PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Thursday, October 15, 2009

ஜெயமே ஜெயம் 17 - பாராட்டுவோம்!


நம்பிக்கையின் வெற்றிக்கு தங்கள் படைப்புக்களால், பின்னூட்டங்களால், வாசகர்களாய் தொடர்ந்து பங்கு ஆற்றி வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் முதலில் அடியேனின் மனம் திறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் ஏங்குவது இந்த ஒரு விசயத்திற்காகவும்தான்.

பாராட்டுதல் என்பது ஒருவனை ஊக்கப்படுத்தும் உற்சாகப் பானம்.

ஒரு அளவுக்கு மேல் சென்றால் போதையில் ஆட்டம் கண்டவன் போல, ஆட்டம் காண வைத்து விடும்.

கோடி கோடியாக ஒருவனிடம் பணம் கொட்டிக் கிடந்தாலும் அவனை ஒரு நான்கு பேர் போற்றாவிட்டால் பைத்தியமாகி விடுவான். புகழுக்கு மயங்காதார் இந்த பூவுலகில் இல்லவே இல்லையே!

அதனால்தான் பல ஞானியர்கள் புகழைக் கண்டு அஞ்சி அஞ்சி ஓடி ஒளிகிறார்கள்.

பாராட்டு/ புகழ் என்பது அவ்வளவு பயங்கரமானதும் கூட .... :)

ஒவ்வொருவரும் மற்றவரின் அங்கீகாரத்திற்காக , பாராட்டுதலுக்காக ஏங்கி ஏங்கித் தவித்து இருக்கிறார்கள்.

நாம் என்னதான் பெரியச் செயல்களை சத்தமின்றி சாதித்தாலும் , மற்றவர் நம்மைப் பாராட்டும்போதுதான் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஊக்கமும் கொள்கிறோம், தன்னம்பிக்கை மேலும் பெறுகிறோம்.

நமக்கு கிடைக்கின்ற பாராட்டுதல் உண்மையான பாராட்டாக இருந்தால் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தான்.

பாராட்டு நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் நாம், ஏன் மற்றவர்களுக்கு இந்தப் பாராட்டைக் கொடுக்கவேண்டும் என்று இனி நினைக்கக் கூடாது!. ஒரு இரண்டு நாள் இந்த வழிமுறையை வலுக்கட்டாயம் ஆக்கிக் கொள்ளுங்கள். அப்புறம் என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து நோக்கி அடியேனுக்கு மடல் அனுப்புங்கள் . என்ன ? சரிதானே ...!

எச்சரிக்கை ! அடியேன் முன்பே சொன்னார்போல் நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் பாராட்டு உண்மையானதாக இருக்கவேண்டும். நடிகர் வடிவேல் நகைச்சுவை போல்... ஏட்டைப் பார்த்து கூர்க்கா என்பதும் , ஐ.ஜி யைப் பார்த்து ஏட்டா என்பதும் அடிவாங்கத்தான் வைக்கும். :) அதற்கு யான் பொறுப்பில்லை!

"ஆமாம் மச்சி ! அவனை நாக்கைப் பிடுங்குற மாதிரி நல்லா கேட்டேடா கேள்வி, சூப்பர்டா, நானா இருந்தா வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிருப்பேன் டா " என்ற ரீதியில் நம் பாராட்டு இருக்கும் எனில் பின்னாளில் நாமும் தான் கம்பி எண்ண வேண்டி வரும்.

ஆகவே, நம் மனதில் இருந்து உண்மையான நல்ல விசயங்களைப் (மட்டும்) பாராட்டுவோம்.

புகழ் என்பது தலைக்கு மேல் ஏறி கர்வம் கவ்விக் கொள்ளாத வரைக்கும் தப்பில்லைதான்.

மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது , உண்மையாய் இருந்தால் நன்றி சொல்லுவோம் .அவர்களைத் திருப்பிப் பாராட்டுவோம்.

" சார் உங்கள் உழைப்பை பார்த்து வியக்கிறேன்.. நீங்கள் உண்மையிலேயே சாதனையாளர்தான் " என்ற பாராட்டு உண்மையானதாக இருந்தால். உங்கள் சாதனையை தைரியமாக ஒப்புக் கொள்ளுங்கள். " எல்லாம் தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களால்தான் இந்தச் சாதனைகள் சாதிக்க முடிகிறது " என்று சொல்லிப் பாருங்கள்... அவர் பின்னர் எப்படி மகிழ்ச்சி அடைகின்றார் என்று பாருங்களேன்?.

பணத்தை விட மனிதன் அதிகம் ஏங்குவது புகழுக்காகத்தான்.

இறைவனை நாம் வணங்கும் போது கூட அவன் புகழ் பாடியே வணங்குகிறோம். கொடுப்பது நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இயல்பாகவே நமக்கு அமைந்துவிட்டது. போற்றுதல் என்றுமே போற்றுதலுக்கு உரியதே!

விருப்பு வெறுப்பற்ற பாராட்டு என்பது மேலும் விரும்பத்தக்கது. அதற்கு நம்மை நாம் பழக்க வேண்டும்.

இங்கே எல்லோரும் அறிந்த ஒரு கதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புகழுக்கு மயங்காத அரசன் ஒருவன் அவன் நாட்டில் போட்டி ஒன்று அறிவித்தான். இதுதான் போட்டி " என்னை புகழ்ந்து நான் மகிழும்படி செய்பவர்களுக்கு 5000 தங்க காசுகள் என்று அறிவித்தான்.

ஆனால், போட்டி விதிமுறை சற்றுக் கடுமையாக இருந்தது .. மன்னனை மகிழ்விக்க எந்த முயற்சி வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆனால் , அவர் மகிழவில்லை என்றால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதுதான் போட்டியாளார்களைக் கொஞ்சம் அதிரவைத்தது.

போட்டி ஆரம்பித்தது. நாட்டின் கவிஞர்கள், புலவர்கள் , விகடகவிகள் முதல் நம் கலக்கப்போவது /அசத்தபோவது யாரு சாம்பியன்ஸ் வரை அனைவரும் வரிசையில் நின்றனர்.

மன்னனை மகிழச் செய்ய வந்த போட்டியாளர்கள் பாடினார்கள், ஆடினார்கள், நகைச்சுவையாகப் பேசினார்கள் , பலவாறு புகழ்ந்தார்கள், பல அரியப் பொருட்களைப் பரிசாகக் கொண்டு வந்தார்கள் மன்னனோ வி.ஜி.பி சிரிக்கா மனிதன் போல் உம்மென்று இருந்தான் . வெற்றி பெறமுடியாதவர்களுக்கு சிறைத்தண்டனை , அடி உதை என்று அனைத்தும் :) வழங்கினான். மன்னனின் கொட்டத்தை யாராலும் அடக்க முடியவில்லை. அவ்வூரில் இருந்த ஒரு புத்திசாலி சிறுவனும் மன்னனை மகிழ்ச்சியுற செய்யப் போகிறேன் என்று களத்தில் குதித்தான்.

போட்டி நடந்த படியே இருந்தது.. மன்னனை மகிழ்விக்க/ புகழ்ந்து பாட பலர் வரிசையில் காத்திருந்தபடி இருந்தனர். நம் சிறுவன் சேலம் மல்கோவா மாம்பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். அரசனை பார்க்கும் முறை இவனுக்கு வந்தது. அரசன் ஆச்சரியப்பட்டு போனான்.. "என்னடா ..இந்தப் பொடிப் பயல் என்னை மகிழ்விக்கப் போகிறானா? " என்று மனதில் ஏளனமாக நினைத்துக் கொண்டு ..".ம் ம் சொல் " என்று சிறுவனை நோக்கினார்.

சிறுவன் அரசனுக்கு வணக்கம் தெரிவித்து, " அரசே! உலகிலேயே மிகவும் விலைமதிக்க முடியாத மாம்பழத்தை நான் தங்களுக்காக எடுத்து வந்து இருக்கிறேன் " என்றான்.

அதற்கு அரசன், "ஏய் பொடியனே ...எல்லாவகை மாம்பழமும் எனக்குத் தெரியும் .. ".என்று கர்ஜித்து ..... தன் காவலாளிகளை அழைத்து..." இவன் சிறுவன் என்பதால் இவனுக்கு பெரிய தண்டனை கொடுக்க வேண்டாம்... அவன் கொண்டு வந்த மாம்பழத்தை அவன் வாயில் முழுமையாக திணித்து அவனை உண்ண வையுங்கள் " என்று கட்டளை இட்டான். சிறுவனை நினைத்து அவை பரிதாபப் பட்டது.

ஆனால்..நம் சிறுவனோ ... விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் :)

அவையோடு அரசனும் சேர்ந்து ஆச்சரியப்பட்டான்..."ஏய்ப் பொடியனே ...தண்டனை என்னவென்று தெரிந்துமா சிரிக்கிறாய்...உன்னை என்னச் செய்கிறேன் பார்..." என்றபடி தன் இருக்கை விட்டு எழுவும்... சிறுவன் அரசனை நோக்கி,

"மன்னாதி மன்னனே! அடியேனை மன்னிக்கவும். இந்த வரிசையில் தங்களைக் காண காத்திருக்கிறாரே அந்த முதியவர் , அவர் நிலைமையை யோசித்துப் பார்த்த போதுதான் அடக்கமுடியாத சிரிப்பு வந்து விட்டது என்றான்.

அரசனுக்கு சிறுவனின் செய்கை மிக்க ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. " என்னவென்று தெளிவாக சொல்" என்று அரசன் கேட்டான்.

" மன்னா! நான் கொண்டு வந்ததோ ஒரே ஒரு மாம்பழம்..அதை அப்படியே சாப்பிடும் படி தண்டனை கொடுத்து விட்டீர்கள்.. ஆனால் அந்த பல் இல்லாதப் பெரியவரோ மிகப்பெரிய பலாப் பழத்துடன் உங்களைக் காண வந்திருக்கிறார்.. அவருக்கு இதே மாதிரி தண்டனை கொடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன் ...என்று சொல்லி மீண்டும் சிரிக்க... அரசன் தன்னையும் மறந்து அவையினரோடு சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

சிறுவன், " எங்கள் மன்னா! இந்த உலகில் புகழுக்கு மயங்காத ஒருவன் உண்டு என்றால் ..அது நீங்கள் மட்டும்தான் மன்னா!" என்றான்.

அரசனுக்கோ தலைக்கால் புரியவில்லை...தன்னை மகிழ்வித்த அந்தச் சிறுவனை வெகுவாகப் பாராட்டி பரிசுகள் வழங்கினான். பின் தன் தவறையும் உணர்ந்து அப்பாவி மக்களை விடுதலை செய்து மெய்யான புகழையும் பெற்றான்.

ஏற்கனவே தெரிந்த கதைதான் இருந்தாலும் ..இனி நீங்கள் இந்தக் கதையினை வித்தியாசமாகத் தங்கள் வாழ்க்கையோடு அணுகுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஆகவே , அன்பர்களே! பாராட்டுதல் என்ற கலையை நாம் கவனமாகக் கற்றுக் கொள்வோம்.. அடியேன் சொல்லவரும் பாராட்டுதல் என்பது துதிபாடுதல் அல்ல! அதாவது "சோப்பு போடுறது , கம்பி விடுறது , தொப்பி வைக்கிறது, சிங் ஜா போடுறது, நூல் விடுறது" என்றெல்லாம் சொல்வார்களே ... அந்தமாதிரியான விசயம் அல்ல.

பாராட்டுதல் என்பது இயல்பாகவே பாராட்டுவது ஆகும் என்று சொல்லி, நம்பிக்கை நண்பர்களை மீண்டும் பாராட்டி , இன்னொரு இனிமையான பதிவில் உங்களையெல்லாம் சந்திக்கின்றேன் என்று சொல்லி விடைபெறுகின்றேன்!

பாராட்டுங்கள் பாராட்டப்படுவீர்கள்!

தீபாவளி வந்திருச்சு !"அப்பா கம்பி மத்தாப்பு வாங்கித் தாப்பா .." என்று அனுசுயா டிவியில் வரும் தீபாவளி விளம்பரம் பார்த்து கேட்கவும் பட்டாசு வாங்க கிளம்பினேன்.

"வெடிக்கும் வெடிகள் எதுவும் வாங்கக் கூடாது " என்று அனுசுயா அம்மா கண்டிஷன் போட....

"ஏம்ப்பா ..வெடி வெடிக்கலைன்னா அவங்களுக்கு வியாபாரமே நடக்காதுப்பா ... வாங்குற வெடியை அப்போ ஃப்ரிட்ஜ் ல்ல தான் வைக்கணும் அப்போதான் அது வெடிக்காத வெடியாய் இருக்கும்" என்று யான் கலாய்க்க, தேனாம்பேட்டை யில் இருக்கும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் பண்டகசாலையில் ( TUCS ) சிவகாசி விலைக்கே ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் - ன் பட்டாசுக்கள் கிடைக்கும் என்பதால் (கூட்டத்தை தவிர்க்க) இன்றே வாங்கி விடுவோம் என்று கடந்த வெள்ளி இரவு 8.30 மணிக்கு சென்றேன். (TUCS த்தான் நமது நாட்டின் முதல் கூட்டுறவு பண்டக சாலை என்பது ஒரு அரிய செய்தி. கி.பி 1904 முதல் செயல்பட்டு வருகிறது.)

அங்கே கூட்டம் அவ்வளவாக இல்லை .. பட்டாசுக் கடைக்குள் நுழையும் போதே சின்ன பயமும் வந்து விடுகிறது.. சின்ன வயதில் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் புஸ்வானம் வைக்கும் போது அது பூமாரி பொழியாமல் வெடித்து விட்டது. கடவுள் கிருபையால் என் கண்கள் தப்பியது ...கைமட்டும் பெரும் காயத்துக்கு உள்ளானது,...இன்னமும் அந்த தழும்பு இருக்கிறது. கடையில் மொத்த பட்டாசுகளை பார்த்ததும் வெடித்தால் என்னாகும் என்ற தப்பான கற்பனையால் அந்த பயம் வந்திருக்கக் கூடும்.
அது சரி விசயத்திற்கு வாருங்கள்...பழ வியாபாரிகள் பழத்தை அழகாய் அடுக்கி வைப்பது போல் , கரியாகப்போகும் காசுக்கள் கலர் கலரான பொட்டலங்களில் கண்கவர் அழகாய் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

உள்ளே நுழைந்து விலைப்பட்டியல் கேட்டேன்.. A4 அளவில் பக்க புத்தகத்தை கையில் தந்தார்கள்.. படித்து விட்டு திரும்பக் கொடுக்கணுமா? என்று கேட்டேன் ..இல்லை! அது உங்களுக்குதான் ... அதில் என்னவேண்டும் என்று குறித்துவிட்டு தந்தால் விலைபோட்டுத் தருகிறோம் என்றார்கள். வார பத்திரிகைபோல் இருந்த அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்..:)

கிட்டத்தட்ட 900 க்கும் மேற்பட்ட பட்டாசு வகைகள் பட்டியலிடப்பட்டு இருந்தது. நமக்கு தேவையான கம்பி மத்தாப்பு, புஸ்வானம்( Flower Pots), தரைச்சக்கரம் இவற்றை மட்டும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி விட்டு பில் போட்டுக் கேட்டால்..அது கிட்ட தட்ட ரூ 500/- ஐ தாண்டி விட்டது. ' அம்மாடி இவ்வளோ ஆயிட்டா' ..என்று யோசித்தேன். உடனே அருகில் இருந்தவர் .."சார் ..இதையே நீங்க வெளியில வாங்கினீங்கன்னா ரூ 700/- தாண்டிடும் என்று சொல்லவும்...கொஞ்சம் சமாதானம் ஆனேன்.

எனது இடது புறம் , ஒரு பெரியவர் தன் மனைவியுடன் வந்து இருந்தார்...கிட்டதட்ட 65 வயதிருக்கும்.. தன் மணிபர்சை எடுத்து பணத்தை எண்ண ஆரம்பித்தார்... அத்தனையும் ரூ 500/- நோட்டுக்கள்.. எண்ணினார் எண்ணினார் எண்ணிக் கொண்டே இருந்தார்... என் கண்கள் அவர் கையில் வைத்திருந்த பில்லைப் பார்த்தது.. கிட்டதட்ட ரூ 27,000/- க்கான பில்லை கடைக்காரரிடம் நீட்டினார். நான் உறைந்தே போனேன்.. அடேங்கப்பா ..இவ்வளவு பெரிய தொகைக்கு கரிவாங்கிக்கிட்டு போறாரே என்று யோசித்தேன். அவரை கடைக்காரர்கள் விழுந்து விழுந்து கவனித்த விசயம் அதைவிட அலாதியானது.

முகத்தில் எந்தச் சலனமும் காண்பிக்காத அந்த பெரியவர் ...கடைகாரரிடம் 'மொத்தமாக பார்சல் செய்து என் வண்டியில் ஏற்றிவிடுங்கள்' என்று சொன்னார்..

நான் வாங்கியப் பட்டாசுக்கள் அப்படியே என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தது.

யோசித்துப் பார்த்தேன்... என் சின்ன வயதில் அதிகப்பட்சம் நான் வாங்கிவெடித்த பட்டாசுக்களின் மதிப்பு ரூ 100/-. தான் இருக்கும்... அதிலேயும் ...இரண்டு பாக்கெட் லட்சுமி வெடி, ஒரு துக்கடா சரம் மற்றும் ஒருபிஜிலி சரம் வாங்கி ...வீட்டிற்கு முன் வெடித்து...பக்கத்தில் வெடித்த பட்டாசு குப்பைகளை அப்படியே நம் வீட்டின் முன் கொண்டு வந்து நான்தான் நிறைய வெடிகள் வெடித்துள்ளேன் என்று எங்கள் காலனியில் ஒரு வீறுநடை மறுநாள் போடுவதுண்டு. அதிகாலையிலேயே எழுந்து பட்டாசு வெடித்த கையோடு அம்மா பூஜை அறையில் படையல் இட்டு வைத்திருக்கும் பதார்த்தங்களை பதம் பார்த்துவிட்டு, தீபாவளி மறுநாளில் வெடிக்காத , வெடித்த பட்டாசுக்களின் கந்தகப் பொடியை ஒரு காகிதத்தில் தட்டி அதை பற்ற வைத்தது (மிகவும் ஆபத்தான விளையாட்டு இது, மின்னல் போன்று அது மின்னும் அழகு மிக அழகாய் இருக்கும் ) என்றெல்லாம் .. அந்த நாட்களை நினைத்தால் அடக்க முடியாத சிரிப்பு வருகிறது. இந்த அனுபவம் கண்டிப்பாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

பட்டாசு வெடித்தல் சரியா ? தவறா என்ற பிரச்சனை எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். இந்தப் பிரச்சசனைக்கு எந்த நாட்டாமையாலும் தீர்ப்பு சொல்ல முடியாது , பெரிய பட்டிமன்றமே நடத்திடலாம் என்ற சிந்தனையோடு வீடு வந்து சேர்ந்தேன். தூங்கியபடி இருந்த அனுசுயா என் சத்தம்கேட்டு துள்ளி எழுந்து உற்சாகத்தோடு அப்போதே கம்பி மத்தாப்பை பற்ற வைக்க ஆயத்தம் ஆனாள் [ இன்னும் ரூ 500க்கு நான் பட்ஜெட் போடனும் போலும் :-( ]

அவள் கம்பி மத்தாப்பு போல் ஆனாள்! நான் புஸ்வானம் போல் ஆனேன்! :)

அளவுக்கு மீறினால் அமுதமே நஞ்சாகும் போது ...பட்டாசு மட்டும் எம்மாத்திரம்.?

ஆகவே! பக்குவமா பட்டாசு வாங்குங்க...பத்திரமா வெடியுங்கள்...!

எங்க வீட்டுக்குத் தீபாவளி வந்திருச்சு .. அப்போ நீங்க.....


"பாவமாக முகத்தை வைத்திருந்த
பையன் சிவகாசியைக் கேட்டேன்,
தம்பி பட்டாசு வெடிக்கலையா? என்று...
'இல்லை அண்ணா!
அதை செய்வது மட்டுமே என் வேலை' என்றான்
தன் கந்தகக் கண்களில் கண்ணீரோடு!"

- ராமா, நம்பிக்கை குழுமம்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

எங்கள் இறைவா,
எப்படிப் பிடித்தாலும்
மேல் நோக்கியே எரியும்
தீபம் போல்
நின் நோக்கியே இருக்கும்படி
எம்மைச் செய்வாய்!