PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Tuesday, February 28, 2006

குழுமம்/வலைப்பூ நண்பர்கள் சந்திப்பு

வேந்தர் விருந்து
அன்பு நம்பிக்கை/முத்தமிழ்/அன்புடன்/சித்தம்/வலைப்பூ நண்பர்களே!

சென்ற ஞாயிறு எங்களுக்கு ஒரு மறக்கமுடியாத நாள். ஏன் என்று கேட்கிறீர்களாக.. இணைய நண்பர்கள் சந்தித்துக் கொண்டோம்.

சுருக்கமாய் சொல்வதாய் இருந்தால் ..

"சித்தமிகு நம்பிக்கை, அன்புடன் முத்தமிழில் சங்கமித்த நாள்" எனலாம்.

விரிவாக எழுதவில்லை என்றால் நம் கடலூர் நடேசன் வீச்சரிவாளோடு வந்திடுவதாய் தகவல்.. எனவே பணிச்சுமைக்கு இடையில் கொஞ்சம் தருகிறேன்.

26-2-06 ஞாயிறு அன்று வழமைபோல் பணிக்கு போகவேண்டி இருந்தது. அமெரிக்கா சின்சின்னாட்டி வேந்தரை/ மற்றும் மற்ற நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டாது போயிடுமோ என்று மனம் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தது.

வேந்தர் சென்னை வந்ததும் போன் பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தாரே ..இன்னமும் பண்ண வில்லையே என்று மனம் எண்ண :(( அவ்வப்போது குறள் ஆசான் இரவா(டாக்டர். வாசுதேவன்)வுக்கு போன் செய்து நிலவரத்தை அறிந்து கொண்டேன்.

பின்னர்தான் தெரிந்தது வேந்தர் நம்மை தொலைத்து விட்டார் என்று...இல்லை இல்லை எனது நம்பரை தொலைத்துவிட்டார் என்று :))

அலுவலக வேலை இருந்தாலும் முடித்தபின்னராவது எவ்வளவு இரவு ஆனாலும் அவரை சந்திக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஏனென்றால் "அன்புடன்" அன்பு காந்தி அவர்களும் வருவதாய் சொல்லி இருந்தார்கள். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு ஏற்கனவே வருகை புரிந்துள்ளார்கள். மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதே என்று மனதில் எண்ணம் ஓட...

மாலையும் நடைபெற இருந்த அலுவல் நிகழ்ச்சி பகலோடு ரத்தானது.

நம்மோட மகிழ்ச்சியை சொல்லவும் வேணுமோ.. :))

தேனாம்பேட்டையில் இருந்து அடையார் நோக்கி கிளம்பினேன்...

இரவா தந்த முகவரியில் ஆட்டோகாரன் நம்மளை இறக்கிவிட்டான்.

அமுதம் அங்காடி மாடியில் என்பதற்குப்பதில் , மடியில் இல்லை இல்லை...அருகில் என்று இருந்தமையால் அப்படியே ஒரு வாக் செய்து வேந்தர் தங்கியுள்ள ஹெஸ்ட் ஹவுஸ்-ஐ தேடினேன்.

தேடியகண்களில் மின்னல் என நம் இரவா என்பீல்டில் வந்து இறங்குவதைப் பார்த்தேன். இன்னொருவர் வெள்ளை ஜிப்பா வெள்ளை பேண்ட் சகிதமாய் ஸ்கூட்டரில் வந்து இறங்கினார்.. அவரை முன்பின் நன் பார்த்தில்லை எனினும் இவர் யாராக இருக்கும் என்று மனம் கணக்கு போட்டது.

இனி...

ராமா: என்ன சார் எப்படியிருக்கீங்க..

இரவா: வாங்க வாங்க சரியா மணி 3 க்கு வந்திட்டீங்க.. வரமுடியாதுன்னு சொல்லிட்டு இருந்தீங்களே ..

ராமா: (கரணம் தப்பினாலும் காலம் தப்பக் கூடாது) ஆமாங்க! நீங்க சொன்ன நேரத்துக்கு வந்திட்டேன்.. உங்க எல்லாரையும் சந்திக்கனும்கிற எண்ண அலை எனக்கு சாதகமாய் என்னை அழைச்சிட்டு வந்திட்டது.

(வெள்ளை ஜிப்பா காரர் விர்ரென்று எங்களைக் கண்டுக்காமல் மாடிப்படியேறினார்)

ராமா: அது யாரா இருக்கும்

இரவா: தெரியலியே ...

ராமா: சித்தார்த்தோ ..

(இப்போது நாங்கள் இருவரும் மாடிப்படியேறினோம். இரவா , வேந்தர் இருக்கும் அறையை திறந்து உள் சென்றார்.. நானும் அகலக்கண்களை விரித்தபடி உள் நுழைந்தேன் . ஆச்சரியம் வேந்தர் அப்படி ஒரு இளமையாக இருந்தார் (வயதே தெரியவில்லை , என்ன காயகல்பம் சாப்பிடுறாரோ :) ) .

ராமா: வணக்கம்

வேந்தர் : வணக்கம் , வாங்க, அமருங்க

இரவா: இவரை யாரென்று தெரிகிறதா ?

வேந்தர் : ????????????????????? :(

இரவா : ராம்

வேந்தர்:@@@@@@@@@@@@@@@@@ :(

(நான் சிரித்தபடி அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் :)) )

இரவா: நம்ம ராமா பாசிடிவ் ... ராமா

வேந்தர் : ஓ :)) நம்ம பாசிடிவ்ராமாவா..

(இப்போது இருவரும் நெருக்கமாகிக் கொண்டோம்)

வேந்தர் : ராமான்னு சொல்லுங்க..உடனே புரிந்திருக்கும் :)

(வேந்தர் மேற்கொண்டு வாயைத் திறக்கவில்லை ..தலையை மட்டும் ஆட்டியபடி இருந்தார்.. "என்னடா இது குழுமத்தில என்னா லொள்ளு பண்ணுவாரு" இவரா அவர் என்று யோசித்தேன் .. அப்படி யொரு அமுல் வேந்தராய் இருந்தார் ... மிக்க அமைதியோடு )

அந்த வெள்ளை ஜிப்பா வேறயாருமில்லை நம்ம அன்புடன் அன்பர் "சுரேஷ்" என்பது தெரியவந்ததும் மேலும் உற்சாகம் பற்றிக் கொண்டது.

ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம்.. மனுசனை சும்மா சொல்லக் கூடாது மூன்று கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார். ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் மிக முக்கியப்பொறுப்பில் இருந்து கொண்டும் அப்படியொரு அடக்கம் அவரிடம்.. குரல் நல்ல கணீர் கணீர் என்று இருந்தது ..அவரும் அப்படித்தான் இருந்தார் :) நல்ல அழகர் :)

அடுத்ததாய் ஒரு விருந்தினர் .. ஆம் அவரது கவிதைகளைப் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இன்றுதான் அவரை சந்திக்கிறம்.. சம்ஸ்கிருத்தில் நல்ல புலமை மிக்க "மதுமிதா" தான் அவர் . பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளில் அவரது எழுத்துக்களை நாம் காணலாம்.

[இரவா அவர்கள் மதுமிதாவை குறித்து சொல்கையில் ' இவரது கவிதைகள் எல்லாம் மது இதா..மது இதா என்று சொல்வதுபோல் இருந்ததால் இவர் மதுமிதா ஆகிவிட்டார்..என்று சொல்லியதை மிக ரசித்தேன்.]

அடியேன் யார் என்று அறிந்து கொண்டதும் மிக்க உற்சாகத்தோடு பேசினார்.

இனியும் இந்த இடம் பத்தாது என்று அறையை விட்டு ஹால் (பெரிய அறைக்கு) வந்தோம்..

இப்போ கச்சேரி களை கட்டியது ..

வட்டமேசை மாநாடு போல் இருக்கைகளை அடுக்கிக்கொண்டோம்

சற்று நேரத்திற்குள் இன்னொரு அம்மணி வந்தார்கள். என்னால் யாரென்றே யூகிக்க முடியவில்லை..

மதுமிதா மூலம் அவர்தான் "வலைப்பூ புகழ் " "சித்தம் பிராத்தனை கிளப் புகழ்" நியூசிலாந்து துளசி அம்மா என்பதை அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாய் ஆனது. ஏனென்றால் மனதில் ஒரு தள்ளாத வயது பாட்டியைத்தான் கற்பனை செய்து வைத்திருந்தேன் (துளசி அம்மா மன்னிக்கவும்) ஆனால் பாருங்கள். அப்படியொரு படபடப்பு சுறுசுறுப்பு கடகடவென பேசினார்.

இதில் பாசிடிவ் ராமா யாரென்று அவர் கேட்க.. மதுமிதா சொல்லாதீர்கள் என்று என்னை தடுக்க.. அவர் விழிக்க.. சுரேசை முறைத்து முறைத்து பார்க்க.. பின்னர் என் பக்கம் அவர் திரும்புகையில் பாவம் இனியும் அவர்களை யோசிக்க விடக் கூடாது என்று "நான்தேன்" என்றேன்.

ஒரே சிரிப்பு மயம்தான் போங்கள்:))

இருவரும் பரஸ்பரம் வணங்கிக் கொண்டோம்.

இதற்கிடையில் பணிப்பெண் இனிப்பு/காரம் வகைகளை டீபாயில் கொண்டு வைத்தார்கள்....துளசியம்மா அத்தனையையும் தனது டிஜிட்டல் கேமராவில் அடைத்துக் கொண்டார். அதனால் நாங்கள் சாப்பிட முடியாமல் போனது :)) .. காரணம் சாப்பாடு பற்றி எழுதவில்லை யெனில் வலைப்பூ நண்பர்கள் கோபித்துக் கொள்வார்களாம்.)

பல தலைப்புகளில் பேச்சு சென்றது..


வேந்தர் தனது மகளையும் மருமகனையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

துளசி : (வேந்தரின் மகள் கன்னல்மொழியை நோக்கி) நீங்க எதில் கவிதை எழுதுறீங்க?

கன்னல்: கவிதை எல்லாம் எழுதுறது இல்ல...ஆனா வாசிப்பேன்.. :)

ராமா: துளசி அம்மா! வேந்தர் எழுதிய அழகிய கவிதைதான் இவர்...

(அனைவரும் சிரிப்பலையில் ...)

இப்போதுதான் நம் "கோவைக்குசும்பு" வேந்தர் நார்மலுக்கு வந்தார் (அதாங்கோ பேச/குசும்ப ஆரம்பித்தார்)


இந்த நிகழ்வில் குவைத் "சித்தார்த்" உள்ளே நுழைந்தார்.. அவர்தான் சித்தார்த் என யூகித்தபடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். அனைவரும் சொன்னோம். அவர் தனது தங்கையின் திருமண அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கினார். அவர் ஒரு புத்தகப்புழு. எந்தப்புத்தகம் பற்றி கேட்டாலும் அவரிடம் விளக்கம் கிடைக்கும்.

நிறைய கதைகள் போய்க்கொண்டு இருந்தது.

முக்கியமான ஒருத்தர் இன்னும் வரலியே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.. ஆயுசு நூறுங்க! நம்ம அன்புடன் காந்தி உள்ளே நுழைந்தார்கள்.
கலகலப்புக்கு இப்போ பன்ஞ்சம் இல்லை.

ராமா: காந்தி அம்மா! ஷிபு(காந்தியின் சுட்டி பையன்) வரலியா ?
காந்தி : என் கணவர், மாமியார், பையன் எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்கள் ராமா.

(நம்ம சுரேஷ் , காந்தியை கண்டதும் உற்சாகத்தில் குதித்துக் கொண்டே இருந்தார். சுரேஷ், சித்தார்த், காந்தி இவர்கள் ஏற்கனவே சந்திருக்கிறார்கள்...காந்தி மதுமிதாவை வெளிநாட்டில் இருப்பவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தாராம்.. அவரும் இப்போதுதான் முதன் முதலில் சந்திக்கிறார்..)

சுரேஷ்:( காந்தியை நோக்கி) எங்களின் புரட்சித்தலைவியே வருக!

காந்தி : ஐயோ இவரு தொல்லை தாங்க முடியலை..

சுரேஷ்:(இர்வாவிடம்) எங்களையெல்லாம் அன்புடன் ஒருங்கிணைத்து கொண்டு செல்வது இவர்தான்.. என்ன காந்தி அம்மா!

காந்தி: என்னாஆஆஅ து அம்மா வா?

சுரேஷ்: ராமா சொன்னாரே அதான் நானும் சொன்னேன்.

ராமா: நீங்க புரட்சித் தலைவின்னு சொன்னதைதான் நான் கொஞ்சம் மாற்றி "அம்மா" என்றேன். என்ன கலர் புடவை(பச்சைப் புடவையில் வந்திருந்தார்) கட்டியிருக்கிறார் பாருங்கள் .

(அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்..இப்போ நம் வேந்தரும் கலாய்க்க ஆரம்பித்தார்)

வேந்தர் : அப்ப உடன்பிறவா சகோதரி..

துளசி: நான் தான் உடன்பிறவா சகோதரி ..

மதுமிதா: உப்புசமா இருக்கீங்க பொருத்தம்தான். ஆனா அம்மாதான் கொஞ்சம் மெலிந்து இருக்காங்க..

(ஹா ஹா)

சுரேஷ்: அப்ப நம்ம இரவா ஐயாவிற்கு தமிழ்த்துறை கொடுத்திட வேண்டியதுதான்.

[ இதற்கிடையே வேந்தரிடம் நான் அமெரிக்க கலாச்சாரம் இங்கிருந்து செல்பவர்களை எப்படி பாதிக்கிறது? எப்படி அவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள் என்று பலவும் பேசினேன். தனது மனைவிக்கு கூட தெரியாமல் வேந்தர் அவர்கள் செய்து வரும் பல நல்லகாரியங்கள் அவரது உதவும் மனப்பான்மையை வெளிப்படுத்தியது]

[திடீரென்று ஒரு போன் கால் எனக்கு வர...அதை யாரெனக் கேட்க நம்ம கடலூர் நடேசன் சார்..உற்சாகமாய் என்ன ராமா யாரெல்லாம் இருக்கிறாங்க என்று கேட்க.. நான் வேந்தரிடம் மற்றும் இரவாவிடம் கொடுத்தேன். அவர் பேசியதைதான் அனைவரும் அவரது மடலில் படித்துவிட்டீர்களே.. ஒரு அரை மணி நேரமாவது பேசியிருப்பார்கள்.நான் காந்தியிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் கடலூர் மாவட்டக் காரங்க பாருங்க அதான் போனில் கலாய்க்கிறாங்க என்றேன்]

எங்கள் பேச்சு பெண்கள் சுதந்திரம், நம்பிக்கை, அன்புடன், முத்தமிழ், சித்தம் என்று பலவாறு சென்று கொண்டு இருந்தது.

பலகாரங்களை வாணலியில் சுடுவதை அறிவோம். ஆனால் துளசி அம்மா தனது கேமாராவில் பலகாரங்களோடு எங்களையும் சேர்த்து சுட்டுக்கொண்டு இருந்தார். துளசி அம்மா நியுஸிலாந்தில் நடத்தி வரும் வீடியோ லைப்ரரி, பணிகள் குறித்தும் பேசினோம்.

(எனக்கு எதை விட எதை தொட என்று தெரியாமல் மனதில் வந்ததையெல்லாம் வேகவேகமாக தட்டச்சிக் கொண்டு இருக்கிறேன். எழுத்து/கருத்துப் பிழைகளை மன்னிக்க.)

நேரம் ஆறை நெருங்கிக் கொண்டு இருந்தது..

துளசி அம்மா கிளம்ப துவங்கினார்.. கொஞ்சம் பொறுங்கள் என்வீட்டினர் எல்லாரும் இப்போ வந்திடுவாங்க என்று காந்தி சொல்ல.. சொன்னபடி காந்தி குடும்பம் வந்தது.

காந்தியின் கணவரை , மாமியாரை இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்.

நம்ப முடியவில்லை... நம்ப முடியவில்லை.. என்னால் நம்ம முடியவில்லை...

நம்ம காந்தியோடு கணவரா இவர். மனுசர் அப்படியொரு அமைதி.

அவருக்கு ஜெகந்நாதன் என்ற பெயரைவிட சாந்த நாதன் என்பது மிகப்பொருத்தம். ரொம்ப அமைதியானவராய் சாந்தரூபமாய் , மெலிதான புன்னகையோடு இருந்தார். சும்மா இல்லீங்கோ அவர் மிகச் சிறப்பான ஓவியருங்கோ..(எல்லாத்துக்கும் மேல அவரு எங்க ஊருக்காருங்கோ அதான்..மக்கா ஊருதாங்கோ)

அடுத்து காந்தியின் மாமியார் .. உண்மையில் இப்படியொரு மாமியார் மருமகள் காம்பினேஷன் பார்ப்பது ரொம்ப அரிது. (காந்தி உங்க ரெண்டுபேருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கோ)

நான் நெல்லை மாவட்டம் அருகில் உள்ளவன் என்பதை அறிந்ததும் மேலும் நெருக்கமாகி விட்டார். ஷிபு கண்ணா அங்கே இருந்த மீன் தொட்டியில் மீன்களோடு விளையாடிக் கொண்டு இருந்தான்.

இப்போ மணி 6.15 ஒவ்வொருவராய் விடைபெற்றனர்.

காந்தி&குடும்பம், சுரேஷ், மதுமிதாம்,துளசி என்று ஒவ்வொருவராய் விடை பெற்றனர்.

எஞ்சி நின்றது.. சித்தார்த், இரவா, நானும்தான். நாங்களும் விடைபெற்றோம்.. வேந்தர் வழியனுப்ப வாசல் வரைக்கும் வந்தார்.

இரவா தனது புல்லட்டை உதைக்க அது அவரைப்போலவே கர்ச்சித்தது..

சித்தார்த் தனது தங்கையின் வாகனத்தில் கிளம்பத் துவங்கினார்.

வேந்தர் : ராமா நீங்கள் இருசக்கரம் வாகனம் வைக்கவில்லையோ ?

ராமா: "நாற்சக்கரம் வாங்கும் வரை பாதையாத்திரை " என்ற எனது சார்பை விளக்கிவிட்டு இரவா அழைத்த்மையால் அவரது வாகனத்தில் அமர்ந்து கொண்டேன்.

[வேந்தர் அமெரிகாவிலேயே பல ஆண்டுகள் இருந்தும் ஆங்கிலக் கலப்பின்றி அருமையான தமிழில் பேசினார். ஆனால் நான் பாருங்கள்..என்னை நினைத்து நானே வெட்கிக் கொண்டேன் :( ]

இரவா வாகனத்தில் பயணிக்கும் போது இலக்கிய விருந்தளித்தபடி என்னை ஜெமினியில் டிராப் செய்தார்.

பேசியது அத்தனையும் இங்கே எழுத நேரம் பத்தலை. நான் விட்டதை மற்றவங்க தங்களின் பார்வையில் எழுதிடனும்..

இணைய இனிய நண்பர்களின் சந்திப்பு நாளும் தொடரனும்..நட்பு வளரனும்


Wednesday, February 15, 2006

சபலம்

ஜெயமே ஜெயம் - 13
இந்த ஜெயத்தில் நாம் அலசப் போகும் விசயம் சற்றுக் கடுமையான ஒன்றுதான். இதனால்தான், இந்த குணத்தினால்தான் மனிதன் நெறிகெட்டு தறிகெட்டுச் சென்று விடுகிறான்.

கோமானாக இருந்தாலும் நொடிப்பொழுதில் அவனை மழுங்கி விடச் செய்யும் ஒரு விசயம் இதுதான். ஏழை, பணக்காரன் என்று அனைவரையும் பாதிக்கும் விசயமும் இதுதான்.

"நல்லவன் என்று பெயர் எடுக்க பல காலம் வேண்டும்; கெட்டவன் என்று பெயர் எடுக்க சில நொடிகள் போதும் " என்று நம் பெரியோர்கள் வலியுறுத்துவது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை, இதை அலசும் போது நாம் அறிவோம்.

ஒருவன் தனது பருவத்தில் 21 - 25 வயது வரை இதற்கு ஆட்படாமல் அதாவது இதன் போக்கிலேயே சென்று விடாமல் தன்னை அடக்கி ஆள்வான் ஆகில் அவனால் எதையும் சாதிக்க முடியும்.

ஆனால் சிலர் 3 வது கால் துணையோடு நடக்கும் போதும் கூட இதன் பிடியில் சிக்குண்டு சின்னாபின்னம் ஆகிறார்கள்.

என்னடா இது "ஏதோ டி.வி கேம் ஷோவுக்கு கேள்வி கேட்பது போல் இருக்கிறதா?"

நீங்கள் யூகித்த் விசயம் சரிதான்.

ஆம்! அதுதான் "சபலம்"

இதைப் பற்றியதுதான் நமது இன்றைய அலசல்.
Image hosting by Photobucket
ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஈர்ப்பு என்பது இயற்கை விதிதான். ஆனால் , எல்லாம் தனக்கு என்று உரிமையில்லாதவற்றின் மீது பிரயாசைப்படுவது எவ்வளவு தூரம் நம்மை பாதிக்கும் என்பதை நாம் அறிவது இல்லை.

ஏன் இந்த சபலம்? இது எவ்வளவு பெரிய பிரச்சனைக்கு எல்லாம் கொண்டு செல்கிறது.

இன்றைய இளைஞர்களைப் பெரிதும் சீரழிப்பது இதுவேதான்.

சபலம் அதிகமாகி காமத்தில் கொண்டுச் சென்று , தான் செய்வது சரிதானா என்பதை உணராமல் தவறும் செய்து விட்டு பின்னர் "ஐயோ ஏன் அப்படி செய்தோம், ஒரு நிமிடம் என் புத்தி வேலை செய்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாமே " என்று புலம்பவும் வைக்கிறது.

நாம் நமது புத்தியை அடக்கியாள தெரிந்திருக்க வேண்டும்.

மனம் எனும் குதிரையை அடக்கியாளல் வேண்டும்.. இல்லை இல்லை "மன்மதலீலை ...மன்மதலீலை "என்று போனால் வாழ்க்கை பாசிடிவ்வாக இருக்காது HIV பாசிடிவ்வாகத்தான் இருக்கும்.

"இந்திரியம் தீர்ந்து விட்டால் சுந்தரியும் பேய் போல் " என்பதை ஒவ்வொரு இளைஞனும் உணர வேண்டும்.

ஒரு ஆணோ பெண்ணோ தவறு இழைக்கச் செய்வது இந்த சபலம் தான்.

ஈவ் டீசிங், ஆடம் டீசிங், பலாத் காரம், இன்னும் சிலவை தட்டச்சு செய்ய என் விரல் கூசுகிறது ...அனைத்திற்கும் அடிப்படை இந்தக் கொடுமையான குணம்தான்.

தனிமை ஒருவனை நன்கு சிந்திக்க வைக்கும் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை. ஆனால் அவன் எப்படி சிந்திக்கிறான் என்பதுதான் முக்கியம்.

அந்த அந்த வயதில் வரும் ஆசைகள் இயற்கைதான்.

அதற்காக முரண்பட்ட தவறான பழக்கங்கள் நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் புதைகுழிகள் என்பதை மறந்து விடக்கூடாது.

கருணைபிரபு இயேசுபிரான் சொல்லும் போது " ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கினாலே நீ அவளோடு விபச்சாரம் செய்தது போல் ஆகும்" என்பதில் இருந்து சபலம் நம்மை, நம் சுயகட்டுப்பாட்டை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


அமெரிக்கா சென்ற விவேகானந்தரின் கட்டுடலில் தன்னை இழந்த சீமாட்டி ஒருத்தி விவேகானந்தரிடம் சென்று "உங்கள் மூலம் எனக்கு ஒரு குழந்தை வேண்டும் " என்று வெட்கத்தை விட்டுக் கேட்டாளாம். அதற்கு அவர் "நானே உனக்கு குழந்தையாகிறேன் தாயே" என்றாராம். தன் தவறை உணர்ந்த அவள் பின் விவேகானந்தரின் சிஷ்யை ஆனாள்.

இதுவல்லவோ ஆண்மை. இந்த குணத்தினால் அன்றோ விவேகானந்தர் ஒவ்வொருவருக்கும் இலட்சிய வேந்தனாய் நிற்கின்றார்.

"அட ராமா ..நீ என்ன பெரிய இவனா? " என்று என்னை நீங்கள் கேள்வி கேட்க கூடும்.

இந்தக் கட்டுரையானாது சபலத்தால் அலைக்கழிக்கப்பட்டு அதில் இருந்து தன்னை எப்படியாவது விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவனிடம் போய்ச் சேர்ந்தால் மிக மகிழ்வேன்.

சபலம் வாழ்வில் அவலத்தைதான் தரும்.

இதை வெல்வது அல்லது கொல்வது எப்படி ?

முதலில் சொல்லப்போனால் கூடுமானவரை தனிமையைத் தவிருங்கள்.

தனிமையல்லவோ இனிமை..என்று சிலர் எண்ணக்கூடும். தவறான சிந்தனை தனிமையில் இருக்கும் போது வந்துவிட்டால் அது விடாது கருப்பாக நம்மை ஆட்க்கொண்டு விடும். அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

கூடா நட்பைத் தவிருங்கள். நேரம் தவறிய தூக்கத்தையும் , அளவுக்கு அதிகமான உணவையும் கண்டிப்பாய்த் தவிர்க்க வேண்டும். மதுபானங்கள், போதை வஸ்துகள் மனிதனின் புத்தியை மழுங்கடித்து அவனது சீரிய சிந்தனையை சீரழித்து விடுகிறது.

"வாழ்க்கையை இஷ்டம் போல் அனுபவிக்காமல் வாழ்வதா?" என்று ஏளனும் செய்யும் கூட்டதில் இருந்து விலகியே இருங்கள்.

மஞ்சள் பத்திரிக்கைகளும் மசாலாப் பத்திரிக்கைகளும் பெருத்து பெரும்பாலான ஊடகங்கள் ஆபாசத்தை அள்ளி வழங்குவதில் போட்டி போடும் சூழலில், சபலத்தில் இருந்து ஒருவன் தன்னைக் காத்துக்கொள்வது என்பது ஒரு பெரிய சவால்தான். ஆனால் நல்ல புத்தகங்களை நண்பர்களாகக் கொண்டவருக்கு தனிமை என்பதே இல்லைதானே.

தவறு செய்வதற்கான சூழலில் இருந்து விலகியே இருங்கள். அதனால்தான் தனிமையைத் தவிருங்கள் என்றேன். இருவராய் இருப்பதும் சில நேரங்களில் தவறு இழைக்க வாய்ப்பாகி விடும். குறிப்பாய் ஹாஸ்டல் வாழ்க்கை வாழும் மாணவர்கள் தனியே படுப்பதைத் தவிர்த்து ஒரே அறையில் 3 அல்லது 4 பேராக படுக்கலாம்.

கல்லூரி/பள்ளி மாணவர்கள் எதிர்பால் மாணவர்களுடன் பேசும்போது கண்களைப் பார்த்து பேசுங்கள். ஒருவர் கண்ணைப் பார்த்து பேசும் போது உண்மையை மட்டுமே பேச முடியும். உங்களுக்கென்று ஒரு இமேஜ் உருவாக்கி கொள்ளுங்கள். "நான் அப்படி பட்ட மோசமானவன் இல்லை " என்று வெளிப்படையாய் சொல்லுங்கள். நீங்கள் சொன்னதை கடைப்பிடிக்க வேண்டும் என்று உங்களையும் அறியாது முயலுவீர்கள். அந்த இமேஜ் உங்களை தவறு செய்வதில் இருந்து பாதுகாக்கும்.

குடும்பமானத்தைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். நாம் செய்யும் தவறு நம் வீட்டில் வேறு யாராவது செய்யக்கூடின் ..என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள் மறுகணமே நெற்றிப்பொட்டில் அடித்தார்போல் ஞானம் பிறக்கும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியோ, சினிமாவோ குடும்பத்தோடு அமர்ந்து பாருங்கள்.(தவறான நிகழ்ச்சி பார்க்கும் வாய்ப்பு ஏற்படாது).

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் எப்போதும் கலகலப்பு இருக்கும். அங்கு தனிமை தவிர்க்கப்படும். தவறு செய்யும் சூழலும் உருவாகாது.

"ஒருவன் சந்தர்ப்பம் கிடைக்காத வரையில் நல்லவனாய் இருக்கிறான்" என்று சபலத்தைக் கொண்டாடுபவர்கள் சொல்வதுண்டு. ஏன் அந்த சந்தர்ப்பத்தை நாம் எதிர்பார்க்க வேண்டும். தவறு செய்யும் தூண்டலின் போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அவமானங்கள் இவற்றை எண்ணிப்பார்த்தால் ஒருத்தன் கூட தவறு செய்ய மாட்டான்.

"வாழ்க்கையில் எத்துணையோ விசயங்கள் சாதிக்க இருக்கும் போது கேவலம் இந்த சபலத்திற்கு ஆளாகி நமது சுயத்தை தொலைப்பதா?" என்று ஒரு கேள்வி நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நாம் பாதுகாக்கப்படுவோம்.

வராலாற்று நிகழ்வுகளில் பெரும்பெரும் சாதனை படைத்தவர்கள் கூட இந்த சபலத்தினால்தான் சின்னா பின்னாமாகிப் போய் இருக்கிறார்கள்.

ஒருவன் சின்ன வயதிலேயே காமக்களியாட்டத்தில் ஈடுபட்டு பெரும் பாவம் இழைத்து வந்தான். இவனை இப்படியே விடக்கூடாது என்று அவனுக்கு உடனே கல்யாணம் செய்து வைத்தார்கள் அவனது பெற்றோர். அவனோ, பெண்டாட்டியே கதி என்று கிடந்தான். அவனது மனைவி வெறுத்துப் போனாள். இப்படி ஒரு காமப்பேய் நமக்கு துணையாக வந்து விட்டதே இறைவா என்று கதறினாள். முடிவில் சண்டை போட்டுவிட்டு தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

இளம்மனைவியின் இன்பத்தில் களித்த அவனால், அவள் இல்லாமல் இருக்க முடியவில்லை. இரவோடு இரவாக அவள் தாய்வீட்டிற்குச் சென்று விட்டான். கொட்டும் மழையினையும் பொறுப்படுத்தாது, அடிக்கும் புயலையும் அலட்சியம் செய்து விட்டு வேகமாய் அவ்வீடு நோக்கி முன்னேறினான்.

வீட்டின் கதவு தாளிடப்பட்டு இருந்தது. எனவே , மாடிவழியே செல்ல மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றின் வழியே ஏறி தன் மனைவியை இச்சையோடு அழைத்தான். தன் கணவன் கயிறு என்று பிடித்து ஏறி வந்திருப்பது பாம்பு என்பதை அறிந்த அவள், தன் கணவனின் காமப்பசி கண்டு கடுஞ்சினம் கொண்டாள், "ச்ச்சீ! நீயெல்லாம் ஒரு மனுசனா? உன் பெண்டாட்டி சரீரத்தின் மீது வைத்திருக்கும் இந்தப் பிடிப்பை ராம நாமத்தின் மீது வைத்திருந்தால் புண்ணியம் பெற்று இருப்பாயே" என்று அதிர்ந்தாள்.

அவனும் அதிர்ந்து போனான். காமப்பேயால் சூழப்பட்ட அவன் தன் நிலை உணர்ந்தான் , தன்னை மன்னிக்கும்படி மனைவியை வேண்டினான். என் கண்களைத் திறந்தாய் என்று சொல்லி அன்று முதல் "ராம நாமம்" பாடிச் சிறந்தான். ஆம்! அவர்தான் இராமாயணம் தந்த துளசிதாசர்.

மனைவியே/கனவனே ஆனாலும் கூட, அவளிடம்/அவனிடம் காமம் என்பது முறையாக இருக்கவேண்டும் . இல்லையெனில் வாழ்வில் நிச்சயம் முன்னேற்றம் இல்லை.

இன்னும் நிறைய புராண உதாரங்களை நீங்கள் அறிவீர்கள். சபலத்தை விட்டவனே உண்மையான சாதனை படைக்கிறான்.

இளமையில் சபலத்தை வென்று ஆன்மபலத்தைக் கூட்ட வேண்டும்
அதற்கு தியானம், யோகா, பிரார்த்தனை, உடற்பயிற்சி போன்றவை பயன்படும்.

மனதிலே நேர்மையான, உண்மையான, வலிமையான இலட்சியம் ஒருவன் கொள்ளாதவரையில் அவனால் சபலத்தை வெல்வது என்பது கேள்விக்குறிதான்.

அழகை ஆராதியுங்கள் அனுபவிக்க நினையாதீர்கள். கண்கள் அலைபாய்ந்தாலும் நம் கடமையை மனக்கண் முன் நிறுத்தி அலைபாயும் எண்ணத்தில் இருந்து உங்கள் இதயத்தை மீட்டு வாருங்கள்!

இதுகாறும் படித்து விட்டு "ஐயோ இவ்வளவு நாளும் இப்படி இருந்து விட்டேனே இனி என் செய்வேன் " என்று வருந்தத் தேவையில்லை.

இன்று புதிதாய் பிறந்தேன் என்று சொல்லி புது இலட்சியம் கொண்டு வெற்றியின் இலக்கை நோக்கிப் பயணியுங்கள்.

வீழ்வது நாம் ஆயினும் நம் இலட்சியம் வெல்லும் என்று நம்புங்கள்.இலக்கை நோக்கியே உங்கள் கவனம் முழுதும் இருக்கட்டும்.

எதிர்படும் இன்னல்களை, சவால்களை வெற்றி கொண்டு வீரநடை போடுங்கள். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை மனதில் அடிக்கடி உரு ஏற்றிக் கொள்ளுங்கள்.

அன்பர்களே! வானம் நிச்சயம் வசப்படும்!

ஜெயம் வ(ள)ரும்...


Tuesday, February 14, 2006

காதலர் தினமாம்???

#
இறக்குமதி செய்யப்பட்ட
சரக்குகளில் இதுவும் ஒன்று
இளைஞர்களைக் கெடுக்க வந்த
சிகப்புச் சுனாமி!
#
மாணவ சமுதாயம்
இதில் மட்கிப் போவதை
நம்மால் மறுக்க முடியுமா?
#
மெரினா பக்கம் சென்றால் தெரியும்
மறைக்கப்பட வேண்டிய அத்தனையும்
அப்பட்டமாய் திறந்த வெளியில்..
16 ம் - 18 ம் கட்டியணைத்தப்படி
கடற்கரை, பூங்கா இன்னும் பல இடங்களில்
காரணம் காதலர் தினமாம்.
#
ஒட்டிக் கொள்வதும்
உரசிக் கொள்வதுமாய்
விரசங்கள் அத்தனையும்
வீதியில் அரங்கேற்றம்!
#
எல்லா அரங்குகளிலும்
சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜோடிகளுக்கு மட்டும் அனுமதி
தள்ளுபடி விற்பனை
சொல்லி மாளாது..
#
பத்திரிக்கை , தொலைக்காட்சியில்
அப்பப்பா சொல்லவே வேண்டாம்..
வியாபார தந்திரிகளின் யுக்தி
வெற்றி பெற்றி ருக்கிறது.
#
பள்ளி சென்று வரும் பெண்
கல்வி கற்று வருவாளோ -இல்லை
கலவி கற்று வருவாளோ என்று
கையில் உயிரை பிடித்தபடி தாய்.
#
சேயாய் இருக்கையில்
செய்த விளையாட் டெல்லாம்
தாயாய் ஆகையில்தான்
தவறென்று புரிகிறது.
#
நெஞ்சில் கை வைத்து
சொல்லுங்கள் பார்ப்போம்!
நம் வீட்டில் - இந்
நிகழ்வை அனுமதிப்போமா?
#
உண்மைக் காதலே
உன் பெயரை கையகப்படுத்தி
வியாபாரமும் விரசங்களும்
அரங் கேறுவதால் - எனக்குள்
எழுந்த கோபம்தான் இது.
#
பழுது பார்க்கவேண்டிய விசயங்கள்
பல இங்கே இருக்கையில்
வீணே பொழுதைப்
போக்குதல் சரியோ?
#
இளைஞர் தினத்திற்கு
இத்தனை வரவேற்பு இல்லை
காதலர் தினம் என்றால்
வரிந்து கட்டுகிறார்கள்.
#
ஓ! விவேகானந்தா
மீண்டும் நீ பிறந்துவா
காமத்தில் மோகத்தில்
கிடக்கும் எங்களுக்கு -ஞானத்தை
வீரத்தை புகட்ட வா.
#
வரும் போது கைகளை
இறுக மூடிக்கொள் - இல்லையேல்
உனக்கும் கையில் சிகப்புரோஜா
கொடுத்திடுவர் ஜாக்கிரதை!

முக்கியக் குறிப்பு: உண்மை காதலுக்கு எந்நாளும் எம் வாழ்த்து உண்டு!