PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Thursday, January 04, 2007

நீயே குருவாய்...



குரு வாழ்க! குருவே துணை!


நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

நாயிற் கடையோன் அடியேனை
தாயாய் அணைத்துக் காப்பாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

வாழ்வின் இலக்கணம் அறிகிலேன்- நான்
வந்ததின் காரணம் புரிகிலேன்!

பிழைக்கணும் என்றே பிறந்திட்டேன் - மீண்டும்
பிறவாது எனைக் காப்பாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

பொன் பொருள் புகழென்னும் போதையினால்- தினம்
மடிந்திடும் மக்கள் கூட்டத்திலே

நின்புகழ் அறியாமல் இருந்தேனே - நின்
தரிசனம் காணாத வரைக்குமப்பா!

கனவில் மட்டுமே காட்சி தரும்- நீ
கண்முன் காட்சித் தருவாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சேயாய் நான் இங்கு தவிக்கின்றேன்
தாயாய் அமுதூட்ட வாராயா?

இனம் மொழி பேதம் காணும் இவ்வுலகில்
இதம் எங்கே கிடைத்திடும் நானறியேன்

பொய்தனை மெய்யாக்கும் புளுகரோடு - உன்
புதல்வனாய் நான் வாழ்தல் கடினமப்பா!

அடியார் அன்பையே நாடுகின்றேன் - அதை
அடியேன் மகிழவே தினம் தருவாய்

பேரிடியாய் வானம் மேல் விழுந்தாலும் - உன்
பெயர் சொல்லிடவே வரம் தருவாய்!

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சகலமும் ஆனப் பரம்பொருளே
சக்தியே சித்தியே சரண் அடைந்தேன்!

மெய்த்தவம் பற்றிட வேண்டி நின்னேன்
ஐயனே எந்தன் ஐயம் நீக்கு!

நான் வந்ததின் காரணம் புரிய வேண்டும்
வாழ்வில் உன்மணம் நுகர வேண்டும்!

கண்ணால் உனை நான் காணவேண்டும்!
கடவுளே உனை நான் அடைய வேண்டும்!

என்னைப் படைத்தவனே எங்கு சென்றாய்
என்னுள்தான் இருக்கிறாயா எங்கு சென்றாய்?

என்ன செய்திட்டால் நீ வருவாய்,
எந்தன் ஏக்கத்தை நீயும் போக்கிடுவாய்?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சகலமும் ஆனப் பரம்பொருளே
சக்தியே சித்தியே சரண் அடைந்தேன்!

(ஸ்ரீஅனுமன் கோயிலில் 16/12/2006 சனிக்கிழமை அன்று அடியேனுக்கு உதித்தது ! )

2 Comments:

  • At 7:29 PM, Blogger Mazalais.com said…

    மிகவும் அருமையான பொருட்செறிவு மிக்க பாடல். மெட்டமைத்துப் பாடவும். அபிநயம் பிடித்து ஆடவும் ஏற்றது.

    வளர்க உங்கள் கவிநயம்

    ஆகிரா

     
  • At 3:33 AM, Blogger Kavinaya said…

    ராமா, நீங்க ஒரு வலைப் பூ வச்சிருக்கதை இப்பதான் தற்செயலா பார்த்தேன். ரொம்ப எழுதறதில்லை போல... பாடல் மிக அருமை. ஏக்கமும். கனவிலாச்சும் வரானே உங்களுக்கு...

     

Post a Comment

<< Home