PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Friday, May 26, 2006

கால்(1/4 )Age

ஜெயமே ஜெயம் - 15 (மாணவர்களுக்கான சிறப்புப் பதிவு)

"தேர்வு எழுதிய அன்றே புத்தகச் சுமையை தூக்கி எறிந்தாயிற்று. நுழைவுத் தேர்வு என்று உயிரை வாங்கினார்கள்; எறிந்ததை மீண்டும் படித்து இப்போ எல்லா தேர்வும் முடிந்தாயிற்று. தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டது. இனி அவற்றை படிக்கத் தேவையே இல்லை. ஹைய்யா! இனி நான் பள்ளி மாணவன்/மாணவி இல்லை. இனி நான் கல்லூரி போகப்போகிறேன். ஹைய்யா ஜாலி .. நான் பெரியவனா(ளா)யிட்டேன். கல்லூரியில் பள்ளி மாதிரி கட்டுப்பாடு இருக்காது. இனி என் இஷ்டம் தான். ஒரே ஒரு புத்தகம் , ஒரு நோட்டு , ஒரு டிபன் பாக்ஸ் இவ்ளோதான். சுதந்திரமா பறக்கப் போறேன் " என்ற துள்ளலோடு இருக்கும் மாணாக்கர்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும்..

அன்புச் சகோதர சகோதரிகளே! இந்தக் கல்லூரி பருவம் மிக மிக முக்கியமானது. ஒருவன் கோடீஸ்வரன் ஆவதற்கும் கேடீஸ்வரன் ஆவதற்கும் இதுதான் களம். இந்தக் களத்தில் நீங்கள் என்ன கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் எதிர்காலம் அமையப் போகிறது.

இந்த சகோதரனின் அட்வைஸாக கருதாமல் யோசனையாக மேற்கொண்டு படித்தால் உங்களுக்கு நன்மை. எனக்கு புண்ணியம்:)

மோசமான வயது இந்த டீன் ஏஜ்..:( மீசை முளைவிடும் போதே ஆசைகளும் முளை விடுகிறது. அடங்காமல் ஓடிடும் இந்தக் குதிரையை நாம் அடக்கியாண்டிட வேண்டும். அதற்கு நல்ல சேர்க்கை வேண்டும் . "சேரிடம் அறிந்து சேர்" என்பார்கள். அதை முதலில் உணர வேண்டும்.

'கல்லூரிப் படிப்பு படிக்கப் போறோம், ஆஸ்டலில் தங்கப்போகிறோம், அப்பா அம்மா தொந்தரவு இனி கிடையாது, யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது, இஷ்டப்படி இருக்கப் போகிறேன்' என்ற நினைப்பை வைத்து இருந்தால் அதை அறவே ஒதுக்கி விடுங்கள்.

எல்லாப் பிள்ளைகளும் அப்படி இல்லைதான். ஆனால் மோசமான சந்தர்ப்பங்கள் நல்ல உள்ளங்களையும் உருக்குலையச் செய்து விடும் . காலம் கலிகாலம், இப்போது கேள்விப்படும் விசயங்கள் சரியானதாய் இல்லாததால் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் இதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். இவ்வளவு வெளிப்படையாய் உனது பெற்றோரிடம் இந்த செய்தியை பெற முடியாது. இதையெல்லாம் எப்படி தன் பிள்ளைகளிடம் எப்படிச் சொல்வது என்ற தயக்கம் இருக்கும். அதற்காகத்தான் நான் உங்களிடம் சொல்கிறேன்.

மனதில் உறுதி கொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் கெட்டுப்போக மாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள். இது இரண்டும் கெட்டான் பருவம். இப்போது இதை நான் சொல்வது உங்களுக்கு எரிச்சலாகக் கூட இருக்கும்.

உடல்நிலை மாறுபாட்டால் உள் எழும் உணர்வை, மேலும் கிளர்ந்து எழச் செய்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டுதான் பெரும்பான்மையான ஊடகங்கள் செயல் படுகின்றன. அவற்றின் பிடியில் நீங்கள் விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்து விடாதீகள். மடிந்து போவீர்கள். காதல் என்ற மாயையில் விழுந்து உங்கள் இலட்சியங்களை வீணடித்துக் கொள்ளாதீர்கள்.


உங்களுக்கென்று குடும்பம் இருக்கிறது. "நமது பெற்றோர் அரும்பாடு பட்டு நம்மை வளர்த்து உள்ளார்களே அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை சிந்தியுங்கள்"

உங்கள் கையில் தற்போது செலவுக்கு புழங்குவது எல்லாம் உங்களது பெற்றோரின் கடின உழைப்பினால் , அவர்தம் சிந்திய வியர்வையினால் வந்த செல்வமே. அதை எக்காரணம் கொண்டும் தவறான வழியில் செலவழிக்க மாட்டேன் என்ற உறுதியை நீங்கள் உடனே எடுக்க வேண்டும். இல்லையெனில் அது அவர்களது உழைப்பையே நீங்கள் அவமதித்ததிற்குச் சமமாகி விடும். நீங்கள் செய்யும் செலவு ஒவ்வொரு முறையும் நல்ல விசயத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற உறுதி வேண்டும்.

சில கீழ்த்தரமான நண்பர்கள் இருப்பார்கள் "வாடா அந்த :( படத்திற்கு போகலாம் , இந்தப் படத்திற்கு போகலாம் , இந்தப்புத்தகத்தைப் படிச்சு பாரு ரொம்ப இண்ட்ரஸ்டிங்காய் இருக்கும், இதெல்லாம் தப்பே இல்லைடா" என்று ஆசை வார்த்தைக் காட்டுவார்கள். " வா 'தம்' அடிக்கலாம், ஒரு 'பெக்' ஊத்திக்கலாம் , இதெல்லாம் இப்பதான்டா பண்ணமுடியும், இதுதாண்ட லைப் , எல்லா பெருசுகளும் இந்த வயசுல இதைத்தான் செஞ்சிருப்பாங்க " என்றெல்லாம் தவறாய் போதை ஊட்டும் தறுதலைகளிடம் இருந்து விலகியே இருங்கள்.

இண்டர்நெட் கஃபே போன்றவற்றிற்கு செல்லும் போது ரகசியமான இருப்பிடத்தை தேர்ந்தெடுக்காதீர்கள். பொதுவான இடத்தில் அமர்ந்து மின்னஞ்சல்களை பார். அந்த பழக்கம் உன்னை பல தீயவழிகளில் இருந்து பாதுகாக்கும். சகோதர சகோதரிகளே இணையம் ஒரு கத்தி போன்றது. புத்தியை தீட்ட மட்டும் உபயோகியுங்கள். உங்களையே நீங்கள் குத்திக் கொல்லாதீர்கள். இதில் மிகத் தெளிவாய் இருங்கள்..

இறைவன் மீது முழுமையான நாட்டம் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தை பிரார்த்தனையிலோ அல்லது நல்ல விளையாட்டுகளிலோ செலவிடுங்கள்.

விவேகானந்தர் போன்ற இலட்சிய புருஷர்களை உதாரணமாய் கருதுங்கள். அவர் போன்ற பெரியோர்களின் புத்தகங்களைப் படியுங்கள். இப்போது நீங்கள் காத்து கொள்ள வேண்டியது உங்கள் பிரம்மச்சரியத்தை. உங்கள் கவனம் முழுதும் உங்கள் படிப்பில் மட்டும் இருக்கட்டும். இறைவன் மீது எல்லையற்ற அன்பு வையுங்கள்.


இறைவா நான் என்ன நினைக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அதையே நான் நினைக்க வேண்டும்!

இறைவா நான் என்ன பேச வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அதையே நான் பேச வேண்டும்.

இறைவா நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அதையே நான் செய்ய வேண்டும்.

"இறைவா என்னை தீய வழிகளில் செல்லா வண்ணம் காத்தருள் " என்று மனம், வாக்கு, செயலால் ஒவ்வொரு நாளும் இறைவனை உருகிப் பிரார்த்தனை செய்யுங்கள், உங்கள் படிப்பு முடியும் போது தங்கமாய் ஜொலிக்க வேண்டுமே தவிர, தரம் கெட்டுப் போய் இருக்கக் கூடாது.

தனிமனித ஒழுக்கம் தான் உங்களை உண்மையான வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அதற்கு உங்களைத் தயார் படுத்துங்கள். தினமும் நற்சிந்தனை செய்யுங்கள். நல்ல நண்பர்களை அடையாளம் காணுங்கள். உங்களை முதலில் விரும்புங்கள். உங்களை விட நல்ல நண்பனோ, மோசமான எதிரியோ உங்களுக்கு இருக்க முடியாது.

இளமை போனால் திரும்ப வராது. இந்த இளமையை ஆக்கப் பூர்வமான விசயங்களுக்கு பயன்படுத்தி, குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பொறுப்பாய் பயின்று, தேர்ந்து நல் வேலையில் அமர்ந்து, அல்லது ஒருதொழிலை தொடங்கி சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தைப் பெற்று ஆன்மீக வாழ்வு வாழுங்கள்.

என்னடா! எப்படி படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பதைப் பற்றி ஒன்று கூட இவர் சொல்லவில்லையே என்று நீங்கள் எண்ணலாம். சகோதர சகோதரிகளே ஒழுக்கத்தைப் படியுங்கள் . அதில் தேர்ந்து விடுங்கள். அதன் பின் நீங்கள் எதைப் படித்தாலும் , எந்த காரியத்தில் இறங்கினாலும் வெற்றி உங்களுக்கே உங்களுக்குதான்.

இது 1/4 ஏஜ் தான் கடக்க வேண்டிய தூரம் நிரம்ப இருக்கிறது. என் மடலை விரும்பி படித்த நீங்கள் வெற்றிபெற இதயப் பூர்வமாய் பிரார்த்திக்கிறேன்.

குறிப்பு:
இந்தச் சுட்டியை காண்டிப்பாகச் சென்று படியுங்கள்! வெற்றி பெற வாழ்த்துகிறேன்!
http://jmapsrama.blogspot.com/2006/02/blog-post_15.html

அன்புடன்

உங்கள் சகோதரன்.