எல்லாம் தனக்கு என்று உரிமையில்லாதவற்றின் மீது பிரயாசைப்படுவது எவ்வளவு தூரம் நம்மை பாதிக்கும் என்பதை நாம் அறிவது இல்லை.

ஏன் இந்த சபலம்? இது எவ்வளவு பெரிய பிரச்சனைக்கு எல்லாம் கொண்டு செல்கிறது.

இன்றைய இளைஞர்களைப் பெரிதும் சீரழிப்பது இதுவேதான்.

சபலம் அதிகமாகி காமத்தில் கொண்டுச் சென்று , தான் செய்வது சரிதானா என்பதை உணராமல் தவறும் செய்து விட்டு பின்னர் "ஐயோ ஏன் அப்படி செய்தோம், ஒரு நிமிடம் என் புத்தி வேலை செய்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாமே " என்று புலம்பவும் வைக்கிறது.

நாம் நமது புத்தியை அடக்கியாள தெரிந்திருக்க வேண்டும்.

மனம் எனும் குதிரையை அடக்கியாளல் வேண்டும்.. இல்லை இல்லை "மன்மதலீலை ...மன்மதலீலை "என்று போனால் வாழ்க்கை பாசிடிவ்வாக இருக்காது HIV பாசிடிவ்வாகத்தான் இருக்கும்.

"இந்திரியம் தீர்ந்து விட்டால் சுந்தரியும் பேய் போல் " என்பதை ஒவ்வொரு இளைஞனும் உணர வேண்டும்.

ஒரு ஆணோ பெண்ணோ தவறு இழைக்கச் செய்வது இந்த சபலம் தான்.

ஈவ் டீசிங், ஆடம் டீசிங், பலாத் காரம், இன்னும் சிலவை தட்டச்சு செய்ய என் விரல் கூசுகிறது ...அனைத்திற்கும் அடிப்படை இந்தக் கொடுமையான குணம்தான்.

தனிமை ஒருவனை நன்கு சிந்திக்க வைக்கும் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை. ஆனால் அவன் எப்படி சிந்திக்கிறான் என்பதுதான் முக்கியம்.

அந்த அந்த வயதில் வரும் ஆசைகள் இயற்கைதான்.

அதற்காக முரண்பட்ட தவறான பழக்கங்கள் நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் புதைகுழிகள் என்பதை மறந்து விடக்கூடாது.

கருணைபிரபு இயேசுபிரான் சொல்லும் போது " ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கினாலே நீ அவளோடு விபச்சாரம் செய்தது போல் ஆகும்" என்பதில் இருந்து சபலம் நம்மை, நம் சுயகட்டுப்பாட்டை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


அமெரிக்கா சென்ற விவேகானந்தரின் கட்டுடலில் தன்னை இழந்த சீமாட்டி ஒருத்தி விவேகானந்தரிடம் சென்று "உங்கள் மூலம் எனக்கு ஒரு குழந்தை வேண்டும் " என்று வெட்கத்தை விட்டுக் கேட்டாளாம். அதற்கு அவர் "நானே உனக்கு குழந்தையாகிறேன் தாயே" என்றாராம். தன் தவறை உணர்ந்த அவள் பின் விவேகானந்தரின் சிஷ்யை ஆனாள்.

இதுவல்லவோ ஆண்மை. இந்த குணத்தினால் அன்றோ விவேகானந்தர் ஒவ்வொருவருக்கும் இலட்சிய வேந்தனாய் நிற்கின்றார்.

"அட ராமா ..நீ என்ன பெரிய இவனா? " என்று என்னை நீங்கள் கேள்வி கேட்க கூடும்.

இந்தக் கட்டுரையானாது சபலத்தால் அலைக்கழிக்கப்பட்டு அதில் இருந்து தன்னை எப்படியாவது விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவனிடம் போய்ச் சேர்ந்தால் மிக மகிழ்வேன்.

சபலம் வாழ்வில் அவலத்தைதான் தரும்.

இதை வெல்வது அல்லது கொல்வது எப்படி ?

முதலில் சொல்லப்போனால் கூடுமானவரை தனிமையைத் தவிருங்கள்.

தனிமையல்லவோ இனிமை..என்று சிலர் எண்ணக்கூடும். தவறான சிந்தனை தனிமையில் இருக்கும் போது வந்துவிட்டால் அது விடாது கருப்பாக நம்மை ஆட்க்கொண்டு விடும். அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

கூடா நட்பைத் தவிருங்கள். நேரம் தவறிய தூக்கத்தையும் , அளவுக்கு அதிகமான உணவையும் கண்டிப்பாய்த் தவிர்க்க வேண்டும். மதுபானங்கள், போதை வஸ்துகள் மனிதனின் புத்தியை மழுங்கடித்து அவனது சீரிய சிந்தனையை சீரழித்து விடுகிறது.

"வாழ்க்கையை இஷ்டம் போல் அனுபவிக்காமல் வாழ்வதா?" என்று ஏளனும் செய்யும் கூட்டதில் இருந்து விலகியே இருங்கள்.

மஞ்சள் பத்திரிக்கைகளும் மசாலாப் பத்திரிக்கைகளும் பெருத்து பெரும்பாலான ஊடகங்கள் ஆபாசத்தை அள்ளி வழங்குவதில் போட்டி போடும் சூழலில், சபலத்தில் இருந்து ஒருவன் தன்னைக் காத்துக்கொள்வது என்பது ஒரு பெரிய சவால்தான். ஆனால் நல்ல புத்தகங்களை நண்பர்களாகக் கொண்டவருக்கு தனிமை என்பதே இல்லைதானே.

தவறு செய்வதற்கான சூழலில் இருந்து விலகியே இருங்கள். அதனால்தான் தனிமையைத் தவிருங்கள் என்றேன். இருவராய் இருப்பதும் சில நேரங்களில் தவறு இழைக்க வாய்ப்பாகி விடும். குறிப்பாய் ஹாஸ்டல் வாழ்க்கை வாழும் மாணவர்கள் தனியே படுப்பதைத் தவிர்த்து ஒரே அறையில் 3 அல்லது 4 பேராக படுக்கலாம்.

கல்லூரி/பள்ளி மாணவர்கள் எதிர்பால் மாணவர்களுடன் பேசும்போது கண்களைப் பார்த்து பேசுங்கள். ஒருவர் கண்ணைப் பார்த்து பேசும் போது உண்மையை மட்டுமே பேச முடியும். உங்களுக்கென்று ஒரு இமேஜ் உருவாக்கி கொள்ளுங்கள். "நான் அப்படி பட்ட மோசமானவன் இல்லை " என்று வெளிப்படையாய் சொல்லுங்கள். நீங்கள் சொன்னதை கடைப்பிடிக்க வேண்டும் என்று உங்களையும் அறியாது முயலுவீர்கள். அந்த இமேஜ் உங்களை தவறு செய்வதில் இருந்து பாதுகாக்கும்.

குடும்பமானத்தைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். நாம் செய்யும் தவறு நம் வீட்டில் வேறு யாராவது செய்யக்கூடின் ..என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள் மறுகணமே நெற்றிப்பொட்டில் அடித்தார்போல் ஞானம் பிறக்கும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியோ, சினிமாவோ குடும்பத்தோடு அமர்ந்து பாருங்கள்.(தவறான நிகழ்ச்சி பார்க்கும் வாய்ப்பு ஏற்படாது).

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் எப்போதும் கலகலப்பு இருக்கும். அங்கு தனிமை தவிர்க்கப்படும். தவறு செய்யும் சூழலும் உருவாகாது.

"ஒருவன் சந்தர்ப்பம் கிடைக்காத வரையில் நல்லவனாய் இருக்கிறான்" என்று சபலத்தைக் கொண்டாடுபவர்கள் சொல்வதுண்டு. ஏன் அந்த சந்தர்ப்பத்தை நாம் எதிர்பார்க்க வேண்டும். தவறு செய்யும் தூண்டலின் போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அவமானங்கள் இவற்றை எண்ணிப்பார்த்தால் ஒருத்தன் கூட தவறு செய்ய மாட்டான்.

"வாழ்க்கையில் எத்துணையோ விசயங்கள் சாதிக்க இருக்கும் போது கேவலம் இந்த சபலத்திற்கு ஆளாகி நமது சுயத்தை தொலைப்பதா?" என்று ஒரு கேள்வி நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நாம் பாதுகாக்கப்படுவோம்.

வராலாற்று நிகழ்வுகளில் பெரும்பெரும் சாதனை படைத்தவர்கள் கூட இந்த சபலத்தினால்தான் சின்னா பின்னாமாகிப் போய் இருக்கிறார்கள்.

ஒருவன் சின்ன வயதிலேயே காமக்களியாட்டத்தில் ஈடுபட்டு பெரும் பாவம் இழைத்து வந்தான். இவனை இப்படியே விடக்கூடாது என்று அவனுக்கு உடனே கல்யாணம் செய்து வைத்தார்கள் அவனது பெற்றோர். அவனோ, பெண்டாட்டியே கதி என்று கிடந்தான். அவனது மனைவி வெறுத்துப் போனாள். இப்படி ஒரு காமப்பேய் நமக்கு துணையாக வந்து விட்டதே இறைவா என்று கதறினாள். முடிவில் சண்டை போட்டுவிட்டு தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

இளம்மனைவியின் இன்பத்தில் களித்த அவனால், அவள் இல்லாமல் இருக்க முடியவில்லை. இரவோடு இரவாக அவள் தாய்வீட்டிற்குச் சென்று விட்டான். கொட்டும் மழையினையும் பொறுப்படுத்தாது, அடிக்கும் புயலையும் அலட்சியம் செய்து விட்டு வேகமாய் அவ்வீடு நோக்கி முன்னேறினான்.

வீட்டின் கதவு தாளிடப்பட்டு இருந்தது. எனவே , மாடிவழியே செல்ல மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றின் வழியே ஏறி தன் மனைவியை இச்சையோடு அழைத்தான். தன் கணவன் கயிறு என்று பிடித்து ஏறி வந்திருப்பது பாம்பு என்பதை அறிந்த அவள், தன் கணவனின் காமப்பசி கண்டு கடுஞ்சினம் கொண்டாள், "ச்ச்சீ! நீயெல்லாம் ஒரு மனுசனா? உன் பெண்டாட்டி சரீரத்தின் மீது வைத்திருக்கும் இந்தப் பிடிப்பை ராம நாமத்தின் மீது வைத்திருந்தால் புண்ணியம் பெற்று இருப்பாயே" என்று அதிர்ந்தாள்.

அவனும் அதிர்ந்து போனான். காமப்பேயால் சூழப்பட்ட அவன் தன் நிலை உணர்ந்தான் , தன்னை மன்னிக்கும்படி மனைவியை வேண்டினான். என் கண்களைத் திறந்தாய் என்று சொல்லி அன்று முதல் "ராம நாமம்" பாடிச் சிறந்தான். ஆம்! அவர்தான் இராமாயணம் தந்த துளசிதாசர்.

மனைவியே/கனவனே ஆனாலும் கூட, அவளிடம்/அவனிடம் காமம் என்பது முறையாக இருக்கவேண்டும் . இல்லையெனில் வாழ்வில் நிச்சயம் முன்னேற்றம் இல்லை.

இன்னும் நிறைய புராண உதாரங்களை நீங்கள் அறிவீர்கள். சபலத்தை விட்டவனே உண்மையான சாதனை படைக்கிறான்.

இளமையில் சபலத்தை வென்று ஆன்மபலத்தைக் கூட்ட வேண்டும்
அதற்கு தியானம், யோகா, பிரார்த்தனை, உடற்பயிற்சி போன்றவை பயன்படும்.

மனதிலே நேர்மையான, உண்மையான, வலிமையான இலட்சியம் ஒருவன் கொள்ளாதவரையில் அவனால் சபலத்தை வெல்வது என்பது கேள்விக்குறிதான்.

அழகை ஆராதியுங்கள் அனுபவிக்க நினையாதீர்கள். கண்கள் அலைபாய்ந்தாலும் நம் கடமையை மனக்கண் முன் நிறுத்தி அலைபாயும் எண்ணத்தில் இருந்து உங்கள் இதயத்தை மீட்டு வாருங்கள்!

இதுகாறும் படித்து விட்டு "ஐயோ இவ்வளவு நாளும் இப்படி இருந்து விட்டேனே இனி என் செய்வேன் " என்று வருந்தத் தேவையில்லை.

இன்று புதிதாய் பிறந்தேன் என்று சொல்லி புது இலட்சியம் கொண்டு வெற்றியின் இலக்கை நோக்கிப் பயணியுங்கள்.

வீழ்வது நாம் ஆயினும் நம் இலட்சியம் வெல்லும் என்று நம்புங்கள்.இலக்கை நோக்கியே உங்கள் கவனம் முழுதும் இருக்கட்டும்.

எதிர்படும் இன்னல்களை, சவால்களை வெற்றி கொண்டு வீரநடை போடுங்கள். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை மனதில் அடிக்கடி உரு ஏற்றிக் கொள்ளுங்கள்.

அன்பர்களே! வானம் நிச்சயம் வசப்படும்!

ஜெயம் வ(ள)ரும்...


4 Comments:

  • At 1:12 PM, Blogger NambikkaiRAMA said…

    இலக்கை நோக்கி மட்டுமே நமது எண்ணம் பயணித்தால் எதையும் வெல்ல முடியும்.

     
  • At 9:18 PM, Blogger மனசு... said…

    நன்று சொன்னீர்கள். இன்றைய நிலையில் பொரும்பாலானோர்க்கு தேவைப்படும் புத்திமதி இது

     
  • At 2:41 PM, Blogger மஞ்சூர் ராசா said…

    வாழ்க்கையின் வெற்றிக்கு உகந்த அருமையான கட்டுரை.

     
  • At 10:06 PM, Blogger Unknown said…

    thank you sir very great advice by erode mohan

     

Post a Comment

<< Home