PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, September 28, 2005

"கனவைத் தேர்ந்தெடுங்கள்"

ஜெயமே ஜெயம் - 6
"கனவைத் தேர்ந்தெடுங்கள்" தொடர்ச்சி...
நள்ளிரவு 12.30 அல்லது 2.00 மணி வரை கண்ணை கொட்ட கொட்ட விழித்து வைத்துக்கொண்டு Evil Dead போன்ற படங்களையோ, குற்றம், க்ரைம் டைரி, மிட்நைட் மசாலா போன்ற டி.வி நிகழ்ச்சிகளையோ பார்த்தபின் உறங்கச் செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மறுநாள் எழுகையில் எரிச்சலோடுதான் எழுவீர்கள்..கண்ணாடியில் சென்று உங்கள் முகத்தைப் பார்த்தால்.. கோரமாக இருக்கும். யாரும் ஏதும் கேட்டால் "வள்" என்று விழுவீர்கள். அதே மனத்தோடு அலுவலகம் வரும் நீங்கள் mood- டே சரியில்லை என்பீர்கள். உங்களது உற்சாகம் எங்கோ சென்றிருக்கும்.

அதேசமயம் படுக்கச் செல்லும் முன் குலுங்க குலுங்கச் சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து விட்டோ . அல்லது நம்பிக்கைத் தரும் விசயங்களைப் படித்துவிட்டோ உறங்கச் சென்றீர்களேயானால்.. மறுநாள் உற்சாகமாய் சிரித்த முகத்துடன் எழுவீர்கள். அப்படித்தானே?

அதேபோல்..காலையில் எழும்போது நம்மில் பலர் நம்மையே அறியாது "மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல.." என்று ஏதேனும் ஒரு திரைப்படப் பாடலை (பாத்ரூம் பாடகர்கள்) முணு முணுப்பது உண்டு. காலையில் நாம் எந்தப் பாடலை ஆரம்பிக்கின்றோமோ.. அந்தப் பாடலை அன்று முழுவதும் நம்மையே அறியாது பாடிக்கொண்டு இருப்போம். இதை நீங்கள் கண்டிப்பாக அனுபவித்திருப்பீர்கள்.

மேற்சொன்ன பத்திகளின் சாராம்சம் உணர்த்துவது என்ன? . அதிகாலை நேரமும், (இரவில்) படுக்கச்செல்லும் நேரமும் நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் நான் சொல்ல வந்த உண்மை.

இந்த முக்கிய நேரங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், ஜெயம் என்பது நமக்கு கிட்டும் கனியே.

எனவே, உறங்கச் செல்லும்முன் ஒன்று செய்வோம்.. இறைவனை வணங்கி விட்டு அல்லது தன்னம்பிக்கை தரும் விசயங்களை படித்து விட்டு உங்கள் உடலை தளர்ந்த நிலையில் படுக்கையில் கிடத்துங்கள். உயரமான தலையணையை உபயோகிக்காதீர்கள். தலையணை இல்லாமல் படுப்பதே சிறந்தது எனினும் நாம் உயரம் குறைவான தலையணையை- யாவது உபயோகிக்க முடியும். கண்களை அழுத்தி மூட வேண்டாம். அன்று நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களை மனதில் அசை போடுங்கள். எது உங்களுக்கு மிக்க மகிச்சியை அளிக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இப்போது உங்கள் எண்ணங்களை உங்களது இலட்சியம் நோக்கி திருப்புங்கள்.

உங்கள் வாழ்க்கை எப்படி திகழ வேண்டும்? உங்கள் இலக்கு என்ன? என்பதை மனைதில் அசைபோடுங்கள். நீங்கள் உங்கள் இலட்சியத்தை அடைந்ததாகவே கற்பனை செய்து, ஒரு வெற்றி வீரனைப்போல் உங்கள் நினைவில் பவனி வாருங்கள்.

அதேபோல் படுக்கையில் இருந்து எழும்முன் "இந்த நாள் இனிய நாளாக அமையும், இந்தநாள் முழுதும் நான் உற்சாகமாக இருக்கப்போகிறேன்." என்று மனதில் நினைத்து அல்லது வாய்விட்டுச் சொல்லி எழுங்கள்.

உங்கள் ஆழ்மனம் உங்களது நம்பிக்கைச் சிந்தனைகளை வசீகரிக்க ஆரம்பிக்கும். விடியும் காலை உங்களுக்கு வெற்றியின் காலையாக இருக்கும். இதை இன்று பயிற்சி செய்துவிட்டு உங்கள் அனுபவத்தை எனக்கு பின்னூட்டம் இடுங்கள்.

உங்கள் கனவுகள் உங்கள் நினைவுகளைவிட அதிகமாக அதிகமாக உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதற்காக "வேலை செய்யாமல் இரு " என்பது அர்த்தம் அல்ல.

உங்கள் கனவு உங்களை செயல்பட வைக்கும். உங்கள் இலட்சியத்தை அடைவதற்கான வாய்ப்புகளை உங்கள் முன் கொண்டு வரும்.

கீதையில் "எதை நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறாய்" என்ற வாக்கியம் போல். நாம் நினைத்ததை அடைய முடியும்.

நினைத்தை அடைய வழி இங்கு இருக்கும் போது..ஏன் இன்னும் நாம் நினைப்பதை தள்ளிப் போட வேண்டும்?

உலகில் வெற்றி பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்பார்த்தால். அவர்கள் தங்கள் வெற்றியைக் ,கனவில் கற்பனை செய்ததாகவே கூறுவர்.

ஒலிம்பிக்கில் ஓடும் வீரர்களுக்கு மேலைநாடுகளில் கனவு காண்பதற்கு என்றே தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சச்சின் டெண்டுல்கர் தனது பேட்டி ஒன்றில் ,"நான் களம் இறங்கும் நாளின் காலையில் , அந்த மைதானத்தில் நன்கு விளையாடுவதுபோல், எண்ணற்ற ரன்களை குவிப்பதுபோல் மனதில் நினைத்துக் கொள்வேன் " என்றார். அதுதான் அவரை கிரிக்கெட்டில் ஒரு சாதனைச் சிகரமாக திகழ வைக்கிறது.

பல உயரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் அடிப்படையாக இருந்தது இந்த கனவுதான். கனவினை காணாதவன் நினைவு இழந்தவன்.

நமது குடியரசுத் தலைவர் மாண்புமிகு அப்துல்கலாம் மாணவ சமுதாயத்திற்கு திரும்பத் திரும்ப வலியுறுத்துவது " உயரிய கனவு காணுங்கள்" என்பதே ஆகும் .

எனது அருமை அன்பர்களே, அதையே இங்கே நான் வலியுறுத்த விரும்புகிறேன். கனவைத் தேர்ந்தெடுங்கள்! உங்கள் கனவு உயரிய நோக்கம் கொண்டதாய் இருக்கும் வகையில் தேர்ந்தெடுங்கள்!

உங்கள் எடை உங்கள் கையில்

நமது உடல் ஆரோக்கியத்திற்கு நமது எடையை மாதம் ஒருமுறையாவது கணக்கிடவேண்டும். இங்கே ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ற எடையானது கொடுக்கப் பட்டுள்ளது. இந்த அளவிற்குள் உங்கள் எடை இருந்தால் நீங்கள் மருத்துவரை பார்க்கவேண்டியிருக்காது . அப்படியில்லாமல் அதிகமாகவோ குறைவாகவோ உங்கள் எடை இருப்பின் முயற்சி செய்து இந்த அளவிற்குள் கொண்டு வந்து விடுங்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

Image hosted by Photobucket.com
(நன்றி: டாக்டர் சுந்தர்பரத்வாஜ், நம்பிக்கை குழுமம்)

Wednesday, September 21, 2005

கனவைத் தேர்ந்தெடுங்கள்!

ஜெயமே ஜெயம் - 5
Image hosted by Photobucket.com
முதலில் நாம் கனாக் காண கற்றுக்கொள்ள வேண்டும்!

'என்னடா இது? வேலை வெட்டி இல்லாம சும்மா உக்காந்துகிட்டு கனவு காணச் சொல்றேன்னு' என்னை தப்பா நினைக்காதீங்க. வேலையோட வெட்டியோட கனவும் காணுங்கள்.

இந்தத் தொடரின் முதல் பகுதியில் சொன்னது போல், வெற்றித் தேவதையை காதலிப்போர்க்கு கனவு காண கசக்கவா செய்யும். கனவு இல்லாமல் காதலா?

என்ன நண்பர்களே! நான் சொல்ற கனவு வெற்றிக்கான கனவு..அதை விட்டு விட்டு முழுசா போர்த்தி படுத்துக்கிட்டு கண்ட கண்ட :)) கனவு கண்டீர்கள் என்றால் அதுக்கு நான் பொறுப்பில்லை! :(

இவ்வளவு சொல்றீயே! கனவுன்னா இன்னா? அதை முதல்ல சொல்லுன்னு சொல்றீங்களா!

ம்.ம்.. நம்ம வலைப்பதிவு நண்பர் சூப்பர்சுப்ரா கனவு பற்றி வித்தியாசமான உதாரணத்தோட தன் வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்தார். நான் சொல்லப் போவது அதில் இருந்தும் கொஞ்சம் மாறுபட்டது.

நமது ஐம்புலங்களும், சிந்தனையும் ஓய்வு எடுக்கும் நிலையைத்தான் தூக்கம் என்கின்றோம். Sound Sleep என்பார்களே, அப்படிபட்ட ஒரு அமைதியான தூக்கம். இந்நிலையில் கனவு என்பது ஏற்படாது.. (...ஹலோ நம்மில் பலர்க்கு SOUND SLEEP தான் இருக்கிறது :)) குறட்டை தூக்கம்)


ஐம்புலங்களில் ஏதாவது ஒன்று அல்லது பலது அல்லது சிந்தனை - இவை ஓய்வின்றி இருப்பின் எண்ண அலைகள், சலனத்தால் கனவைத் தோற்று விக்கின்றது.

கனவு காண்பவரின் கண்கள் மூடி இருந்தாலும், அவரது கருவிழி அசைவதை (Rapid Eye Movement) , இமை மூடி இருப்பினும் நம்மால் வெளியில் இருந்து பார்க்க முடியும் என்பதை மருத்துவர்கள் கண்டு அறிந்துள்ளனர்.

சிலர் கனவில் புலம்புவதும், கனவினால் அதிர்ச்சி அடைந்து திடீரென்று வீட்டில் உள்ள அனைவரும் அஞ்சும் வண்ணம் அலற வைப்பதும் நான் முன்பு சொன்னது போன்ற ஐம்புலங்களின் ஓய்வற்ற தன்மையைக் குறிக்கும.
இன்னும் விளக்கமாகப் பார்த்தால்.. சிந்தனைக்கும் புலன்களுக்கும் தொடர்புண்டு. இதை இப்படியும் சொல்லலாம் ..'சிந்தனைக்கும் செயல்களுக்கும் மிக்க தொடர்பு உண்டு'. சிந்தனையின் வடிவம்தானே செயல்.

நம் மனமானது எதையும் காட்சிகளாக அல்லது படங்களாகத்தான் பதிவு செய்கிறது. மனோவேகம் என்பார்களே..ஒரு நொடிக்குள் இந்த உலகை நம் சிந்தனையோடு சுத்தி வர முடிகிறது. சென்னையில் இருப்பவன் சிங்கபூரை நினைக்க முடிகிறது..அமரிக்காவில் இருப்பவன் தன் அத்திப்பட்டி காதலியை நினைக்க முடிகிறது.

இந்த சிந்தனையின் வேகம், ஒலி மற்றும் ஒளி இவற்றின் வேகத்தினைக் காட்டிலும் பலகோடி மடங்கு அதிகம்..இதை அளவிடவும் முடியாது. எனவேதான், இராமாயணத்தில் அனுமனைச் சொல்லும் போது மனோவேகத்தில் செல்பவன் என்று சொல்கிறார்கள்.. அதாவது நினைத்த மாத்திரத்தில் நினைத்தை இடம் செல்லுதல் என்பது ஆகும்..

ஆக, கனவு என்பது கண்ணை மூடிக்கொண்டு பார்க்கும் ஒரு சினிமா என்று சொல்லலாம். சிலருக்கு தான் கண்ட கனவு மறுநாள் காலையிலும் நினைவில் இருக்கும்..சிலருக்கு மறந்து போகும்..அது அவர்களின் ஞாபகச் சக்தியைப் பொருத்தது. பகல் தூக்கத்திலும் சிலர் கனவு காண்பது உண்டு. பிஞ்சு குழந்தைகள் கூட கனவு காண்கின்றது என்பதை மருத்துவ அறிவியல் கூறுகிறது.

எனவே, கனவு என்பது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் வரக் கூடியது. சரி ..சரி..கனவை ஆராய்ந்தது போதும்! நான் சொல்ல வந்த கனவு எப்படிப் பட்டது என்பதை பார்ப்போமா!

கனவை நாம் எப்படி தேர்ந்து எடுக்க முடியும்? அது நம்மை அறியாமல் அல்லவா வரும். நிம்மதியான தூக்கம் அல்லவா உடலுக்கு நல்லது! இப்படி கனவே கண்டு கொண்டு இருந்தால் என்ன ஆவது? என்றெல்லாம் கேள்விகள் இங்கே எழக்கூடும்!கனவு தாமாக வருவதும் உண்டு. நாமாக வருவித்துக் கொள்வதும் உண்டு.

ஆங்கிலத்தில் Visuvalization என்று சொல்வார்கள். அதாவது காட்சிகளாக நம் மனத்திரையில் காணல்..நான் சொல்ல வந்த கனவு என்ன என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ..இதைப் பற்றி மேலும் அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

ஜெயம் தொடரும்...

Friday, September 16, 2005

"ஹனூமன் சாலீஸா"

[புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, எமது இறையோன் ஸ்ரீராமதூதனின் புகழ் பாட, துளசிதாஸனின் ஹனூமன் சாலீஸாவை கவிப்படுத்த மனதில் தோன்றியது. தொண்டு செய்வதன் மூலம் சித்தி பெற்ற எம்பெருமான் அனுமனின் அருள் அனைவருக்கும் கிட்ட எந்தன் சற்குரு ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமிகளைப் பணிந்து இதை வழங்குகிறேன்.]
Image hosted by Photobucket.com
0
என் கண்ணாடி மனந்தன்னை
குரு திருவடி தூசியாலே
மெய்ஞ் ஞான நாற்கனிகள்
மிக விளக்கும் ஸ்ரீராமன்
புகழ் விளக்க வேண்டியே
தூய்மை யாக்கிக் கொண்டேன்!
0
புத்தியும் பலமும் தருவாய்
உண்மை ஞானமும் தருவாய்
சிற்றறிவு கொண்டோன் யான்
நின்னையே தியானித் தேன்
துன்பங்கள் தவறுகளி லிருந்து
விடுவிப்பாய் வாயு மைந்தா!
1
நற்குணமும் அறிவும் கொண்டு
கடலாய் பரந்து நின்று
மூவுலகையும் விழித்தெழச் செய்யும்
வானரத் தலைவா ஜெய் ஆஞ்சநேயா!
2
எல்லையற்ற ஆற்றலின்
உறைவிடமே ஸ்ரீராமதூதனே
அஞ்சனா மைந்தன், வாயுபுத்திரன்
எனப்பெயர்கள் பெற்றவனே!
3
ஆற்றல் வாய்ந்த தேகனே
வலிமை கொள் வீரனே
தீயசிந்தனை விரட்டிடும் தீரனே
நற் சிந்தனையின் நண்பனே!
4
ஒளி வீசும் காதணியும்
ஒய்யார ஆடையோடும்
அலை போன்ற கேசத்துடன்
பொன்னாய் மின்னுவோனே!
5
இடியும் கொடியும் - உன்
புஜங்களை அழகு செய்யும்
தோளையோ முஞ்சைப் புல்
பூணூலாய் அழகு செய்யும்!
6
ருத்ர அம்சமே
கேசரி மைந்தா- உன்
தேஜஸையும் வீரமும் கண்டு
உலகமே வணங்கி நிற்கும்.
7
கூரிய புத்தி கொண்டோன்- நற்
குணமும் அறிவும் கொண்டோன்
ஸ்ரீராமன் கட்டளைக்கே
மகிழ்ச்சியாய் காத்திருப்போன்!
8
சீதா ராம லட்சுமணனை
மனதில் இருத்திக் கொண்டோன்
இறை புகழ் கேட்பதில்
எப்போதும் மகிழ்வு கொண்டோன்.
9
நுண்ணிய உருவம் கொண்டு
சீதைமுன் தோன்றி நின்றாய்
திண்ணிய பெரும் ரூபம் கொண்டு
இலங்கையை எரித்து நின்றாய்!
10
விஸ்வ ரூபம் கொண்டு
அரக்கர்களை அழித்து நின்றாய்
ஸ்ரீராம காரியத்தை
ஜெயமாக்கி நின்றாய்!

11
சஞ்சீவினி மூலிகையால்
இலக்குவனை காத்த போது
ஸ்ரீராமன் மிக மகிழ்ந்தே
நின்னைத் தழுவிக் கொண்டான்.
12
உன் பெருமை யுணர்ந்தன்றோ
ஸ்ரீராமன் உனை புகழ்ந்து
பரதன் மேலான பிரியம் கொண்டேன்
எம்பியே என்று சொன்னான்.
13
ஆயிரம் தலைகள் கொண்ட
ஆதிசேஷன் உன் பெருமைகண்டு
புகழ்வதாய் ஸ்ரீராமன் - உனை
அணைத்தபடி கூறி நின்றான்.
14
ஸனகர் எனும் முனிவர்கள்
பிரம்மன் போன்ற தேவர்கள்
நாரதர் கலை மகள்
ஆதி சேஷன் சங்கரன்
15
எமனும் குபேரனும்
எண்திசைக் காவலரும்
கவிஞர் புலவர் எல்லாம்
காகுத்தன் தூதன் உந்தன்
பெருமை விளக்க முயன்று
பேதலித்தே தோல்வி கண்டார்!
16
ஸ்ரீராமன் அறிமுகத்தால்
சுக்ரீவன் தன் அரசை
மீட்டிட்ட உதவிதனை
நீயன்றோ செய்து நின்றாய்!
17
உன்னுடை யோசனையால்
இளையோன் விபீஷணன்
இலங்கையின் வேந்தனானான்
இது உலகம் அறிந்ததன்றோ!
18
ஈரெட்டு ஆயிரம்
மைல்களுக்கு அப்பாலான
சூரியனைக் கனி யென்று
எண்ணி விழுங்கச் சென்றவனே!
19
கணையாழி தனை யுந்தன்
முகவாயில் தாங்கிய படி
கடலையே தாண்டியவனே-உன்
ஆற்றலை என்ன வென்பேன்?
20
எத்துணை கடினமான
செயலாய் இருந்த போதும்
உன்னருள் இருந்தால் போதும்
எளிதாய் ஆகும் அன்றோ!
Image hosted by Photobucket.com
21
ஸ்ரீராம ராஜ்யத்தின்
வாயிற் காவலனே
உன் அனுமதியன்றி அங்கு
யார் நுழைய முடியும்?
22
நின்னை சரண் புகுந்தோர்
இன்பமே பெற்றிடுவர்
என்னை நீ காப்பதனால்
எதற்கு நான் அஞ்சவேண்டும்?
23
முதலோன் உன் ஆற்றல்கண்டு
மூவுலகும் நடு நடுங்கும்
உன்னை அடக்கி யாள
உனையன்றி யாரால் முடியும்?
24
மாவீரன் உன் நாமம்
உச்சரிக்கும் இடந்தனிலே
பேய்கள்களும் பூதங்களும்
வந்திடாமல் அஞ்சியோடும்!
25
இடைவிடாது உன் நாமம்
எப்போதும் ஜெபித்து நின்றால்
எந்நோயும் அகன்று போகும்
எத்துன்பமும் விலகியோடும்1
26
மனம் வாக்கு செயலாலே
மாருதியை ஸ்தோத்தரிப்போன்
இடர் நீங்கி வாழ்ந்திடும்
இன்பந்தனை பெற்றிடுவான்.
27
தவம் புரியும் பக்தர்களின்
வேண்டுதலை நிறைவேற்றும்
ஸ்ரீராமப் பணிகளைச்
செவ்வனே செய்தவனே!
28
பக்தனின் ஆசைகளோடு
அழியாக் கனியான
இறை அநுபூதி கிட்டிடவே
அருள்பவனே ஆஞ்சநேயா!
29
நான்கு யுகங்களிலும்
நானிலம் முழுவதிலும்
உன் நாமம் சிறக்கிறது
உலகமே ஜெபிக்கிறது.
30
நல்லோரை ஞானியரை
என்றும் காப்பவனே,
தீயசக்தி அழிப்பவனே
ஸ்ரீராமப் பிரியோனே!
31
அஷ்டமா சித்திகள்
நவ ரத்தினங்கள்
வேண்டிடும் அடியவர்க்கு
வழங்கிடும் வரமளிக்கும்
சக்தியை அன்னை சீதா
உனக்கன்றோ அருளி நின்றாள்!
32
உன்னிடம் உள்ளதெல்லாம்
ஸ்ரீராம பக்தியன்றோ
என்றும் எப்பொழுதும் நீ
ஸ்ரீராம தாசன் அன்றோ!
33
நின்னை தியானிப்போனுக்கு
ஸ்ரீராம தரிசனம் கிட்டும்- பல
பிறவிகள் தொடர்ந்து வரும்
துன்பங்கள் விட்டு அகலும்!
34
வாழ்வின் இறுதியிலே
ஸ்ரீராமன் உறைவிடத்தை
சிறப்புடனே சென்றடைந்து
ஹரிபக்தனாய் சிறப்படைவான்.
35
எந்தெய்வந் தனிடமும்
மனதை செலுத்தா தவன்
அனுமனை வணங்கி நின்றால்
அனைத்துமே பெற்றிடுவான்!
36
ஸ்ரீராம தூதனின்
திருநாமம் நினைப்பவரின்
துன்பங்கள் துயரங்கள்
தூரமாய் விலகி ஓடும்!
37
ஜெய் ஆஞ்சநேயா!
ஜெய் ஆஞ்சநேயா!
ஜெய் பரமகுருவே!
அருள்வீர் எங்களுக்கே!
38
ஈறைம்பது முறை இதனைப்
பாராயணம் செய்வோன்
தளைகள் நீங்கப் பெற்று
பரமானந்தம் பெறுவான்.
39
ஸ்ரீஹனுமான் சாலீஸாவை
சிந்தையில் தொழுவோன்
சங்கரன் அருள் பெற்று
பரிபூரணம் அடைவான்.
40
என்றென்றும் நம் இதயம்
இறைவன் வாழ் இடமாக
ஸ்ரீராமதூத சேவகன்
துளசிதாஸன் வாழ்த்துகிறான்.
0

துன்பங்கள் போக்குபவன்
மங்கள உருவினன்
தேவர்களின் தலைவன்
வாயுவின் புத்திரன்

ஸ்ரீராம லக்குவ சீதா தேவியோடு
யம் இதயத்தில் நிலவட்டும் ஜெயமே!

ஸ்ரீஹனூமன் சாலீஸாவின் தமிழ்க்கவியாக்கம் முற்றிற்று!


எல்லோரும் அவனருளாலே அவன்தாள் பணிந்து அனைத்து நன்மைகளும் பெற்று வாழ்வாங்கு வாழ என்னிறையை வணங்குகிறேன்..நன்றி!

Tuesday, September 13, 2005

பிரபஞ்ச மனம்

(எனது சொந்த ஊருக்குச் சென்றிருந்ததால் வழமைபோல் ஜெயமே ஜெயம் வெளியாக வில்லை. இருப்பினும் ஆர்வமுடன் மடல் இட்டு விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)
ஜெயமே ஜெயம் - 4
Image hosted by Photobucket.com
சென்ற இதழில் தனிமனம் மற்றும் ஆழ்மனம் பற்றி பார்த்தோம். இன்னும் ஒன்று உள்ளதே பிரபஞ்சமனம்! அது என்ன? எப்படிப்பட்டது?

பிரபஞ்சம் - அண்டம் , இதற்கு எல்லையற்றது என்று கூட பொருள் கொள்ளலாம். நாம் முன்பே பார்த்ததுபோல் தனிமனதின் சிந்தனைகள் மற்றும் ஆழ்மனத்தின் சிந்தனைகள் இவற்றின் அனைத்துமாய் இருப்பதுதான் இந்த பிரபஞ்சமனம். இது எல்லையற்றது, மாபெரும் சக்தி, கடவுள் என்று நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் இதற்குச் சூட்டலாம்.

இதனை விளக்க சில உதாரணங்களோடு பார்ப்போம்.

"சுந்தர் இப்போதுதான் உன்னைப்பற்றி நினைச்சிட்டு இருந்தேன்..அதுக்குள்ள உன்கிட்ட இருந்து போன் வந்திடுச்சி"

"சிவா! உன்னைப் பார்த்து நாளாகுதேன்னு நினைச்சேன்..நினைச்சு ஒரு நிமிசம் கூட ஆகலை..அதுக்குள்ள நேரிலேயே வந்திட்டீயே! உனக்கு ஆயுசு 100 -ப்பா!"

இப்படிப்பட்ட சம்பவங்கள் நமக்கு நிகழாமல் இருக்க சாத்தியமே இல்லை.
அதேசமயம்....திடீரென ஏற்படும் தும்மல் , புரையேறுதல் போன்ற சம்பவங்களின் போது நம் தாத்தாவோ பாட்டியோ "யாரோ உன்னை நினைக்கிறாங்கப்பா" என்று சொல்லக் கேட்டிருப்போம். இதில் உள்ள நம்பகத் தன்மையை நான் இப்போது ஆராய விரும்பவில்லை எனினும்..

முந்தையப் பாராவில் குறிப்பிட்டது போன்றதான சம்பவங்களை நிச்சயம் மறுக்கமுடியாது. அப்படியானால், இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி நமக்கு எழுவது இயற்கையே! இது கிட்டத்தட்ட "டெலிபதி" போன்றதுதான்.

இதற்கு இன்னொரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். .

உலகில் அனைத்து ஜீவராசிகளின் எண்ணங்களும் இந்த SPACE அல்லது அண்டவெளியில் பதிவு செய்யப்படுகிறது அல்லது பரவிக் கிடக்கிறது என்று கொள்வோம்.

நீங்கள் தற்போது நினைப்பது எனக்குத் தெரியாதுதான். அதே சமயம், நான் நினைத்துக் கொண்டு இருப்பதும் உங்களுக்குத் தெரியாது. தெரிய ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பதை சமீபத்தில் வந்த நடிகர் விவேக் ஜோக்கின் மூலம் சிரித்துணர்ந்திருப்போம்.

ஆனால் ஒன்று மட்டும் மிக உண்மை. அனைவரது எண்ணங்களும் இந்த பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படுகின்றது. சேமித்து வைத்துள்ள பாடல் கேசட்களில் இருந்து வேண்டிய பாடலை வேண்டிய நேரத்தில் கேட்பதுபோல் நமது கடந்த/முற்கால/எதிர்கால சிந்தனைகளை இதில் இருந்து எடுத்துக்கொள்ளும் சக்தி நமக்கு இருக்குமாயின் நாம் மக்கள் மத்தியில் தெய்வம் போல் ஆகிவிடுவோம்.

ஆக, நான் பிரபஞ்சமனம் என்று சொல்ல வந்தது பிரபஞ்ச சக்தி என்றும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இதை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதுதானே மிக அவசியம். ஒரு எளிய உதாரணம் சொல்லி தொடர்கிறேன்.

நீங்கள் சென்னை வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்க வேண்டுமானால் அதற்கான (Frequency) அலைவரிசையில் வானொலிப்பெட்டியை tune செய்ய வேண்டும். இல்லை, சூரியன் FM -தான் கேட்க வேண்டும் என்றால் அதற்கான அலைவரிசைக்கு tune செய்ய வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளும் space ல் இருக்கின்றது. வேண்டிய நிகழ்ச்சியைப் பெற, வேண்டிய சானலுக்கு நாம் tune செய்கிறோம் :( உஹூம் இவ்வளவுதானா என்று கேட்கிறீர்களா?

நம் எண்ணங்களும் இதைப் போன்றதுதான். எண்ணற்ற சிந்தனைகள் இந்த பிரபஞ்சத்தில் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் நேர்மறையான சிந்தனைகளும் (Positive Thoughts), எதிர்மறையான சிந்தனைகளும் (Negative Thoughts) பொதிந்து கிடக்கின்றன. நாம் எப்படிப்பட்ட எண்ணம் கொண்டுள்ளோம். எப்படிப்பட்ட எண்ணத்தை இந்த பிரபஞ்சத்தில் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

சில ஆன்மீகப் பெரியவர்களைச் சந்தித்திருப்பீர்கள். அவர்கள் முன்னே சென்றதும், அவர்களால் நம்மைப் பற்றி எப்படி முழுமையாக சொல்லமுடிகிறது? நம் மனதில் நினைப்பவற்றை எப்படி கணிக்க முடிகிறது? நம் எதிர்காலம் குறித்து துல்லியமாக அவர்களால் எப்படிச் சொல்ல முடிகிறது?

அவர்கள், தங்கள் எண்ண அலைகளை நமது எண்ண அலைகளுக்கு இணையாக tune செய்கிறார்கள். நம்மைப் பற்றி துல்லியமாகக் கணித்து விடுகிறார்கள்.

இது என்ன பிரமாதம் " ராமா! என் முன்னே வந்து நில்லு உன் மூஞ்சப்பார்த்தே உன்னைப்பற்றி சொல்லிருவேன்னு " சொல்றீங்களா!

சார் ஒரு நிமிசம்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மைதான். நான் இங்கே ஜோதிடம் பற்றி விவரிக்க வரவில்லை..

உங்களைப் பொன்ற ஆர்வம் மிக்கவர்களுக்கு நான் சொல்ல வந்தது கண்டிப்பாக புரிஞ்சிருக்கும் என்பது எனது நம்பிக்கை.
Image hosted by Photobucket.com
அன்பர்களே! பிரபஞ்சமனம் பற்றி நாம் இப்போ சிந்திக்க ஆரம்பிச்சிருப்போம். இதன் சக்தியை பயன்படுத்துவது எப்படி? இதற்கும் நம்மின் வெற்றிக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பற்றிய மிக முக்கிய விளக்கங்களை அடுத்த பதிவில் சொல்ல இருக்கின்றேன்...


ஜெயம் வளரும்...