PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Tuesday, January 10, 2006

இலக்கை நிர்ணயித்தல்!

ஜெயமே ஜெயம் - 11
புத்தாண்டு அன்று நம்மில் பலர் எடுக்கும் புத்தாண்டு இலட்சியம் குறித்துதான் இந்த இதழில் பார்க்கப் போகிறோம்.

"இந்த ஆண்டு முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடப்போகிறேன்; இந்த ஆண்டுமுதல் குடிப்பழக்கத்தை விடப்போகிறேன்; இந்த ஆண்டு முதல் உடற்பயிற்சியை செய்யப்போகிறேன்; இந்த ஆண்டு அந்த கம்ப்யூட்டர் பயிற்சியை முடிக்கப்போகிறேன்; இந்த ஆண்டுமுதல் எனது குடும்பத்தாருடன் சண்டை போடாமல் இருக்கப்போகிறேன்" என்றெல்லாம் நம்மில் பலர் புத்தாண்டு இலக்கு நிர்ணயம் செய்வது உண்டு.

ஒரு 2 அல்லது 3 நாளைக்கு அதை சிறப்பாக செய்வார்கள். 5 ஆம் நாள் 'பழைய குருடி கதவை திறடி' என்றார்போல் தங்கள் கொள்கையில் இருந்து விலகி விடுவார்கள். இதற்கு என்னதான் காரணம்?சில மாணவர்கள் இருக்கிறார்கள் "பிறக்கும் புத்தாண்டில் இருந்து நான் திட்டமிட்டு செயல்படப் போகிறேன்" என்று சொன்னபடி, டைரி வாங்கி, இத்தனை மணிக்கு எழவேண்டும்; இத்துணை மணி நேரம் படிக்க வேண்டும்;இத்துணைமணி நேரம் தூங்க வேண்டும். டி.வி யே பார்க்கக்கூடாது. என்றெல்லாம் திட்டம் தீட்டுவார்கள். அவர்களில் மிகப்பெரும் பாலானோர் அதை முயற்சி செய்து கூட பார்ப்பது இல்லை.

அப்படியானால் திட்டமிடுதலுக்கும் அதை செயல் படுத்துவதற்கும் என்னதான் வழி உள்ளது?

அன்பர்களே! யார் வேண்டுமானாலும் திட்டமிடலாம் ஆனால் கட்டுப்பாடு மிக்கவனால் மட்டுமே அதை செயல் படுத்த முடியும். நமக்கு முதலில் தேவை கட்டுப்பாடுதான். நம்மின் இலட்சியம் மீது ஒரு தீரா காதலும் அதை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டுப்பாடும் அமைந்து விட்டால் நிச்சயம் நமது இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.

எதற்காக திட்டமிட வேண்டும்?

இப்படித்தான் ஒருவன் சோம்பேறித்தனமாக சுற்றித் திரிந்தான். கடற்கரை அருகே கால்மேல் கால் போட்டபடி ஹாயாக இருந்தான். அருகில் சென்ற ஆசிரியர், "அப்பா, இப்படி ஊதாரியாக இருக்கிறாயே, ஒரு இலட்சியம் வைத்துக் கொண்டு ஒழுங்காகப் படித்து முன்னேறலாம் அல்லவா " என்றார். படித்து என்ன பண்ண? என்றான் அவன். ஆசிரியர் ," நன்றாகப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும்" என்றார். அதை வைத்து என்ன பண்ண என்றான். "வீடு மனைவி மக்கள் என்று ஒரு அமைதியான வாழ்க்கை வாழலாம், கால் மேல் கால் போட்டு நிம்மதியாக உறங்கலாம் "என்றார். "அதைத்தான் இப்போது செய்கிறேன்" எனக்கு எதுவும் தேவை இல்லை." என்றானாம்.

இந்தக் கதையை அனைவரும் அறிவோம். இப்படிப் பட்ட மனிதர்களுக்காக இக்கட்டுரை இங்கே எழுதப்பட வில்லை. ஒருமுறை வாழப்போகும் இந்த மானுட வாழ்க்கையில் சாதாரணமானவனாகச் சாகாமல், ஒரு சாதனையாளனாக வாழ விரும்புவனுக்கே இக்கட்டுரை சொந்தம்.


சாதனையாளன் ஆக வேண்டும் என்றால், சாதனையாளனுடன் இரு. 'முதல்வனாய் இரு! இல்லை, முதல்வனோடு இரு' என்ற வாசகம் நமக்கு மிகப்பழக்கமே! ஆனால் நம்மில் பலர் முதல்வன் பட டிக்கட்டுக்காக திரையரங்கில் காத்து கிடக்கின்றனர்.

நமது இலட்சியத்தை அடைய வேண்டுமானால் அதனோடு ஒத்த கருத்துக் கொண்டவர்களோடு பழக வேண்டும். உங்களை சதா குறைகூறிக்கொண்டு இருப்பவர்களை ஜெயம் சதா ஸ்டைலில் "போயா..போயா" என்று ஒதுக்கி விடுங்கள்.

Image hosted by Photobucket.com
நமக்கு தேவை நமது இலட்சியத்தை அடைவதே! "அதற்கு என்ன என்ன வழிகள் உள்ளன? யார் யார் இதற்கு உற்சாகம் ஊட்டுவார்கள்? யாரெல்லாம் நம்மீது அதிக அக்கறை கொண்டவர்கள்?" என்பதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். உங்களை உற்சாகப்படுத்தும் நபர்களோடு ஒருநாள் விட்டு ஒருநாளாவது நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ மனம் விட்டுப் பேசுங்கள்.

எந்த ஒரு இலக்கும் எளிதாக அடையக்கூடியது இல்லைதான். ஆனால்,எந்த அளவிற்கு நீங்கள் துணிச்சலோடு உங்கள் இலட்சியத்தை அடையப் போராடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் இலக்கும் உங்களை நோக்கி நெருங்கி வரும். கஷ்டப்படாமல் கிடைத்த எதுவும் நிலைத்து நிற்பதில்லை என்ற சொல்வழக்கை மனதில் நிறுத்திக் கொண்டு, இலக்கை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்து உழையுங்கள்.

கடின உழைப்பிற்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை!

இலக்கை நிர்ணயிக்க புத்தாண்டுதான் சிறந்த நாள் என்றால் அதை விட நகைப்புக்குரிய விசயம் வேறு எதுவும் இல்லை. நல்ல செயலை செய்வதற்கு நாள் கிழமை பார்க்கத் தேவை இல்லை. எந்நாளும் நன்னாளே!

ஆக, உங்கள் இலக்கை நிர்ணயம் செய்து விட்டீர்களானால் இன்றே இப்பொழுதே அதற்காகச் செயல் படத் துவங்குங்கள். வெற்றி வீரனாய் திகழப் போகிறேன் என்ற மனத்திண்மையோடு தொடர்ந்து பாடுபடுங்கள். தோல்விகள் , ஏமாற்றங்கள்,அவமானங்கள் இவைகள் எத்துணை வந்தாலும் துவண்டு போகாமல் இலக்கை அடைவதே எனது குறிக்கோள் என்பதை அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

உங்கள் மனத்திரையில் ஓட வேண்டிய காட்சி " அனைவராலும் பாராட்டப்படும் ஒரு சாதனையாளனாக நீங்கள் வலம் வருவதே"

"எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகிறாய்" என்ற சத்திய வாக்கியத்தின் உண்மையை உணருங்கள்.

விடாமுயற்சியும் கடின உழைப்பும் கட்டுப்பாடும் நம்பிக்கையும் உங்களோடு இருக்கும்வரை உங்கள் இலக்கை அடையப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சுவாமி விவேகானந்தர் பிறந்த இந்நன்னாளில் அவர் சொன்ன வாக்கியத்தை நாம் நினைவில் கொள்வோம்.

"எழுமின்! விழுமின்! கருதிய காரியம் கைகூடும் வரை நில்லாது உழைமின்!"

ஜெய்ஹிந்த்!

4 Comments:

  • At 1:11 PM, Blogger NambikkaiRAMA said…

    பாதங்கள் தயார் ஆனால் பாதைகள் மறுப்பதில்லை

     
  • At 2:20 PM, Blogger Unknown said…

    I like this. Simply cool. It energises the mind.

    check out my new year resolutions when u find time.
    http://chennaicutchery.blogspot.com/2006/01/blog-post.html.
    Thanks

     
  • At 8:53 PM, Blogger rnatesan said…

    பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

     
  • At 7:27 PM, Blogger rnatesan said…

    பொங்கல் வாழ்த்துக்கள்!நண்பரே !பொங்கல் ஒன்றும் செய்யவில்லையா?

     

Post a Comment

<< Home