PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Saturday, June 04, 2005

எங்கள் உயிர்!


o
என்னவளைப் பார்க்கின்றேன்..
அவளுக்குள் இப்போது
எத்துணை மாற்றங்கள்..!
ஓடியாடி என்னைக் கவனித்தவள்
இன்று அசைவதற்கு கூட
ஆயிரம் முறை யோசிக்கின்றாள்!
o
ஆம்!எனது உயிர்- இப்போது
எங்கள் உயிரைத் தாங்குகின்றாள்!
உள்ளிருக்கும் உயிரின் வெளிச்சம்-அவள்
வெண்ணிலவு முகத்தினில் தெரிகிறது!
o
மாங்காய் புளிப்பு என்றவள்
தேங்காய்ப் போல்-தினம்
தன்னில் சேர்க்கின்றாள்!
பப்பாளி என்றால் பாய்ந்து வருபவள்
அதைப் பார்த்திடவே
தற்போது அஞ்சுகின்றாள்!
o
தனக்கு பிடிக்காதவற்றையும்
மெனெக்கெட்டு உண்ணுகின்றாள்..
ஏனெனில்? பிள்ளை..
நன்றாய்ப் பிறக்கனுமாம்!
o
ஒவ்வொரு அணுத்துகள் நேரமும்
எங்கள் உயிரின் நினைப்பிலேயே
தன்னையும் ஏன்
என்னையும் மறக்கிறாள்!
o
"இனி கணவனுக்கு கிட்டாதாம்
குழந்தைக்கு மட்டும் தானாம்"
என்ற கவிஞனின் வரிகள் - எந்தன்
நினைவினில் வந்தது.
o
வாய்க்கசப்பு குமட்டல் என்று
அவளுக்கு அப்பப்பா..
எத்துணை அவஸ்தைகள்..?
'தப்பு செய்தது இருவரும்
தண்டனை எனக்கு மட்டுமா?'- என்று
நக்கலுடன் அவள் கேட்டதில்
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு!

o
என் ஆரணங்கே!
உடல் வலியைப் பொறுக்கலாம்
உள்ளத்தின் வலியை
யார் பொறுப்பார்?
நீ படும் வேதனையால் - என்
உள்ளம் படும் வேதனையை
உள்ளுக்குள்ளே புதைத்துக்
கொ(ல்)ள்கிறேன்..என்றேன்!
o
"நீ படும் அவஸ்தைக் கண்டு..
பிள்ளையே வேண்டாமென
சில சமயம் நினைத்தது உண்டு!
உன், என் பெற்றோர்கள்
இது போன்று நினைத்திருந்தால்
இன்று நீ ஏது..நான் ஏது
நம்மினதுதான் ஏது?" என்றேன்.
o
"மூலன் வாக்கியம் போல்
முதலிரண்டு மாதங்கள்
என்னில் தங்கி..பின்
ஈரைந்து மாதங்கள் உன்னில் தங்க
வந்தது நம் வசந்தம்" என்றேன்!
o
எட்டி நின்றவள்
என்னோடு ஒட்டிக்கொண்டாள்!
அத்தான் விளையாட்டாய்தான் சொன்னேன்!
பெண் முழுமையாவது
தாய்மையில் தானே!
எத்துணை துன்பத்தையும்
தாங்கிக் கொள்வேன் என்றாள்!
0
தாங்கிக் கொள்வேன்
என்றவளை நான்
தாங்கிக் கொண்டேன்!
மெல்ல அவள் வயிற்றினை
தடவிச் சொன்னாள்
இன்னும் 182 நாட்கள்
இருக்கிறது என்று..
ஆம்! என் அஞ்சுக
மொழியினாளின் அஞ்சுகத்தின்
பிஞ்சுவிரல் தழுவல் பெற
இன்னும் காத்திருக்க வேண்டும்!
o
காத்திருப்பது
காதலில் மட்டும்
சுகம் அன்று
கருவை சுமப்பதிலேயும்தான்!..
0

2 Comments:

  • At 3:14 PM, Anonymous Anonymous said…

    'தப்பு செய்தது இருவரும்
    தண்டனை எனக்கு மட்டுமா?'- என்று
    நக்கலுடன் அவள் கேட்டதில்
    ஆயிரம் அர்த்தங்கள் உண்டு!


    தப்பு செய்தது என்பது தப்பல்லவா
    நண்பரே?
    கணவன் மனைவிக்குள் ஒரு புனித சங்கமம் என்று கூறலாம்.

     
  • At 5:38 PM, Blogger NambikkaiRAMA said…

    அனானிமஸ் நண்பரே தாங்கள் சொவது உண்மைதான்..தம்பதியிருவர் விளையாட்டாய் பேசிக்கொண்டால் எப்படி பேசுவார்கள் என்பதைத்தான் அதில் எழுதியுள்ளேன்.

    அதனால்தான் "நக்கலுடன் அவள் கேட்ட கேள்வியில்" என்ற வரியை இணைத்துள்ளேன்.

     

Post a Comment

<< Home